கர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.18000 மதிப்புள்ள உதவிகள்… -முழு தகவல்கள் தரும் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா!


பெண் மருத்துவரும் சிறந்த சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக Dr.முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு பணப்பயன் மற்றும் ஊட்டச்சத்து  திட்டம் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. 

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் அரசாணை GO(Ms) 118 இன் படி  2.4.2018 முதல் தமிழக கர்ப்பிணிகளுக்கு ரூபாய் 18000 மதிப்புள்ள உதவிகள் பணமாகவும் பொருளாகவும் தரப்படுகிறது.

இதன் மூலம் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் முறையான கவனிப்பைப் பெறுவதும் பிரசவத்திற்கு மருத்துவமனைகளை நாடுவதையும் குழந்தை பிறந்த பின் அதற்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு மற்றும் தடுப்பூசிகள் பெறுவதும் உறுதி செய்யப்படுகிறது. 

Must Read: சர்க்கரை நோய் பாதித்த ஏழை குழந்தைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை..

இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகள் ₹18000 தொகை பெறலாம். இந்த தொகையானது ஐந்து தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது முதல் தவணை ரூபாய். 2000 வழங்கப்படுகிறது. கர்ப்பிணித்தாய் தான் கர்ப்பமாக இருப்பதை 12 வாரங்களுக்குள் அவரது கிராம சுகாதார அல்லது நகர்புற சுகாதார செவிலியர் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்  

104 எனும் இலவச எண்ணிற்கு அழைத்தும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கர்ப்பத்தை சுயமாக பதிவு செய்ய https://picme.tn.gov.in/picme_public/ என்ற அரசின் இணையதள இணைப்பிலும் சென்றும் பதிவு செய்யலாம். 

கர்ப்பிணிகளுக்கு நிதி உதவித்திட்டம்

அவ்வாறு பதிவு செய்து உங்கள் பெயரில் பிரத்யேகமான தனித்துவம் மிக்க PICME numberஐ பெற வேண்டும்.  (PICME என்றால் Pregnancy Infant Cohort Monitoring & Evaluation) என்று அர்த்தம். அந்த எண் நீங்கள் குழந்தை பெற்றவுடன் பிறப்புச்சான்றிதழ் பெற கட்டாயத் தேவை எனவே கர்ப்பிணிகள் அனைவரும் முதல் பனிரெண்டு வாரங்களுக்குள்/ மூன்று மாதங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும்.

யாரெல்லாம் இந்த பணப்பயனைப் பெற தகுதி பெற்றவர்கள்? 

1.தமிழகத்தில் குடியுரிமை கொண்டுள்ள 19 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது கொண்ட கர்ப்பிணிகள் (  கர்ப்பமடையும் குறைந்தபட்ச வயதை மறைமுகமாக கூட்டும் முயற்சி) 

2.முதல் இரண்டு கர்ப்பங்களுக்கு  இந்த பயனை பெற முடியும்.  

( இரண்டுக்கும் மேற்பட்ட கர்ப்பங்கள் பிரசவங்களில் தாய் சேய்க்கு பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. அதை குறைக்கும் வண்ணம் உள்ளன ஏற்பாடு) 

3.சில சூழ்நிலைகளில் தேவை கருதி இரண்டுக்கு மேற்பட்ட கர்ப்பங்களுக்கும் இந்த உதவியை மருத்துவர் பெற்றுத் தர முடியும். (இவர்கள் முதல் மற்றும் ஐந்தாம் தவணையுடன்  ஊட்டச்சத்து பெட்டகத்தைப் பெறுவார்கள்)

4.இலங்கையில் இருந்து தமிழகத்தில் வந்து தங்கி இருக்கும் நமது தமிழ் சொந்தங்கள் ( அவர்களை அகதிகள் என்று கூற மனம் வருவதில்லை) 

5.வேற்று மாநிலங்களில்  இருந்து இங்கு பணி செய்வதற்காக வந்திருக்கும் நமது சகோதரிகள் (இவர்கள் முதல் மற்றும் ஐந்தாம் தவணையுடன்  ஊட்டச்சத்து பெட்டகத்தைப்பெறுவார்கள்)

6.செங்கற்சூளைகள், கரும்பு வெட்டும் இடங்கள், சுரங்கங்கள், கட்டிடங்கள் ,கட்டுமானப்பணிகள்  போன்றவற்றில் கூலிகளாக வேலை செய்யும்  நிரந்தர தங்குமிடமற்ற நாடோடிகள் ஆகியோருக்கு நடமாடும் மருத்துவக்குழு மருத்துவர் அல்லது அந்த பகுதி அரசு மருத்துவர் அவர்களது நிலை குறித்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் இந்த உதவி பெற இயலாது ? 

1.அரசுப்பணியாளர்கள் அல்லது அரசுப்பணியாளரை  கணவராக கொண்ட கர்ப்பிணிகள் 

2.பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ள மக்கள் தங்களாகவே விரும்பி இந்த பயன் வேண்டாம் என்று கூறாதவரை  கிட்டத்தட்ட அனைவரும் இதற்கு தகுதி பெற்றவர்களே 

3.இரண்டுக்கும் மேற்பட்ட கர்ப்பங்கள் 

முதல்  தவணை ரூபாய் 2000  பெற மேற்சொன்ன தகுதிகளுடன்  நீங்கள் கர்ப்பம் உறுதியான முதல் 12 வாரங்களுக்குள்  கிராம/ நகர சுகாதார  செவிலியரிடம்  பதிவு செய்து PICME  எண் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைக்கு சென்று அரசு மருத்துவர் உங்களது கர்ப்பத்தை உறுதி செய்ய வேண்டும்.  

எடை, உயரம் , ரத்த அழுத்தம் போன்றவை சோதித்து கர்ப்ப கால  பரிசோதனை அட்டையில் குறித்து PICME  மென்பொருளிலும்  தகவலேற்றம்  செய்யப்பட்டிருக்க  வேண்டும். இத்துடன் உங்களது ஆதார்  எண்ணை  சமர்ப்பித்து கர்ப்பிணி பேரில் அங்கீகரிக்கப்பட்ட  தேசிய வங்கிகளுள்  ஏதேனும்  ஒன்றில் சேமிப்பு கணக்கு தொடங்கி அந்த வங்கி கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு நிதி உதவித்திட்டம்

பணப்பரிவர்த்தனை முழுவதும் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். மூன்று மாத இறுதிக்குள் உங்களது கணக்கில் ரூபாய்.2000 , முதல் ஊட்டச்சத்து பெட்டகமும்  கிடைக்கும்

ஊட்டச்தத்து (Nutrition kit) பெட்டகத்தில் என்னென்னவெல்லாம் இருக்கும் ?

1. கர்ப்பிணித் தாய்க்கு ஒரு கிலோ  ஊட்டச்சத்து மாவு 

2. இரும்பு சத்து டானிக் 200 மில்லி கொண்டது - மூன்று எண்ணிக்கை 

3. ஒரு கிலோ பேரீச்சம் பழம்

4. *புரதச்தத்து* நிரம்பிய பிஸ்கெட்டுகள்  - 500 கிராம்கள் 

5. ஆவின் நெய் - அரைக்கிலோ 

6. அல்பென்டசோல்  எனும் வயிற்றுப்புழு  நீக்க மாத்திரை - இரண்டு 

7. கைத்துண்டு  (1)

Must Read: கர்ப்பிணிகளுக்கு துத்தநாகம் கொண்ட உணவுகள் ஏன் முக்கியம் தெரியுமா?

இரண்டாம் தவணையாக ரூபாய் 2000 இரண்டாவது ஊட்டச்சத்து பெட்டகமும் கர்ப்பிணி தன் நான்காவது மாதத்திற்கு பின் பெற முடியும். 

இவற்றைப்பெற தகுதிகள் யாது ? 

1. குறைந்த பட்சம் இரண்டு முறை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு செக்அப்  வந்திருக்க வேண்டும். 

2. அந்த செக் அப்களின் போது  கர்ப்பிணிகளுக்கு போடப்படும் ரணஜன்னிக்கு  எதிரான தடுப்பூசிகள் முறையாக போட்டிருக்க  வேண்டும் 

3.ரத்த வகை என்னவென்று கட்டாயம் சோதித்திருக்க  வேண்டும். (blood grouping and typing )  

ஹீமோகுளோபின் அளவு, சிறுநீரில்  புரதம் மற்றும் சர்க்கரை பரிசோதனை ,உயரம் ,எடை ,ரத்த சர்க்கரை அளவுகள் ,எச்.ஐ.வி பரிசோதனை ,ஒரு முறையாவது அல்ட்ரா சவுண்ட்  பரிசோதனை செய்திருக்க வேண்டும். மேற்சொன்ன விசயங்களை முறையாக செய்த கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது தவணை ₹2000 + இரண்டாவது ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். 

இரண்டு முறைக்கு மேல் கர்ப்பம் தரித்தவர்கள் (High ORDER BIRTH)   மற்றும் வேறு மாநிலத்தவர்களுக்கு(migrants)  இரண்டாவது தவணை பணம் கிடைக்காது. ஊட்டச்சத்து பெட்டகம் மட்டும் கிடைக்கும்.

மூன்றாவது தவணை ₹4000  பெறுவதற்கு 

அரசு மருத்துவமனைகள் அல்லது அரசு அங்கீகரித்த  தனியார் மருத்துவமனைகளில்  பிரசவம் பார்த்திருக்க வேண்டும்.  இரண்டு பிரசவங்களுக்கு மேல் இந்த மூன்றாவது தவணை கிடைக்காது. மேலும் முதல் பிரசவமாக (Primi)  இருப்பின் PPIUCD  எனும் கர்ப்பபையில்  காப்பர் டி வைத்து அடுத்த பிரசவத்தை தள்ளிப்போட வேண்டும்.

அதற்கடுத்து வரும் நான்காவது மற்றும் ஐந்தாவது தவணையை  மூன்றாவது தவணையை பெற்றவர்களால்  மட்டுமே பெற முடியும். அதாவது அரசு மருத்துவமனைகளில் அல்லது அரசு அங்கீகரித்த  மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்தவர்கள் மட்டுமே 3,4,5 ஆம் தவணையை பெற முடியும்.

எப்போது நான்காவது தவணையான  ₹4000 கிடைக்கும் ?

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு முறையாக தடுப்பூசிகள்  போட வேண்டும். மூன்றாவது பெண்டாவேலண்ட்  ஊசியை 105 ஆவது நாள் போட்டு முடித்தால்  இந்த 4வது தவணை பெற தகுதி வந்து விடும்.

ஐந்தாவது இறுதி தவணையான  ரூபாய் 2000 பெற என்ன தகுதி ? 

குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து பனிரெண்டு மாத்ததிற்குள்  Measles rubella தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். இப்படி ஒரு பெண்  கர்ப்பமடைந்தது  முதல் குழந்தை பிறந்து அதற்கு தடுப்பூசிகள் முழுமையாக கொடுப்பது உறுதிசெய்யப்படுவதற்கு ஏதுவாக நலத்திட்டத்தை  வைத்திருக்கும் ஒரே மாநிலம் நமது தமிழகம் மட்டுமே. இந்த நலத்திட்ட உதவிகளை கர்ப்பிணிகள் பயன்படுத்திக் கொள்ளவும் 

-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா , பொது நல மருத்துவர், சிவகங்கை

#PICMEScheme #TNGovtScheme #pregnantwomenscheme 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments