பலரையும் இயற்கை வேளாண்மைக்கு திருப்பும் குறிக்கோளுடன் விவசாயி பெருமாள்…
இயற்கை விவசாயிகள் குறித்த அறிமுகம்
இயற்கை விவசாயம் செய்யும் பெருமாள்
வேளாண் நுணுக்கங்களை சொல்லும் விவசாயி
தனது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட, பெங்களூருவில் செய்துகொண்டிருந்த கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி இருக்கிறார் இயற்கை விவசாயி திரு.பெருமாள் அவர்கள்.
உங்க வயசு என்னங்க என்று கேட்டதற்கு, ‘அந்த காலத்துல எங்க சார் வயசக் குறிச்சு வச்சோம்…’ என்றவர் ‘சுமார் ஐம்பது… ஐம்பத்து இரண்டு இருக்கும்… …’ என தனது வயதை அனுமானத்துடன் சொல்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் கிராமத்தில் இருக்கிறார் இந்த இயற்கை விவசாயி! பாலாக் கீரை, தண்டுக் கீரை, சிறுகீரை போன்றவை தரையில் நிமிர்ந்துகொண்டிருக்க, கூடவே பாகலும், பீர்க்கனும், புடலும் கொடியேறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
‘பாகலையும் பீர்க்கனையும் ஒரே நேரத்தில் விதைத்தால், பாகற்கொடியப் பீர்க்கன் தூக்கி சாப்டுட்டு வளந்துடும்… அதனால மொதல்லய்யே பாகல விதச்சி கொடியேத்தி விட்டுட்டு அப்புறம் தான் பீர்க்கன விதைப்பேன்…’ என்று கொடியேற்றும் நுணுக்கத்தைச் சிரித்துக்கொண்டே எடுத்துச்சொன்னார்.
துணையின்றி தனி மனிதராக தனது காய் மற்றும் கீரைகளை இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதரவின்றி கவனித்து வருகிறார். கேரட், பீட்ரூட், முள்ளங்கி… இவை மூன்றும் சேர்ந்து அவரது நிலத்திற்கு நிறமூட்டுகின்றன. ‘பலரையும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்புவதே எனது குறிக்கோள்…’ என கண்கள் தெறிக்கப் பேசுகிறார்.
இவரது நிலத்தில் விளையும் பாலாக் கீரைக்கோ அப்படியொரு சுவை! முளைத்திருக்கும் கொத்தமல்லிக் கீரைக்கோ மதிமயக்கம் சுகந்தம்… கீரைகளைக் கொத்தாகவும், காய்களை மொத்தமாகவும் கொடுத்துவிட்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார். இயற்கை விவசயம் குறித்து பல அனுபவ தத்துவங்களையும் பேசுகிறார்.
இயற்கை விவசாயி திரு.பெருமாள் அவர்களிடம் இயற்கையான விளைபொருட்களை நேரடியாக வாங்க 97868-71212 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்
(இயற்கை விவசாயிகள் சார்ந்த கட்டுரைகள் தொடரும். திருப்பத்தூர் பகுதியில் இருக்கும் இயற்கை விவசாயிகள் 9944457603 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்)
#organicagri #agriculture #agrispotvisit #organicfarming
ஆரோக்கியசுவை அங்காடியில் பொருட்களை வாங்க இங்கே கிளிக் செய்யவும்
Comments