
வாயுக்கோளாறு, ஜீரணக்கோளாறு விரட்டும் முருங்கை!
நாம் உண்ணும் உணவு தினந்தோறும் ஜீரணிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதில் ஜீரண சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ட உணவு தினந்தோறும் செரிமானகி கழிவாக வெளியேறினால்தான் நமது உடல் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக திகழும்.
ஆனால், அவசரயுகத்திலும், வாழ்க்கை முறை மாற்றத்திலும் நாம் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருகின்றோம். செரிமானத்தை சீராக்க இயற்கை மருத்துவத்திலேயே பல வைத்தியங்கள் உள்ளன. நம்மை சுற்றி உள்ள இயற்கை காய்கறிகளைக் கொண்டே நம்மை குணப்படுத்திக் கொள்ள முடியும். செரிமான கோளாறை சரி செய்வதில் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது.
முருங்கை என்றதும் ’முருங்கையை முறிச்சு வளர்க்கணும், பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்’ முருங்கை பருத்தால் தூணாகுமா? என்பதுபோன்ற பழமொழிகள்தான் நினைவுக்கு வரும். இன்னும் சிலர் வேதாளம் முருங்கை மரத்துல ஏறப்போகுது என்பதுபோன்ற வழக்குச்சொற்கள் வந்து போகும்.
ஆனால் உண்மையில் முருங்கைக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உண்டு. முருங்கையின் நுனி முதல் வேர் வரை மருத்துவப்பயன் மிக்கது. முருங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக சோற்று முருங்கை, பனி முருங்கை, கோடை முருங்கை, நீர் முருங்கை போன்றவற்றை உண்பதன்மூலம் நோய்கள் நீங்கும்.
சோற்று முருங்கையின் காயை உண்டால் அது எலும்பினுள் உள்ள பசைக்கு பலம் சேர்க்கும். மஜ்ஜையை அதிகப்படுத்தும். மேலும், கல்லீரலில் பித்தத்தை சுரக்க வைக்கும் இந்த சோற்று முருங்கையின் கீரை எக்காலத்திலும் கிடைக்கக்கூடியது. இதன் கீரையை சமைத்து உண்பதால் கணையத்தில் சமான வாயுவை சுரக்கச்செய்யும்.
பனிமுருங்கையில் உள்ள பட்டையை ஐந்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 100 மில்லி பாலில் போட்டு வேக வைத்து இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் எப்படிப்பட்ட நோயால் அவதிப்பட்டு தூக்கம் வராமல் போனாலும் நிம்மதியான தூக்கம் வரும்.
கோடை முருங்கையின் கீரை மூட்டுகளில் உள்ள வீக்கங்களை அதாவது பித்த வாயுவை குணப்படுத்தும். இந்த கீரையை கசாயம் வைத்தோ, சாம்பார் வைத்தோ சாப்பிட்டு வந்தால் நீர் போகும். இதனால் வாயுக்கோளாறுகள் விலகுவதோடு பிடிப்புகள் விலகும். இதன் கீரையை உப்புடன் சேர்த்து கசக்கி அரை டீஸ்பூன் அளவு தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலிகளை குணப்படுத்துவதோடு பின்னாட்களில் வயிற்றுவலிகள் வராமலிருக்கச்செய்யும்.
நீர் முருங்கையின் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டால் கால் வலி விலகும். ஜீரணக்கோளாறுகள் விலகுவதோடு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். இதன் காயில் உள்ள பருப்பை நெய்விட்டு வறுத்து இடித்து பொடியாக்கி சாம்பாரிலோ, ரசத்திலோ அரை டீஸ்பூன் அளவு 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
-மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#MoringaOleifera #Drumstick #indigestion
Comments