தர்ப்பை, துத்தியின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்


கட்டுரையின் முக்கிய அம்சங்கள்

தர்ப்பை குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும்

தர்ப்பையை தண்ணீர் போட்டு குடித்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள் சரியாகும்

துத்தி பெண்கள் உடல்நலனுக்கு ஏற்றது

தர்ப்பை அல்லது தருப்பை. புல் வகையைச் சேர்ந்த இந்த தாவரத்துக்கு தெற்பை, குமுதம், கூச்சம், குசம், குசைப்புல், தாப், விசுவாமித்திரம், நாக்கறுத்தாள் புல் என பல்வேறு பெயர்கள் உண்டு. ஆங்கிலத்தில் ஆல்பா புல் (Halfa Grass), உப்பு கோரைப்புல் (Salt reed grass) என்ற பெயர்களும் உண்டு.

தொன்மையான தாவரமான இது வளரும் இடங்களில் மிதமான குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும். மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி மண்பானையில் போட்டு வைத்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின்போது நாம் உண்ணும் உணவுப்பொருள்களிலும், குடிக்கும் நீரிலும் தர்ப்பைப் புல்லை சிறிதளவு போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 

தர்ப்பை பல்வேறு உடல்நலன்களைக் கொண்டது

 

உண்மையில் குளிர்ச்சியை ஊட்டக்கூடியது. தர்ப்பைப் புல்லின் காற்று படும் இடங்களில் தொற்றுநோய் எதுவும் ஏற்படாது என்பதால் கிராமங்களில் வீட்டு வாசலில் கொத்து கொத்தாக கட்டி தொங்கவிடுவார்கள்.இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உள்ள இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டுக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறமாகவும், எரிச்சலுடனும் சிறுநீர் கழிப்பவர்கள் கைப்பிடி அளவு தர்ப்பைப் புல்லை நீரில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்துக் குடித்தால் பிரச்னை சரியாகும். 

 

சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோளாறுகள், குடல்புண், வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தர்ப்பைப் புல்லைக் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் பிரச்னைகள் சரியாகும். சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த நீர் நல்ல பலன் தரும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். அக்கி போன்ற தோல் நோய்களின்போது தர்ப்பைப் புல் ஊறிய அல்லது கொதிக்கவைத்த நீரை  ஆறவைத்துக் குடிப்பது அல்லது பாதித்த பகுதியில் ஊற்றுவதன்மூலம் பிரச்னை சரியாகும்.

வருடக்கணக்கில் வைத்து பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் தர்ப்பைப் புற்களைப் போட்டு வைத்தால் அவை கெட்டுப்போகாது. கூடவே அவற்றின் சுவையை அதிகரிப்பதுடன் மணத்தையும் அதிகரிக்கும்.

   துத்தி

துத்தி செடி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். எலிச்செவித்துத்தி அல்லது எலிக்காது துத்தி, ஐவிராவி அல்லது ஐயிதழ் துத்தி, ஒட்டு துத்தி, கண்டு துத்தி, காட்டு துத்தி, கொடி துத்தி, சிறு துத்தி அல்லது செந்துத்தி, நாம துத்தி, நில துத்தி அல்லது வயற்றுத்துத்தி, பணியாரத் துத்தி, பெருந்துத்தி, பொட்டகத்துத்தி அல்லது இரட்டகத்துத்தி என்ற பல பிரிவுகள் உள்ளன.

துத்தி பெண்கள் உடல் நலனுக்கு ஏற்றது

துத்தியின் இலை, பூ, விதை, வேர், பட்டை என அனைத்தும் பயன்படுகிறது. பெண் வயதுக்கு வந்த ஒன்பதாம் நாள் துத்தி இலை 100 கிராம், மஞ்சள் 10 கிராம், சந்தனம் 10 கிராம் சேர்த்து அரைத்து முகம்,கை, கால் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து மஞ்சள் தண்ணீரால் தலைக்கு மேல் சல்லடை வைத்து குளிப்பாட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்களின் கருப்பை, நீர்ப்பை, மலத்துவாரம் மட்டுமன்றி தோலிலும் ஏற்படும் அலர்ஜி சரியாகும்.

-எம்.மரியபெல்சின்

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#HalfaGrass #SaltReedGrass  #Tharbai  #ThuthiKerai
 

Comments


View More

Leave a Comments