சர்க்கரை நோய் பாதித்த ஏழை குழந்தைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை.. கோவை மருத்துவரின் கனிவான சேவை!
தைராய்டு துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்கின்ற நோக்கத்தில் நண்பர்கள் சிலர் பரிந்துரை செய்ததின் பேரில் 9 மாதங்களுக்கு முன்பு கோவை மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் அவர்களை சந்திக்க சென்றேன். காலை 8 மணியளவில் ரத்த மாதிரியை கொடுத்து விட்டு வேறு அலுவல்களை முடித்து விட்டு 3 மணிநேரம் சென்றபின் வரலாம் என கிளம்பிவிட்டேன்.
அதே போல் திரும்பி வந்த பின்னர் 30 நிமிடங்களில் அழைக்கப்பட்டு தைராய்டு குறித்து எளிய மொழியில் அருமையான விளக்கத்தை கொடுத்து அந்த குறைபாட்டிற்கான மருத்துவம் என்ன என்பதை விளக்கி மருந்துகள் பரிந்துரைத்து அவற்றை எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து குறிப்பிட்டு அனுப்ப மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் எடுத்துக்கொண்ட நேரம் 15 நிமிடங்களுக்கு மேல்.
Must Read: சித்த மருத்துவ அனுபவ நுணுக்கங்களைச் சொல்லும் தமிழில் வெளியாகும் முதல் புத்தகம்…
இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது எப்பொழுதும் சூழலை கவனமாக பார்வையிடுவதும் அங்குள்ள சிலருடன் உரையாடுவதும் எனது வழக்கங்களில் ஒன்று. அதுவே ஓரளவு இந்த சமூகத்தின் ஓட்டத்தை அறிய செய்கிறது. எனவே, அடுத்தடுத்து வந்த மாதங்களில் பின் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள அங்கே சென்றிருந்தேன்., அப்பொழுதுதான் கவனித்தேன் ஏரளமான குழந்தைகள் பெற்றோர்களுடன் , நீரிழிவு மற்றும் தைராய்டு மருத்துவரிடம் இவ்வளவு குழந்தைகளுக்கு என்ன வேலை என அறிந்தபோது உள்ளபடியே மனம் கனத்துப்போனது
ஏனெனில் ஏறத்தாழ அனைத்து குழந்தைகளும் நீரிழிவு -1 அதாவது மரபியல் சார்ந்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , பெரும் பொருளாதார பின்புலமோ இன்னும் சொல்ல போனால் சமுகத்தின் விளிம்பு நிலை குடும்பங்களையும் காண நேர்ந்தது.

விசாரித்து அறிந்து கொண்ட விபரங்கள் யாதெனில் ஏறத்தாழ 1200 பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் அவர்களிடம் சிகிச்சை பெறுகின்றனர். கொஞ்ச செலவு அல்ல, மாதம் 3000 முதல் 20000 வரை நீரிழிவின் வீரியத்தை பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் செலவாகிறது, அனைத்தும் இலவசமாகவே செய்கிறார்.
இவை அனைத்தும் மருத்துவரின் வருவாய் மற்றும் அவரின் அறக்கட்டளை வாயிலாக பெரும் நன்கொடைகள் வாயிலாகவே செய்கிறார், அது மட்டுமல்ல வாரம் இருமுறை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இலவச நீரழிவு முகாம் நடத்த செல்கின்றார்.
மருத்துவர் மட்டுமின்றி அங்குள்ள ஒவ்வொரு செவிலியரின் செயல்பாடுகளை கவனித்தேன் , உள்ளன்போடு , உரிமையோடு ஒவ்வொரு குழந்தைகளின் பெயரை சொல்லி அழைப்பதும், திடிரென்று மருந்தையும் தாண்டி நீரிழிவின் அளவுகள் ஏறும்போது பதட்டத்துடன் அணுகும் பெற்றோர்களிடம் கனிவுடன் உரையாடி, பதட்டத்தை தனித்து மேற்கொண்டு சிகிச்சைகளை அளிப்பதும், அதே அளவு பண்பு செவிலியர்கள் தவிர்த்து அங்கு பணி புரியும் ஒவ்வொருவரிடத்திலும் கண்டேன்,

மருத்துவர் கிருஷ்ணன் சாமிநாதன் அவர்களின் இதயங்கள் அறக்கட்டளை கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு எதிரே உள்ள டாக்டர் ஜெகநாதன் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் மதுரம் டயாபடீஸ் அண்ட் தைராய்டு சென்டரும் இருக்கிறது. இங்கு காத்திருப்பென்பது பேரண்டத்தின் மொத்த அன்பையும் கண்டு உணரும் ஆலயமாகவே உணரலாம்.
Must Read: கர்ப்பிணிகளுக்கு துத்தநாகம் கொண்ட உணவுகள் ஏன் முக்கியம் தெரியுமா?
பொருள்தேடி அலையும் பொருளற்ற வாழக்கை பயணம் இது, பொருள்பட வாழ்பவர்கள் மிக சிலரே , அந்த வகையில் மருத்துவர் திரு.சுவாமிநாதன் என்னை பொறுத்தமட்டில் இறை தூதர் என்றே சொல்வேன். இன்றைய தேதியில் அதிக பொருளீட்டும் துறை நீரிழிவு , பெரும் மருத்துவ அமைப்புகளில் பணிசெய்து சமூகத்திற்கான தனது பங்களிப்பை அங்கிருந்து செய்ய இயலாது என்பதை உணர்ந்து கடும் இன்னல்களுக்கிடையே தனியாக மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விழிப்புணர்வு சொற்பொழிவாற்றுகிறார். நல்ல அறிமுகத்துடன் நட்பாக தொடர்ந்தாலும் எந்த முறையும் தனது அறக்கட்டளை குறித்தோ அதற்கான நன்கொடை குறித்தோ ஒற்றை வார்த்தை பேசவில்லை.
இருப்பினும் அவரின் செயல் பேசுகிறது.இறைசக்தியும் இயற்கை பேராற்றலும் மருத்துவருக்கும் அவர்தம் குழுவினருக்கும் என்றென்றும் துணைநிற்கட்டும். டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் அவர்களின் சேவை குறித்து அறிய இதயங்கள் அறக்கட்டளையின் இணையதள முகவரி https://idhayangal.org/
#coimbatoredrKrishnanSwaminathan #drKrishnanSwaminathan #diabetesinchildren
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More