நெல்லை இருட்டுக்கடை அல்வா… பாரம்பர்யமாக தொடரும் இனிப்பின் சுவை…
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லை தமிழ், நெல்லையப்பர், தாமிபரணி ஆகிய சிறப்புகளைக் கொண்டு விளங்குவதுடன், என்னலே என்று அழைக்கும் அந்த மண்ணின் மக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த உணவு இணையதளத்தில் எதற்கு இந்த கட்டுரை என்ற சிலர் நினைக்கலாம். அந்த சிலரும் இந்நேரம் கண்டுபிடித்திருப்பார்கள். ஆம். நான் சொல்லவருவது இருட்டக்கடை அல்வாவைப் பற்றித்தான்.
நாம் இந்த கட்டுரையின் முதல் வரியில் குறிப்பிட்ட நெல்லையின் பாரம்பர்யத்தில் இருட்டைக்கடை அல்வாவும் இணைந்திருப்பதை யாரும் மறந்து விட முடியாது. பாரம்பர்ய இனிப்பு, சுவை இரண்டையும் இன்றளவும் தக்க வைத்திக்கும் இருட்டுக்கடை அல்வா கடையானது நெல்லையப்பர் கோயிலை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்த கடையின் வரலாறு நூற்றாண்டை கடந்த ஒன்று என்று சொல்கின்றனர்.
நெல்லையில் 1900 ஆண்டு வாக்கிலேயே ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணா சிங் என்பவர்தான் இருட்டுக்கடை அல்வாவை தொடங்கினார். 1900 காலகட்டத்தில் மின்சாரம் இல்லாத சூழலில் லேசான ஹரிகேன் விளக்கு ஒளியில் இந்த கடை தொடங்கப்பட்டது. பெரும்பாலும் இருட்டில் விற்கப்படுவதால் அதற்கு இருட்டுக்கடைஅல்வா என்று பெயர் வந்திருக்கிறது. பின்னர் அதுவே நிலைத்து விட்டது.
- இதையும் படியுங்கள்; கைப்பக்குவத்தால் சிறந்து விளங்கும் காரைக்குடி பலகாரங்கள்
இந்த கடையை தொடர்ந்து நூறு ஆண்டுகளாக கிருஷ்ணாசிங்கின் குடும்பத்தினர் பரம்பரை, பரம்பரையாக நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா சிங்கைத் தொடர்ந்து அவரது மகன் பிஜிலி சிங் கடையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். இவரது மரணத்துக்கு பிறகு பிஜிலி சிங் மனைவி சுலோசனா பாய் இந்த கடையை நடத்தி வந்தார். பிஜிலி சிங்கின் சகோதர ர் ஹரி சிங் கடையை நடத்தி வந்த நிலையில் கொரோனா தொற்று முதல் அலையின்போது ஹரி சிங் உயிரிழந்தார்.
இருட்டுக்கடை என்ற பெயருக்கு ஏற்றார் போல இன்னும் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் உபயோகித்து கடை நடத்தப்படுகிறது. ஆடர்ம்பரமான பெயர் பலகைகள் ஆடம்பரமான விளம்பரங்கள் போன்றவை எதுவுமே இல்லை. அப்படி அடையாளப்படுத்தினால், இருட்டுக்கடை என்றபெயரும் மாறிப்போக வாய்ப்புகள் உண்டு என்பதால்தானோ என்னவோ எந்த வித அலங்காரமும் இன்றி அதே நேரத்தில் சுவையையும், தரத்தையும் மட்டுமே தொடர்ந்து நிர்வகித்து வருகின்றனர்.
இருட்டுக்கடை அல்வா கடை தினமும் மாலை 5 மணிக்கு மேல் கடை திறக்கப்படுகிறது. கடை திறக்கப்படும் முன்பே ஊழியர்கள் அல்வாவை கால்கிலோ, அரைக்கிலோ, ஒரு கிலோ என்றுபொட்டலம் போட்டு வைத்து விடுவார்கள். கடை திறக்கும் முன்பே காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடை திறந்த தும் பொட்டலங்களை வாங்கிச் செல்வார்கள்.
நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அல்வா தயாரிக்கப்படுகிறது. எனவே ஏழரை மணிக்கெல்லாம் இருட்டுக்கடை அல்வா விற்றுத் தீர்ந்து விடுகிறது. பிறகு மறுநாள்தான் கிடைக்கும்.
ஹரி சிங்கின் பேரன் சூரத் சிங் இப்போது இருட்டுக்கடை அல்வா கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதே பாரம்பர்யமும், சுவையும்கொண்ட அல்வா தொடர்ந்து நெல்லை மக்களின் சுவையில் இடம் பெற்றிருக்கிறது. கொரோனா தொற்றுகாரணமாக அடைக்கப்பட்டிருந்த கடை மீண்டும் அண்மையில் திறக்கப்பபட்டுள்ளது.
பாரம்பர்ய மான பெயர், சுவை ஆகியவற்றால் இன்றளவும் இருட்டுக்கடை அல்வா உயிர்ப்புடன் இருக்கிறது. மற்ற இனிப்பு கடைகளைப் போல அல்லாமல், அல்வாவை தயாரிப்பதற்கு மூன்று நாட்கள் வரை இவர்கள் நேரம் எடுத்துக் கொள்கின்றனர். கோதுமையில்தான் அவல்வா தயாரிக்கின்றனர். கோதுமையில் இருந்து பால் எடுத்து அது புளிக்க வைக்கப்பட்டு அதில் இருந்து அல்வா தயாரிக்கப்படும்.இந்த செயல்முறைகளுக்கு மூன்று நாட்கள் ஆகிவிடும். அதன் பின்னரே விற்பனைக்கு வரும்.
இந்த பாரம்பர்யமான சுவைக்கு காரணம் இருட்டக்கடை அல்வா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தரமான கோதுமை மற்றும் தாமிரபரணி தண்ணீர் ஆகியவைதான் முக்கியமான பங்கு வகிக்கின்றன. நெல்லையிலேயே பிற கடைகளில் தயாரிக்கப்படும் அல்வாவில் கூட இப்படி ஒரு சுவை இருப்பதில்லை.
- இதையும் படியுங்கள்; தரமான கருப்பட்டியை எப்படி அடையாளம் காண்பது?
இருட்டுக்கடை அல்வாவில் முந்திரிப்பருப்பு போன்றவை சேர்க்கப்படுவதில்லை. கோதுமை அல்வா மட்டும்தான் இருக்கும். அப்போதுதான் அல்வாவின் சுவை நாக்கில் நிற்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல இருட்டுக்கடை அல்வா தயாரிப்புக்கு மூன்று நாட்கள் ஆகும் என்று இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். எனவே அல்வாவை தயாரித்து பல மணி நேரத்துக்கு பின்னரே உண்கின்றோம் என்பதாலும் அதன் சுவையில் எந்த ஒரு மாற்றமும் இருப்பதில்லை. இருட்டுக்கடை அல்வா விஷயத்தில் இது சுடசுட விற்கப்படுவதில்லை என்பதையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சுடச்சுட வியாபாரம் மட்டுமே நடக்கிறது.
-பா.கனீஸ்வரி
#IruttuKadaiHalwa #NellaiIruttuKadaiHalwa #NellaiHalwa
கூகுள் செய்தியில் ஆரோக்கிய சுவை உணவு இணையதளத்தை பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments