
கொளுத்தும் கோடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
கோடை வந்து விட்டது. கோடை காலத்தில் நமது உடலில் உள்ள தண்ணீர் சத்து வேகமாக வறண்டு விடும். நாவறட்சி ஏற்பட்டு அடிக்கடி தாகம் எடுக்கும். கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அல்ல வேறு எந்தமாதிரியான உணவுப் பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
குடல் பிரச்னைகளை ஏற்படுத்தாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான குடல்தான் ஒட்டு மொத்த உடல்நலனுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே கோடை காலத்தில் உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
நீர் சத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள்
உடலில் இருந்து நீர்சத்து வெளியேறுதல் என்பது உங்கள் உடலை ஆரோக்கியமற்றதாக்கி விடும். எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். 8 டம்ளர் தண்ணீராவது ஒவ்வொருவரும் குடிக்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம். காஃபின் கலந்த காப்பிபோன்ற பானங்களை கோடை காலத்தில் தவிர்க்கவும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்
மூலிகை தேனீர் அல்லது லவங்கப்பட்டை, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி மற்றும் திராட்சையில் ஆகியவற்றை காய்ச்சி எடுத்த சாறு குடிக்கலாம். இந்த சாறினை தினமும் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். அதே போல தங்க பால் என அழைக்கப்படும் மஞ்சள் கலந்த பால் குடிப்பதையும் மறந்து விட வேண்டாம். மஞ்சள் கலந்த பாலில் ஏகப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. கேன்சரை தடுக்கும் காரணியாகவும் மஞ்சள் பால் செயல்படுகிறது.
தயிர், இட்லி போன்ற உணவுகள்
நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அடங்கிய தயிர், இட்லி, பன்னீர் போன்ற உணவுப் பொருட்களை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலின் ஜீரண சக்தியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
நார் சத்துள்ள உணவுகள்
அதிக நார் சத்துள்ள உணவுப் பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கழுவப்பட்ட பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். பழங்களை கலவையாக்கி சாப்பிடலாம். முழு கோதுமை பிரட், வாழைப்பழம், ஆப்பிள் , கீரை வகைகள், ஆரஞ்ச் பழம், தர்பூசணி போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
பா.கனீஸ்வரி
#BoostImmunity #SummerFoods #SummerHealthyFoods #FoodNewsTamil
Comments