
பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும் சத்துகள்
கொரோனா ஒரு உயிர் கொல்லி நோயாக அறியப்பட்டபோதிலும் அதன் தாக்கத்தால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன. வீட்டில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மீண்டும் மக்களிடம் அதிகரித்திருக்கிறது. இன்னொன்று இயற்கை உணவுகள் மீதான அக்கறையும் மக்களிடம் அதிகரித்திருக்கிறது.
இந்த தருணத்தில் ஒரு தகவலை பகிந்து கொள்ள விரும்புகின்றேன். ஓய்வுபெற்ற தமிழ்ப்பேராசிரியர் தஞ்சை பா.இறையரசன் கடந்த சில ஆண்டுகளாக எனக்குப் பழக்கம். நேரம் கிடைக்கும்போது அவரை நேரில் சந்தித்து உரையாடுவதுண்டு.
குறிப்பாக, இயற்கை மருத்துவம் சார்ந்து அவரோடும், சில நண்பர்கள் மற்றும் அவரால் வரவழைக்கப்பட்ட உடல்நலக்கோளாறுகள் உள்ளவர்களோடும் உரையாடுவதுண்டு. அப்போது சில மருத்துவ ஆலோசனைகளைச் சொல்லி வருவேன்.
அவர் வசம் இருந்த சில மருத்துவ நூல்களை எடுத்துச் செல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டதன்பேரில் அவரைச் சந்தித்து சில புத்தகங்கள் பெற்று வந்தேன். பல அரிய தகவல்களைக் கொண்ட புத்தகங்களை கொடுத்ததற்காக இன்றளவும் ஐயாவுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
அவர் கொடுத்த புத்தகங்களில் ஒன்றான மூலிகைமணியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அது 1979-ம் ஆண்டு வெளியான புத்தகம். அதில் பச்சைப் பட்டாணியை இளம் வயது முதல் சாப்பிட்டு வந்தால் ஹார்ட் அட்டாக் எனப்படும் கொடிய இதய நோய் வராது என்ற ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
பச்சைப் பட்டாணியில் நிறைய சத்துகள் இருப்பதை நான் அறிவேன். அதிக ஆற்றல் நிறைந்த பச்சைப் பட்டாணியைச் சாப்பிடுவதன்மூலம் முதுமையைத் தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த பச்சைப் பட்டாணியைச் சாப்பிடுவதால் வயிற்று புற்றுநோயைத் தடுக்கலாம்.என்பது மெக்சிகோவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்; வாயுக்கோளாறு, ஜீரணக்கோளாறு விரட்டும் முருங்கை!
பட்டாணியில் உள்ள ஊட்டச்சத்துகள் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால் இது இதய நோய் மட்டுமன்றி புற்றுநோய்க்கும் நல்ல மருந்து. அத்துடன் அல்சைமர் எனப்படும் முதுமையில் வரக்கூடிய மறதிநோய், கீல்வாதம், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அரிப்பு நோய் போன்றவற்றையும் இது தடுக்கக்கூடியது.
இதுமட்டுமன்றி ரத்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பச்சைப் பட்டாணி வலுவான எலும்புகளை உருவாக்குவதில் சிறப்பான பங்காற்றுவதாகவும் சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
பச்சைப் பட்டாணியில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை அதிகரித்து மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கக்கூடியது. இப்படி இதன் சிறப்புகள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். உடனே பச்சைப் பட்டாணியை வாங்கி சமைக்க வேண்டும் என்று அவசரப்படுபவர்களுக்கு ஒரு தகவல்.
பச்சைப் பட்டாணி என்றால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பட்டாணி அல்ல; தோலுடன் இருக்கும் மாணிக்கப் பரல்களைப் போன்று காட்சியளிக்கும் அந்த பச்சைப் பட்டாணிக்கே மருத்துவக் குணம் உண்டு.எனவே, பச்சை பட்டாணி வாங்குவதிலும் கவனம் தேவை.
-மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
Comments