புற்றுநோய் குறித்த 15 முக்கிய கேள்விகளும், பதில்களும்…


மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமுதாய வானொலி நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கடந்த மாதம் தொடர்பு கொண்டார்கள். புற்றுநோய் குறித்து  ஒரு நேர்காணல் வேண்டும் என்றார்கள். கேள்விகளை அனுப்பச் சொல்லி, பதில்களை தயாரித்துக் கொண்ட பிறகு, நேர்காணல் பதிவு செய்து ஒலிபரப்பினார்கள். அதில் பேசப்பட்ட விஷயங்களை பதிவாக எழுதியிருக்கிறேன். 

1. புற்று நோய் என்பது என்ன?

பழையன கழிதலும் புதியன புகுதலும்போல, உடலில் உயிரணுக்கள் (செல்கள்) புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கும், பழையவை இறந்து கொண்டே இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்துவது உயிரணுக்களின் கருவுக்குள் இருக்கும் மரபணுக்கள் — டிஎன்ஏ. மரபணுவின் கட்டுப்பாட்டின்கீழ் செல்கள் வளர்ந்து கொண்டிருக்கும் வரை பிரச்சினை ஏதும் இல்லை. மரபணு அமைப்பில் ஏற்படும் சில பிறழ்வுகளால், சில செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளரக்கூடும். இவ்வாறு கட்டுப்பாடின்றி தேவையற்ற வகையில் உயிரணுக்கள் வளர்ந்து, பல்கிப் பெருகுவதுதான் கழலை – டியூமர் என்பது. (டியூமரைக் குறிப்பதற்கு கழலை, கட்டி ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.)

2. புற்று நோய் ஒரு புராதனமான நோய் என்று சொல்லுமளவு ஆதியிலிருந்தே இருந்திருக்கா? அதற்கான சான்றுகள் தொல்லியல் ஆய்வுகள்ல கிடைச்சிருக்கு இல்லையா? 

2014இல் சைபீரியாவில் நடத்தப்பட்ட ஓர் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு மனிதனின் எலும்புக்கூட்டைப் பரிசோதித்தபோது, அந்த மனிதன் நுரையீரல் புற்றுநோய் காரணமாக இறந்தான் என கண்டறியப்பட்டது. அந்த மனிதனின் காலம் கி.மு. 2500 என மதிப்பிட்டப்பட்டது. வரலாற்றில் அறியப்பட்ட முதல் புற்றுநோயாளி அவன்தான். வேட்டையாடியும், காடுகளில்  சுற்றித் திரிந்து உணவுகளைத் திரட்டியும் அவன் வாழ்ந்திருக்க வேண்டும். சைபீரியக் குளிரை சமாளிக்க சுள்ளிகளில் தீ மூட்டி குளிர் காய்ந்திருக்க வேண்டும். அதன் புகையை அடிக்கடி சுவாசித்ததன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள். முந்தைய அகழ் ஆய்வுகளில், 5000-6000 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் இருந்தது என்று தெரிந்திருந்தாலும், திட்டவட்டமான ஆதாரம் இதில்தான் கிடைத்தது.

புற்றுநோயைப் பற்றிய முதல் குறிப்பு, எகிப்தில் கிடைத்த பண்டைக் காலக் காகிதங்களில் உள்ளது. அந்தக் காகிதங்களை விலைக்கு வாங்கிய எட்வின் ஸ்மித் என்பவர் பெயரால் ‘எட்வின் ஸ்மித் பாபிரஸ்’ (Edwin Smith Papyrus) என அழைக்கப்படும் அந்த ஆவணம் இப்போது நியூயார்க் மருத்துவ ஆய்வு மையத்தில் உள்ளது. இந்தத் தாளில், 48 வகையான காயங்களும் நோய்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தக் காலத்தின் தாள்களில், அக்காலத்தில் பொதுவாக நம்பப்பட்ட மாந்திரீகக் குறிப்புகளே அதிகம் இருந்தன. ஆனால் இந்தத் தாள் மட்டும் நோய்களை தர்க்கரீதியாக விளக்குவதால் இது தனிச்சிறப்பு மிக்கதாக மதிக்கப்படுகிறது. கி.மு. 1600இல் எழுதப்பட்ட இந்தத் தாளில் மார்பகப் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

3. ஒரு மனிதனுக்கு புற்றுநோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன?

காரணங்கள் பலவகைப்படும். மனிதனாக ஏற்படுத்திக் கொள்பவை - புகையிலைப் பழக்கம், புகைப் பழக்கம், மது அருந்துதல் போன்றவை. மனிதரின் வாழ்க்கை முறை ஒரு காரணம் – உதாரணமாக உணவுமுறை, உடற்பயிற்சி இல்லாமை போன்றவை. தொற்றுகள், காற்று மாசு, ரசாயன மாசு போன்றவை சுற்றுச்சூழல் காரணிகள். பரம்பரையாக வரும் மரபணுப் பிறழ்வுகள் மற்றொரு முக்கியக் காரணி. இதில் மனிதத் தவறு ஏதும் இல்லை. 

புற்றுநோய் குறித்த தகவல்கள்

4. புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் எந்தளவுக்கு முன்னேறியிருக்கோ அதே நேரம் புற்றுநோயால பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிச்சுக்கிட்டே வருது. அதற்கு என்ன காரணம்?

முந்தைய கேள்விக்கான விடையிலேயே இந்தக் கேள்விக்கான பதிலும் அடங்கியுள்ளது. உதாரணமாக ஒரு கதை சொல்கிறேன். ஓர் ஊரில் ஒரு சாலையில் அடிக்கடி நிறைய விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளுக்கான காரணங்களை அலசி அவை சரிசெய்யப்படுகின்றன. சாலையில் சிக்னல் அமைக்கப்படுகிறது. அங்கங்கே எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படுகின்றன. சாலையில் குறுக்காகச் செல்லாதவாறு நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என விதிக்கப்படுகிறது. இதையெல்லாம் செய்த பிறகு விபத்துகள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை, சீட் பெல்ட்போடுவதில்லை. நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களை அங்கங்கே நகர்த்தி விடுகிறார்கள். டிராபிக் சிக்னலை மதிக்காமல் இஷ்டத்துக்குப் போகிறார்கள். எச்சரிக்கைகளை பொருட்படுத்துவதே இல்லை. அல்லது அந்தப் பலகைகள் மீது நோட்டீஸ் ஒட்டி விடுகிறார்கள். இப்படி இருந்தால் விபத்துகள் குறையுமா? தவறு செய்பவர்கள் மட்டுமல்ல, அவர்களால் மற்றவர்களும்கூட விபத்துக்கு ஆளாகிறார்கள்

அதேபோலத்தான், புற்றுநோய் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று எச்சரிக்கை விடப்படுகிறது. உணவுமுறை மாற்றிக் கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது. சூழலை மாசுபடுத்தாதீர்கள் என்று விதிக்கப்படுகிறது. ஆனாலும் புகைப்பதோ புகையிலை பயன்படுத்துவதோ கூடிக்கொண்டே போகிறது. உலகிலேயே புகையிலைப் பழக்கத்தில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆரோக்கியமான உணவுகளுக்கு பதிலாக ஜங்க் ஃபுட் மோகம் விரிவாகப் பரவி வருகிறது. ஸ்விக்கி ஜொமோட்டோ போன்ற செயலிகள் வந்தபிறகு இன்னும் அதிகமாகி வருகிறது. சுற்றுச்சூழல் கேடும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படியிருந்தால், என்னதான் சிகிச்சைகள் மேம்பட்டாலும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தானே செய்யும்? 

ஒரே ஒரு விஷயத்தில்தான் – மரபணு பிறழ்வால் ஏற்படும் புற்றுநோய் என்கிற விஷயத்தில் மட்டுமே மனிதரால் ஏதும் செய்ய இயலாது. அதிலும் நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மார்பகப் புற்றுநோய்க்குக் காரணமான மரபணுக்கள் எது என்று கண்டறியப்பட்டதால், பரம்பரையாக அந்த மரபணுக்களின் பாதிப்பு ஏற்படக் கூடியவர்கள், முன்னதாகவே மார்பக நீக்க சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜூலி அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தான். அதேபோல, புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணுப் பிறழ்வை சரி செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. அது வெற்றிபெறும்போது, அந்த சிகிச்சை அனைவருக்கும் பயன்தரக்கூடிய குறைந்த செலவில் வரும்போது,  பரம்பரையாக வரும் புற்றுநோய் ஆபத்து பெரிதும் குறையும்.

5. புற்றுநோய் சிறப்பு சிகிச்சைப் பிரிவு Oncology எப்பொழுது தொடங்கப்பட்டது?

Oncology என்ற சொல்லைப் பற்றி முதலில் பார்ப்போம். மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹிப்போகிராட்ஸ் என்பவர் கி.மு. நானூறுகளிலேயே கட்டிகளுக்கு கார்சினோமா என்ற பெயர் வைத்தார். கிரேக்கத்தில் இது நாற்புறமும் நகரக்கூடிய கால்களைக் கொண்ட நண்டினைக் குறிக்கும். ரோமானிய மருத்துவர் செல்சஸ் என்பவர், நண்டு எனக் குறிக்கும் லத்தீனியச் சொல்லை கேன்சர் என்று மொழியாக்கம் தந்தார். அதுவே ஆங்கிலத்திலும் கேன்சராக அழைக்கப்படுகிறது. ஆன்காலஜி என்பதில் ஆன்கோஸ் என்பது வீக்கத்தைக் குறிக்கும். கிரேக்க மருத்துவர் ஏலியஸ் காலனஸ் என்பவர், கட்டிகளுக்கு ஆன்கோஸ் எனப் பெயரிட்டார். எனவே, கட்டிகளை ஆராயும் துறை ஆன்காலஜி ஆனது, புற்றுநோய் மருத்துவர் ஆன்காலஜிஸ்ட் ஆனார். 16-17ஆம் நூற்றாண்டுகளில் நவீன புற்றுநோய் மருத்துவம் தொடங்கி விட்டது என்றாலும், நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஆன்காலஜி முறையாகத் தொடங்கியது. 

6. புற்றுநோயின் வகைகள் அல்லது எந்தெந்த உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுகிறது?

புற்றுநோயின் வகைகளும் நிறைய உண்டு. உடலின் எல்லா உறுப்புகளிலும் –சிறுநீரகம், கணையம், மூளை, வாய்,  போன்ற உறுப்புகள் மட்டுமல்ல - எலும்பு, தோல், ரத்தம் உள்பட உடலில் எந்த இடத்திலும் புற்றுநோய் வரலாம். குறிப்பாகச் சொல்வதானால், மார்பகப் புற்றுநோய், கருப்பைசார் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், தைராய்டு கேன்சர், கிட்னி கேன்சர், புரோஸ்டேட் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், லுகேமியா, மைலோமா என்னும் ரத்தப் புற்றுநோய், என இன்னும் பலதும் உண்டு.

7. எல்லா வகைப் புற்றுநோய்களிலும் உயிர் அபாயம் உள்ளதா? முழுமையாக குணப்படுத்தக் கூடிய புற்றுநோய்கள் எவை?

புற்றுநோயிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பரவாத கழலை. மற்றது பரவும் கழலை. கழலை அல்லது கட்டி, உருவான இடத்திலேயே குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளராமல் அப்படியே இருந்து விடக்கூடும். இதை benign tumor – பரவாக் கழலை என்கிறோம். இவற்றால் ஆபத்து அதிகம் இல்லை. ஆபத்து இல்லாத, பரவாத கழலை என்றால், மருத்துவர்கள் அதை அப்படியே விட்டு விடக்கூடும். பரவக்கூடியதாக இல்லை என்றாலும், ஒருவேளை அந்தக் கட்டி வளர்ந்து கொண்டே இருக்குமானால், மற்ற உடலுறுப்புகளின்மீது அழுத்தம் செலுத்தி, அந்த உறுப்பினை பாதிக்கக்கூடும். அந்த நிலை வந்தால் அறுவை சிகிச்சையால் அதை நீக்க வேண்டி வரலாம். 

புற்றுநோய் சந்தேகங்களுக்கு சில விளக்கங்கள்

சில கட்டிகள் வளர்ந்து பெரிதாவது மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்துக்கும், இதர பகுதிகளுக்கும் பரவி அங்கும் கட்டிகளாக உருவாகும். இதை பரவும் கழலை (malignant tumor) என்கிறோம். அதாவது புற்றுநோய் பரவி விட்டது என்கிறோம். சற்று முன் குறிப்பிட்ட பரவாத கட்டிகளும்கூட சில பேருக்கு பரவக்கூடிய கழலையாக மாறலாம். எனவே, எந்த வகை கழலையாக இருந்தாலும் கணகாணிப்பு அவசியம். 

பரவும் கழலை என்பது சுற்றியிருக்கும் திசுக்களை எல்லாம் தாக்கக்கூடியது. இதுதான் ஆபத்தானது. முழுமையாக குணப்படுத்த முடியுமா என்றால், எந்த வகை புற்றுநோய், அது என்ன நிலையில் இருக்கிறது, எந்த உறுப்பை பாதித்துள்ளது, என்பதைப் பொறுத்து குணப்படுத்தலாம், நோயைக் கட்டுப்படுத்தலாம், ஆயுள்காலத்தை நீட்டிக்கலாம். உதாரணமாக, மார்பகப் புற்றுநோய் என்றால், மார்பகத்தையே நீக்கி விடலாம், கருப்பை புற்றுநோய் என்றால் கருப்பையை நீக்கி விடலாம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நுரையீரல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், மூளைப் புற்றுநோய் இவையெல்லாம் உயிருக்கு ஆபத்தாகக்கூடியவை. 

8. நோய் கண்டறிதல் அதாவது ஆரம்ப நிலை diagnosis தான் இந்தப் புற்று நோய் குணப்படுத்துவதில் உள்ள சவால் இல்லையா? இதன் அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் உயிருக்கே ஆபத்தான நோயாக ஆவதற்கான அடிப்படைக் காரணமே அதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவதுதான். ஏனென்றால், அது சட்டென வெளியே தெரியக்கூடிய  வெட்டுக்காயம்,  அல்லது உடனே வலி தரக்கூடிய எலும்பு முறிவு போன்ற விஷயம் அல்ல. உடலின் ஏதோவொரு மூலையில் ஒரு செல் உருவாகி, பல செல்களாகப் பிளவுபட்டு, அதிகரித்து, கட்டியாக உருமாறிய பிறகுதான் தெரிய வரும். அதுவும்கூட வெளிப்பார்வைக்குத் தெரியக்கூடிய இடத்தில் கட்டி வந்தால்தான் நமக்குத் தெரியும். வெளிப்பார்வைக்குத் தெரியாத உள்ளுறுப்புகளில் கட்டிகள் வளர்வது நமக்கு உடனே தெரிய வராது. அந்தக் கட்டி, அது வளர்ந்த உறுப்பை பாதித்து, அல்லது அருகில் இருக்கிற இதர உறுப்புகளை பாதித்து, அல்லது வேறு உறுப்புகளுக்கும் பரவி, அந்த உறுப்புகளின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்படும்போதுதான் தெரிய வருகிறது. அதற்குள் தாமதமாகி விடுகிறது. “முத்திப் போனதுக்கப்புறம்தான் தெரிஞ்சுதாமா...” என்கிற வாசகங்களை நாம் அடிக்கடி கேட்க நேர்வது இதனால்தான். எனவேதான் அறிகுறிகளும் இதுதான் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு வகைக்கும், அந்தந்த உறுப்புகளின் பாதிப்புக்கு ஏற்ப அறிகுறிகள் வேறுபடும். 

9. ஆண்களை அதிகம் பாதிக்கக் கூடியவை?

புற்றுநோய் என்பது ஆண்-பெண் இருவரையுமே பாதிக்கும் என்றாலும், சில வகைகள் ஆண்களை மட்டுமே பாதிக்கும். சில வகைகள் பெண்களை மட்டுமே பாதிக்கும். உடலமைப்பும், உறுப்புகளின் அமைப்புமே காரணம். இந்தக் கேள்விக்கு பெண்களையும் பாதிக்கும் புற்றுநோய்களையும் சேர்த்தே பதில் தருகிறேன். 

பெண்களுக்கு மார்பகம் உண்டு, இது ஆண்களுக்கு இல்லை. எனவே, பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் இது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம் என்றாலும் மிக மிக அரிதுதான். பெண்களில் ஆயிரத்தில் 120-180 பேருக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்; ஆண்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு வரக்கூடும். கருப்பை பெண்ணுக்கு மட்டுமே உள்ளது, எனவே கருப்பை சார்ந்த புற்றுநோய் ஆபத்து பெண்களுக்கு மட்டுமே உண்டு. இதேபோல, புரோஸ்டேட் என்பது பெண்களுக்குக் கிடையாது. ஆண்களுக்கு மட்டுமே உண்டு. ஆணின் விந்தணுக்களை மிதக்கச் செய்யும் ஒரு வகை திரவத்தை சுரப்பதுதான் இந்த சுரப்பியின் வேலை. எனவே, ஆண்களுக்கு மட்டுமே புரோஸ்டேட் கேன்சர் ஆபத்து உண்டு. பெண்களிலும் சிலர் புகைப்பழக்கம் உடையவர்கள் என்றாலும், ஆண்கள்தான் அதிகம் புகைபிடிப்பவர்கள். எனவே அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து அதிகம். பெண்களைவிட ஆண்களுக்கு குடல் புற்றுநோய் அதிகம் வருகிறது.  

10. மரபாக / பரம்பரையாக வரக்கூடிய வாய்ப்புள்ளவை எவை? 

மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் போன்ற இன்னும் பலவகைகள் பரம்பரையாக மரபணு ரீதியில் வரக்கூடியவை. பிரச்சினை என்னவென்றால், மரபுரீதியாகவே இருந்தாலும் ஓர் இடத்தில் வந்த புற்றுநோய் அந்த இடத்தோடு நிற்காமல் இதர உறுப்புகளுக்கும் பரவி விடும்போது எந்த உறுப்பும் பாதிக்கப்படும். நம் உடலில் இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்வது போலவே நிணநீர் (அல்லது ஊனீர்) குழாய்களும் அமைந்துள்ளன. இது லிம்ப்ஸ் சிஸ்டம் எனப்படும். நோயெதிர்ப்பு செல்களை உடலெங்கும் எடுத்துச் செல்வது இந்தக் குழாய்கள்தான். இந்தக் குழாய்களின் பாதையில் அங்கங்கே அவரை விதை போன்ற கணுக்கள் – ஊனீர் கணுக்கள் உள்ளன. இத்தகைய நிணநீர் கணுக்கள் வலைப்பின்னல் அமைப்பு போல உடலெங்கும் உள்ளன. இதை ஆங்கிலத்தில் லிம்ப் நோடு என்பார்கள். இப்போது உதாரணத்துக்கு, பரம்பரையாக வரக்கூடிய மார்பகப் புற்றுநோயை எடுத்துக் கொள்வோம். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாமல் இருக்கும்போது அது மார்பகத்துக்கு அருகில் உள்ள லிம்ப் நோடுக்குப் பரவுகிறது. அங்கிருந்து அடுத்த லிம்ப் நோடுக்கும் பரவி, அருகில் உள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது. இவ்வாறு ஓர் இடத்தில் உருவான புற்றுக்கழை வேறு பகுதியிலும் கட்டியை உருவாக்குமானால் அது மாற்றிடப் புற்றுநோய் (metastatic cancer) என அழைக்கப்படுகிறது. எனவே, ஆரம்பத்தில் சொன்னதுபோல, குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்கள் மட்டும்தான் பரம்பரையாக வரக்கூடியவை என்று கருதி அலட்சியமாக இருந்துவிட முடியாது. 

11. தொற்றும் அபாயம் உள்ளதா நம்பப்பட்டது. இன்னும் கூட பலருக்கு அந்த அச்சம் உள்ளது. இதைத் தெளிவுபடுத்துங்கள்

புற்றுநோய் தொற்றுநோய் அல்ல என்பதை எவ்வளவுதான் விளக்கினாலும், படிப்பறிவற்ற பாமர மக்களிடையே மட்டுமல்ல, படித்த மக்களிடமும் இப்படியொரு கருத்து  நிலவுகிறது. நோயாளியைத் தொடுவதாலோ, அவருடன் உறவு கொள்வதாலோ, உணவைப் பகிர்ந்து கொள்வதாலோ, அல்லது காற்றிலோ புற்றுநோய் அணுக்கள் பரவாது. ஒவ்வொருவர் உடலிலும் நோயெதிர்ப்பு அணுக்கள் உண்டு. ஆரோக்கியமானவரின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு அணுக்கள், வெளியிலிருந்து வரும் நோய் அணுக்களை தாக்கி அழித்துவிடும். புற்றுநோயை தொற்றுநோய் என்று கருதுபவர்களுக்கு இதை விளக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புற்றுநோய் குறித்த சில விளக்கங்கள்

12. புற்றுநோய் சிகிச்சை முறைகள்?

அறுவை சிகிச்சை, கீமோதெரபி என்னும் மருந்து சிகிச்சை, ரேடியேஷன் என்னும் கதிரியக்க சிகிச்சை ஆகிய மூன்றும் தேவைக்கேற்றபடி தனித்தனியாகவோ சேர்த்தோ பயன்படுத்தப்படுகின்றன. மூன்று வகை சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன் படுத்தினால் போதாதா? எதற்காக இரண்டு அல்லது மூன்று வகைகளையும் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார்கள்? - என்ற கேள்வி வரலாம்.

பரவாக் கழலையா, பரவக்கூடியதா, நோயின் நிலை என்ன, கட்டி எவ்வளவு பெரிதாக இருக்கிறது, எங்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, என்பதைப் பொறுத்தே மேற்கண்ட கேள்விகளுக்கு மருத்துவர் முடிவு செய்வார். உதாரணமாக, ஒருவருக்கு மூளையில் புற்றுநோய் இருக்கிறது என்றால், புற்றுநோய் திசுக்கள் மூளையின் திசுக்களுடன் ஒட்டியிருக்கும்போது, அவ்வளவு சுலபமாக கச்சிதமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை மட்டும் நீக்கிவிட முடியாது. கட்டியுடன் ஒட்டியிருக்கும் மூளையின் திசுக்களும் பாதிக்கப்படலாம். அறுவை சிசிக்சைச்குப் பிறகு ரேடியஷன் தரப்படக்கூடும். அப்படி ரேடியேஷன் தரும்போது, நோயணுக்களை அழிக்கும் கதிர்கள் அருகில் உள்ள நல்ல திசுக்களையும் பாதிக்கும். தசைகளால் ஆன சாதாரண உறுப்புகளில் உள்ள திசுக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டால் பெரிய அளவுக்கு சிக்கல் வராமல் இருக்கலாம். ஆனால் மூளையின் திசுக்கள் பாதிக்கப்பட்டால், அந்த நபரின் உடலியக்கமே பாதிக்கப்படலாம். எனவேதான், அந்தந்த நோயாளியைப் பொறுத்து, முடிவு செய்யப்படும். சிலருக்கு கீமோதெரபி மட்டுமே போதுமாக இருக்கலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை மட்டுமே போதும். இன்னும் சிலருக்கு, அறுவை சிகிச்சை செய்த பிறகும் மிச்சமிருக்கக்கூடிய ஒரு சில புற்றுநோய் செல்களை அழிப்பதற்காக கதிரியக்க சிகிச்சை தர வேண்டியிருக்கலாம். கதிரியக்க சிகிச்சையோடு மருந்து சிகிச்சையும் தர வேண்டியிருக்கலாம்.

13. உதவி செய்யும் அமைப்புகள்/ நிறுவனங்கள்? 

இந்தியாவில் தேசிய அளவில் செயல்படக்கூடிய அமைப்புகள் என்று சொல்ல இயலவில்லை. அங்கங்கே அரசு சாரா நிறுவனங்கள் – தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. 

Cancer Patients Aid Association

Indian Cancer Society

V Care Foundation

Pink Hope Patient Support Group

Sankalp Beautiful World

Help Age India

வேலூரில் உள்ள சிஎம்சி

அடையாறு கேன்சர் மருத்துவமனை

போன்ற பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைத்தவிர அங்கங்கே சிறிய தன்னார்வக் குழுக்களும் கேன்சர் நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருத்துவமனைகளில் இத்தகைய குழுக்கள் அல்லது நிறுவனங்களைப் பற்றிய தகவலைப் பெறலாம்.

14. புற்று நோயாளிகளுக்கும் உடன் இருப்பவர்களுக்குமான உங்களோட அறிவுரை ?

இதர நோய்களில் நோய் குணமாகி விட்டால் போதும். ஆனால் புற்றுநோயில் நோய் குணமாவதற்கான காலமும் அதிகம், பக்க விளைவுகளும் அதிகம். சொல்லப்போனால், நோயினால் வரும் சிரமங்களைவிட பக்க விளைவுகளால் ஏற்படும் சிரமங்களே அதிகம். எனவே, பாதிக்கப்பட்டவருக்கு குடும்பத்தினர் ஆதரவு மிகவும் அவசியம். சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் மருத்துவரின் அறிவுரையை தவறாமல் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனவே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 

புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு தலைமுடி உதிரும். தலைமுடி உதிர்வது பெண்களுக்கு – குறிப்பாக இந்தியப் பெண்களுக்கு உளரீதியான பிரச்சினை தரும். வெளியே செல்ல கூச்சப்படுவார்கள். தோற்றம் பொலிவிழந்து விட்டதாக உளைச்சல் அடைவது இயல்பு. சில தன்னார்வ அமைப்புகள், விக் எனப்படும் செயற்கை தலைமுடியை விலைக்கோ அல்லது இலவசமாகவோ வழங்குகின்றன. வெளியே செல்ல கூச்சப்படுகிறவர்கள் விக் மாட்டிக் கொள்ளலாம். மார்பகப் புற்றுநோய் நீக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு மார்பகம் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று கவலைப்படுவார்கள். அறுவை சிகிச்சை செய்து செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள், செயற்கையாக சிலிக்கானில் கிடைக்கும் பேடுகளை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் பிரச்சினைகளை சமாளிக்க, குடும்பத்தினர்தான் உறுதுணையாக இருந்து தைரியம்ஊட்ட வேண்டும். 

புற்றுநோய் குறித்து சில புரிதல்கள்

தோலில் நிறம் மாறலாம். குமட்டலும் வாந்தியும் இருக்கும். சில மருந்துகள் ஒவ்வாமை காரணமாக அரிப்பு ஏற்படலாம். வாய்ப்புண்கள் வரலாம். அதனால் உணவருந்த முடியாமல் போகலாம். இதற்கு மருத்துவர்கள் அல்லது செவிலியர்களிடம் உதவி பெற வேண்டும். உணவு விஷயத்தில் குடும்பத்தினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

உடற் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன. உடல்நிலையைப் பொறுத்து, மருத்துவரின் ஆலோசனைப்படி, எளிய பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம். இதற்கும் குடும்பத்தினர் துணை நிற்க வேண்டும். இன்னும் நிறைய சொல்ல முடியும். அதெல்லாம் அந்தந்த நோயாளியையும், அவருடைய நோய்நிலை, பொருளாதார நிலைமை, குடும்பச் சூழல், குடும்பத்தினர் யார் போன்ற விஷயங்களையும் பொறுத்து இருக்கிறது.

15. பொதுவாக புற்றுநோய் குறித்து நிலவிவரும் கட்டுக்கதைகள் சில

ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. இவற்றைப் பற்றி விளக்கி ஒரு நூல் எழுதியிருக்கிறேன். மார்பகப் புற்றுநோய் – அறிந்ததும் அறியாததும் என்ற தலைப்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், எளிய மொழியில் எழுதியிருக்கிறேன். விலையும் மிக்க் குறைவு. இந்த நூலை வாசகர்கள் வாங்கிப் படிக்கலாம். உதாரணமாக சில மூட நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்கிறேன்.

- முன்னரே விளக்கியதுபோல, கேன்சர் ஒரு தொற்றுநோய் என்பது பரவலாக நிலவும் கருத்து. பாபில்லோமா வைரஸ் காரணமாக வரக்கூடிய செர்விகல் கேன்சர், ஹெபடிடிஸ் பி காரணமாக வருகிற லிவர் கேன்சர் தவிர எதுவுமே தொற்றக்கூடிய நோய்கள் அல்ல. இவையும்கூட சாதாரணமான சந்திப்பினால் தொற்றக்கூடிய வாய்ப்புகள் இல்லை.

- பிரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரும் என்பதை இப்போதும் உலகெங்கும் ஏராளமான மக்கள் நம்புகிறார்கள். 

- மார்பகம் பெரிதாக இருந்தால் புற்றுநோய் வரும், சிறிதாக இருந்தால் வராது

- பரம்பரையாக வருகிறவர்களுக்கு மட்டுமே புற்றுநோய் வரும்.

- ரேடியேஷன் சிகிச்சையால் புற்றுநோய் வரும்

- பயாப்சி செய்வதால் புற்றுநோய் வரும்

- பில்டர் சிகரெட் புகைத்தால் புற்றுநோய் வராது.

- புகைப்பவர்களுக்கு மட்டுமே நுரையீரல் புற்றுநோய் வரும்.

- புற்றுநோயை குணப்படுத்தவே முடியாது. புற்றுநோய் வந்தால் மரணம்தான்.

- நல்லதே நினைத்தால் – பாசிடிவ் திங்கிங் இருந்தால் புற்றுநோய் வராது. 

இப்படி இன்னும் எத்தனையோ மூடநம்பிக்கைகள் உள்ளன. மற்ற எல்லா மூடநம்பிக்கைகளைவிட அபாயகரமானது - கேன்சர் என்பது வியாதி அல்ல, அது ஒரு வியாபாரம் என்கிற கருத்து. இப்படி பரப்புகிற, நம்புகிற, நம்பிப் பரப்புகிற லட்சக் கணக்கானவர்கள் நம் மத்தியில்தான் இருக்கிறார்கள். உண்மை ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் பொய் பத்து சுற்று சுற்றி வந்துவிடும் என்பதுபோல, புற்றுநோய் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இத்தகைய பொய்கள் படுவேகமாகப் பரவி மக்களை முட்டாளாக்குகின்றன. இத்தகைய புரட்டுகளுக்கு எதிராக அறிவார்ந்த சமூகம் முனைந்து செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டும். 

-நன்றி; திரு. புதியவன்

#CancerAwareness  #BreastCancerAwareness #BreastCancerAwarenessMonth #CancerFAQ

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments