நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள் சீத்தா பழம்...



கட்டுரையின் சிறப்பம்சங்கள் 

முள் சீத்தாபழம் முள் ஆத்தன்காய் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது 

முள் சீத்தாபழம், இலை ஆகியவற்றில் எண்ணற்ற சத்துகள் உள்ளன 

நோய் எதிர்ப்பு சக்தி திறன் நிறைந்தது

முள் சீத்தாபழத்தைத் தரும் Graviola எனும் மரம்  அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், வளர்கின்றன.  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இலங்கை மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்ச்சுககல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், சர்பத், மில்க் ஷேக் தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். 

மெக்சிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் "முள் ஆத்தன்காய்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. (இலங்கையில், காட்டு ஆத்தா, முள் ஆத்தன்காய் என்றும் (சில மாவட்டங்களில் அன்னமுன்னா பழம் அல்லது அண்ணவண்ணா பழம் என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்). ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது.


இந்த பழம் கேரளாவில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் இந்த மரம் வளர்க்கப்படுகிறது. கேரளாவை ஒட்டி உள்ள செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் முள்சீத்தா பழ மரம் வளர்க்கப்படுகிறது. 

சத்துகள் நிறைந்த முள் சீத்தாபழம்

முள் சீத்தாபழத்தில் இருக்கும் சத்துகள் 

பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. நீர் சத்து, புரதம், தாது உப்புகள், நார்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இரும்பு சத்து போன்றவை உள்ளன. 

முள் சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முள் சீத்தாபழம், இலை, பூ எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். 

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கும் முள் சீத்தாபழம் நல்லது. கல்லீரல், மண்ணீரல், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு, குடல் புண், ஈரல் பாதிப்பு போன்றவற்றுக்கும் முள் சீத்தாபழம் சிறந்தது.

முள் சீத்தாபழம்

சீத்தாபழத்தைப் பழத்தைப் போலவே அதன் இலைகளும் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை கஷாயமாக தயாரித்து குடிக்கலாம். தேநீராகவும் பயன்படுத்தலாம். இலையின் சாறானது மன அழுத்தத்தைக் குறைக்கும். தூக்கமின்மை போன்ற பிரச்னைகளை சரி செய்யும். வாதம், கீழ்வாத த்துக்கு மருந்தாகவும் இலைகள் பயன்படுகின்றன. 

புற்றுநோய்க்கு மருந்தா?

சீத்தாபழம் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படும் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சீத்தாபழம் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் கொல்லியாக பயன்படுகிறது என்று சொல்லப்படுகிறது. .இந்தப் பழம், புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் ரசாயன மருந்துகளைவிட 10 ஆயிரம் மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய்க் கொல்லியாக உள்ளதாக  ஆய்வக  ஆராய்ச்சியில் கூறுகின்றனர். 

ஆய்வுகள் சொல்லும் உண்மை என்ன?

முள் சீத்தாபழத்தின் ஆய்வுகள் எல்லாமே ஆய்வகம் அடிப்படை வரைதான் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலங்குகளுக்கு சீத்தாபழ மர இலையின் சாறை கொடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் சில வெற்றிகள் கிடைத்தாலும் கூட அதன் அடிப்படையில் மனிதர்களுக்கு graviola (முள் சீத்தா மரம்) மர இலையின் சாறை கொடுத்தால் புற்று நோய் தடுக்கப்படுமா என ஆய்வுகளில் உறுதி செய்யப்படவில்லை. மனிதர்களுக்கு கொடுக்கலாம் என்றுதான் சொல்கின்றனர். அவசியம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை.  


கிளினிக்கல் டிரையல் எனப்படும் மருத்துவ ரீதியான பரிசோதனை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது புற்றுநோய் உள்ள மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படவில்லை. 

மரத்தின் பழம், இலைகள், பட்டை, விதைகள் மற்றும் வேர்கள் 100 க்கும் மேற்பட்ட அன்னோனேசிய அசிட்டோஜெனின்களைக் கொண்டுள்ளன. இவை கட்டிகள் வளர்ச்சியைத் தடுக்கும் பண்புகளைக் கொண்ட இயற்கை சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் மரத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த சத்துகள் கிடைப்பது மாறுபடலாம். பயிரிடப்படும் மண்ணைப் பொறுத்தும் மாறுபடும். 

மார்பக புற்றுநோய்

சில மார்பக புற்றுநோய் செல்களை சீத்தாபழமரத்தின் சாறுகள் அழிக்கக்கூடும் என்று ஆய்வக ஆய்வுகள் கூறுகின்றன. இலைகளின் சாறு மார்பக புற்றுநோய் செல்களை எதிர்க்கக் கூடியவை என 2016 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இதை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கான "நம்பகமான மருந்து" என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வு மேலும் மதிப்பீடுகளுக்கு உட்படுத்தபட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கணைய புற்றுநோய்

2012 ஆய்வின்போது, கட்டி வளர்ச்சியையும் கணைய புற்றுநோய் உயிரணுக்களின் மெட்டாஸ்டாசிஸையும் தடுப்பதாக கண்டறிந்தனர்.

புரோஸ்டேட் புற்றுநோய்

முள்சீத்தாமரத்தின் இலையின் சாறு புரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடும் என்று சொல்கின்றனர். எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டதில் முள்சீத்தாபழ மரத்தின்  இலை சாறு, எலிகளின் புரோஸ்டேட்டுகளின் அளவைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. 

முள் சீத்தாபழம் மரம்

பெருங்குடல் புற்றுநோய்

2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிராக முள் சீத்தா பழ இலையின் சாற்றைப் பயன்படுத்தியபோது எதிர்ப்பு திறன் கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இலைகளின் எந்த பகுதி இந்த எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கிறது என்பது குறித்து தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

 

முள் சீத்தாபழம் எங்கே கிடைக்கும்?

கோவையில் உள்ள கவுதம் என்பவரின் தோட்டத்தில் முள் சீத்தாபழம் கிடைக்கிறது. முள் சீத்தாபழம், இலை, பூ போன்றவற்றை இலவசமாகவே இவர் வழங்குகின்றார். பழம் மட்டும் சீசனின் போது மட்டும்தான் கிடைக்கும். அதாவது அக்டோபர் முதல் மார்ச் வரை சீசனின்போது அதிக பழங்கள் கிடைக்கும். மற்ற் நாட்களில் குறைவாகவே கிடைக்கும். 

கவுதம் பண்ணைக்கு போகும் முன்பு முன்கூட்டியே வாட்ஸ் ஆப் எண்ணில் அனுமதி பெற்று அவர்கள் குறிப்பிடும் நேரத்துக்கே செல்ல வேண்டும். எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல் அவர் இந்த சேவையைச் செய்து வருகிறார். கவுதம் அவர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்; 90431 33666  முதலில் தகவல் தெரிவித்து அதன் பின்னரே அவர்கள் சொல்லும் நேரத்தில் நேரில் செல்ல வேண்டும் என்பதை தயவு செய்து மறந்து விட வேண்டாம். 

( திரு. மரியபெல்சின் (தொடர்புக்கு;95514 86617  )அளித்த தகவல் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை)

படங்கள்  உதவி நன்றி; திரு.கவுதம் 

#MullSitafruitForImmunity  #GraviolaTreeFruit #GraviolaTreeLeaves

கூகுள் செய்தியில் ஆரோக்கிய சுவை உணவு இணையதளத்தை பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்


Comments


  • S. Ramkumar

    Very proud of you bro, continue your social service

    Jun, 25, 2021
View More

Leave a Comments