தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்; ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு


வேளாண் பட்ஜெட் அம்சங்கள்
டெல்டா விவசாயிகள் கருத்து
பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன சொல்கிறார்? 
வேளாண் நிபுணர் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் 20ம் தேதி தாக்கல் செய்தார். இது குறித்து தமிழ் ஊடகங்களில் வெளியாகி உள்ள கருத்துகளின் தொகுப்பை இங்கே காணலாம். 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளம் சுருக்கமாக வெளியிட்டுள்ளது. 

2482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்.

கோயம்புத்தூரில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக ஆய்வகம் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு.

பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி ஒதுக்கீடு.

உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10.500 கோடி ஒதுக்கீடு.

வேளாண் பட்ஜெட் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கீடு .

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு.

'வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

'துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்' அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு.

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.

'மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்' மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.

நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.

டெல்டா விவசாயிகள் என்ன நினைக்கின்றனர்? 

தமிழ்நாட்டின் உணவு ஆதாரமான நெல்விளையும் பூமியான டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் அரசின் வேளாண்மை பட்ஜெட் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை தினமணி நாளிதழ் இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது. 

தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கருத்துத் தெரிவித்துள்ள  கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் தமிழ்செல்வன், வேளாண்நிதி நிலை அறிக்கையில், எண்ணெய் வித்துத் சாகுபடிக்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு; சந்தனமரம், செம்மரக் கன்றுகள் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியது என்று கூறியுள்ளார். 

ஆனால், இந்த பட்ஜெட்  சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பயனளிக்காது. தேங்காய் எண்ணெய் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு , நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

நெல் உலர்த்திகள் அதிகம் தேவை 

பிபிசி தமிழ் இணையதளத்தில் வேளாண்பட்ஜெட் குறித்து  வேளாண் பொருளாதார நிபுணரான ஆர். கோபிநாத் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். 

“தமிழ்நாட்டில் விவசாய இயந்திரங்கள், ஆய்வகங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்றும் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

மண்வளத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வகம் ஒன்று மயிலாடுதுறையில் அமைக்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மண் வள ஆய்வகங்களைப் பொருத்தவரை அவை பெரும் எண்ணிக்கையில் தேவைப்படுகின்றன. என்னதான் நடமாடும் ஆய்வகங்கள் இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.

இந்த நடமாடும் ஆய்வகங்களில் செய்யப்படும் ஆய்வுகளில் நுண்ணூட்டச் சத்துகள் குறித்து அறிய முடிவதில்லை. விவசாயம் செய்யக்கூடிய பகுதிகளில் ஐம்பது கிலோ மீட்டருக்கு ஒன்று என மண் வள ஆய்வகங்களை அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்-ஊடகங்கள் சொல்வது என்ன?

மேலும், தமிழ்நாட்டில் 35 சதவீத்திற்கு மேல் நெல்தான் பயிரிடப்படுகிறது. இந்த நெல்லை விவசாயிகள் விற்கும்போது, ஈரப்பதம் குறித்த பிரச்னை வருகிறது. இதை எதிர்கொள்ள 'ட்ரையர்' எனப்படும் உலர்த்திகள் தேவைப்படுகின்றன. எல்லோருமே இதனைக் கேட்கிறார்கள். இப்போது அரசு 10 உலர்த்திகளை வாங்கப்போவதாகச் சொல்கிறது. பத்து உலர்த்திகள் போதாது, நிறைய வாங்க வேண்டும். 

இயற்கைப் பேரிடர்கள் வரும்போது இழப்பீடு வழங்குவது என்பது பெரும் சிக்கலான விஷயமாக இருப்பதால், அதனை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். 

கடந்த ஆண்டு சில மாவட்டங்களில் மழை பெய்து குறுவை சாகுபடி பயிர்கள் சேதமடைந்த போது, அரசு நிவாரணம் அளித்தது. அப்படி அரசு நிவாரணம் அளிக்கும்போது அதில் பல பிரச்னைகள் வருகின்றன. இந்த நிவாரணத்தை பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், அந்த இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனமே கொடுத்துவிடும். அதனைச் செய்ய வேண்டும்”

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் என்ன சொல்கிறார்?

தமிழ்நாடு அரசு வேளாண் நிதி நிலை அறிக்கை வெளியிடுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். தினகரன் நாளிதழ் இணையதளத்தில் ராமதாஸ் அறிக்கை வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தமிழக உழவர்களின் எதிர்பார்ப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. உழவர்களுக்கு ஏற்றம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் வேளாண் நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டது; ஆனால், ஏற்றத்திற்கு மாற்றாக ஏமாற்றத்தை மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கை வழங்கியுள்ளது.

2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் முதன்மையாக எதிர்பார்த்தது வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தான். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை. ஆனால், ஒன்றிய அரசு வழங்கும் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.100, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.75 வீதம் ஊக்கத்தொகை வழங்குவதுதன் தமிழக அரசு அதன் கடமையை முடித்துக் கொள்கிறது. அதனால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு அதிக அளவாக ரூ.2303 மட்டுமே கிடைக்கிறது. இது போதாது,” என்று கூறப்பட்டுள்ளது. 

#TNAgriBudget2024 #tnagribudgetreaction #tngovernment 

ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்




 


Comments


View More

Leave a Comments