பருவமழை தாமதம் குறித்த கவலை பதிவுகள்…


வேளாண் நண்பரும், இயற்கை வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யும் மகிழம் (Magizham Farms)பண்ணையாளரின் பதிவு 

விவசாய நண்பர்கள் பயிரிட்ட வேளாண்மையை காப்பாற்ற மழையை எதிர்பார்த்து தவமாய் தவம் இருக்கிறாங்க. அது பாலக்காடு மாவட்டம்தான் என்றில்லை தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான பரிதவிப்பு தான்.

எங்க பாலக்காடு மாவட்டத்தில் குழல்மன்னம் (kuzhalmannam) பகுதி வற்றாத பாரதபுழா ஆறும் மழம்புழா ஆறும் ஓடி வயல்வெளி எங்கும் பச்சை பசேர்னு நெல்வயல்கள் காட்சி அளிக்கும் காலம். இந்த வருசம் எந்த டேமும் நிறையவில்லை, ஆத்தில் தண்ணியும் இல்லை..

ஏமாற்றும் பருவமழை

சிலர் போர் மோட்டார் தண்ணீரில் நெல் பயிரிட்டு இருக்காங்க. தென்மேற்கு பருவமழை அடர்த்தியா பெய்யும் ஊரிலயே இந்த நிலைமைனா எங்க வட்டாரத்தில் ஒவ்வொரு விவசாயியும் வரவிருக்கும் கோடையை நினைத்து கலங்கி தான் நிற்கிறார்கள்.

என்ன செய்ய நம்ம கையில் ஒன்னும் இல்லையே..  கொஞ்சத்துக்கு கொஞ்சம் இருக்கிற நிலத்தடி தண்ணியையும் போர் போட்டு இப்பவே உறிஞ்சிட்டா மண்ணில் ஈரம்கிறதே இல்லாம சும்மா செங்கல் காளவாயில் தகிக்கும் நெருப்பு போல நம்ம ஊரு இந்த வருசம் அமைவது உறுதி.

சந்திராயன் 3 என்ன வேகத்தில் நிலாவுக்கு போச்சுன்னு தெரியாது ஆனா காய்கறிகள் ,உணவு தானியங்கள் விலை இந்த வருசம் அந்த வேகத்தை உடைத்தெறிந்து புது வரலாறு படைக்கும். எழுத எழுத கவலை மேலோங்கி நிற்குதுங்க..

ஆகஸ்ட் வரை ஏமாற்றி விட்ட தென்மேற்கு பருவமழை-எழுத்தாளர் திரு.நக்கீரன் 

ஆகஸ்ட் மாத இறுதியில் வானம் சற்று முகில்மூட்டத்துடன் காணப்படுகிறது. இது மகிழ்ச்சியைக் காட்டிலும் சற்று அச்சத்தையே வரவழைக்கிறது. வழக்கமாக ஜூன் இரண்டாம் தேதி கதவைத் தட்டும் பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் வரை ஏமாற்றி விட்டது. எனவே, பெய்ய வேண்டிய மீதி மழை எந்த வடிவில் அல்லது அளவில் பெய்யும் என்பது தெரியவில்லை. முந்தைய வரலாறு அப்படி இருக்கிறது.  

கடந்த 2017ஆம் ஆண்டில் சண்டிகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை பெய்யாத பருவமழை, அன்று 12 மணி நேரத்துக்குள் 115மி.மீ அளவில் ஒரே தடவையாகக் கொட்டித் தீர்த்து சண்டிகரை மூழ்கடித்தது. அது மொத்த ஆண்டு மழையளவில் 15% ஆகும். ஒருமுறை பெங்களூரை மூழ்கடித்த மழையளவு 150மி.மீ. ஆகும். ஒரே நாளில் கொட்டி தீர்த்த அது ஆண்டு மழையளவில் 30% ஆகும். வறண்ட மாநிலமான இராஜஸ்தானில்கூட அபு மலைப்பகுதியில் மொத்த பருவமழை அளவில் பாதி இரண்டே நாளில் கொட்டி தீர்த்தது. 2015ஆம் ஆண்டு சென்னை மழை நமக்கு இன்னும் நினைவிருக்கும். 

தென்மேற்கு பருவமழை தாமதம்

இயற்கைப் பேரிடருக்குள்ளாகும் நாடுகளின் பட்டியலில்  இந்திய ஒன்றியம் உலகில் நான்காம் இடம் வகிக்கிறது. அதிலும் ‘நீரிடி’யால் ஏற்படும் பெருவெள்ள பாதிப்புகளே அதிகம்.  இந்நிலையில் பருவமழை பொழிவு  தாமதிப்பது அச்சத்தை ஏற்படுத்துவது இயல்பே. நல்லது நடக்க வேண்டும் என்பதே விருப்பம். எனினும், இயற்கையைக் கணிக்க யாரால் முடியும்? 

குறிப்பு: ஆங்கிலத்தில் கூறப்படும் ‘Cloud burst’ என்கிற சொல்லை அப்படியே நேரடி மொழிப்பெயர்ப்பில் ‘மேக வெடிப்பு’ என்று ஊடகங்களும் சூழலியலாளர்கள் சிலரும்  குறிப்பிடுகின்றனர். இது அபத்தமாகும். இது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நடந்துவரும் ஒரு நிகழ்வு என்பதால் அதற்கு தமிழில் ‘நீரிடி’ என்கிற ஒரு சொல் உண்டு. இது மக்கள் நாவிலும் தற்போது வரை புழக்கத்தில் இருக்கிறது. இதுபற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘நீர் எழுத்து’ நூலிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.  எனவே, இனி ‘நீரிடி’ என்றே அழைப்போம். மேகத்தை வீணாக வெடிக்க வைக்க வேண்டாம்.

#DeficientMonsoon #ElNinoEffect #swmonsoon2023 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments