டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு… இனி செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாட்டின் உணவு ஆதாரமாகத்திகழும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் போதுமான பாசன தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய சாகுபடி குறுவைதான். குறுவை சாகுபடி பலன் தருவதும், பொய்த்துப்போவதும் தென்மேற்கு பருவமழை காலத்தை நம்பியே இருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலம் என்பது ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் முடிவதாகும்.
Must Read: மாடித்தோட்டம் அமைக்க வேண்டுமா? தோட்டக்கலை துறை வெளியிட்ட அறிவிப்பு...
கடந்த 2022ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்த தால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. போதுமான மழை பெய்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தது. இருப்பு இருந்த நீர் திறந்து விடப்பட்டதால் சாகுபடி சிறப்பாகவே இருந்தது.
5.6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி
எனவே, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை டெல்டா விவசாயிகளிடம் மட்டுமின்றி, வேளாண்துறை அதிகாரிகளிடமும் அதிகம் இருந்தது. இதனால்தான் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 5.6 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை சாகுபடி பயிரிடப்பட்டிருக்கிறது.
ஆனால், இவற்றில் போர்வெல் போட்டிருக்கும் விவசாயிகளின் 1.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர், மேலும் 1.15 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் ஆகியவை மட்டுமே முழுமையாக விளைந்து அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளார்.
பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிரில் இதுவரை 73 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 80 சதவிகித நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இந்த முறை 2 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெற்பயிரின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் முழுமையாக விளைந்து அறுவடை செய்வது கடினமே என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சம்பா சாகுபடி என்ன ஆகும்?
பருவநிலை மாற்றத்தின் காரணமாக பருவமழை உரிய நேரத்தில் தொடங்கி, உரிய நேரத்தில் முடிவடைவதில் சிக்கல் நேர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதீத கோடை வெப்பம் நேரிட்டது. இந்த ஆகஸ்ட் மாத த்திலும் கூட கோடை போல வெப்பம் தகிக்கிறது. எனவே இந்த பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது, சாகுபடி காலம் ஆகியவற்றில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறுவை சாகுபடி காலம் ஏறக்குறைய முடிவுக்கு வர உள்ளநிலையில் அடுத்துவர உள்ள சம்பா பருவ காலத்தை உரிய முறையில் திட்டமிடுவதே உகந்ததாக இருக்கும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கருதுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில், 3.37 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில், 3.75 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில், 1.62 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில், 1.80 லட்சம் ஏக்கர் என, மொத்தம் 10.55 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடைபெறக்கூடும் என்று வேளாண் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டார் வசதியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கும் விதமாக நாற்றாங்கால் பணிகளைத் தொடங்கி உள்ளனர். அதே நேரத்தில் ஆற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகளிடையே சம்பா சாகுபடி தொடங்குவதற்கு தயக்கம் நிலவுகிறது.
செப்டம்பர்மாதம் தென்மேற்கு பருவமழை முடிவடையும் நேரத்தில் லேசாக மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருக்கிறது. எனவே சம்பா சாகுபடியை தொடங்கி விடலாம் என்று நினைக்கின்றனர்.
Must Read: “நான் ஏன் விவசாயி ஆனேன்..” தோனியின் வேளாண் ஆர்வம்
அக்டோபர், நவம்பர்,டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்குப்பருவமழை காலம் என்பதால் அந்த காலகட்டத்தில் வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரளவுக்கு மழையை பெறக்கூடும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருக்கிறது. எனவே சம்பா பயிர் சாகுபடியே இப்போது டெல்டா விவசாயிகளின் நம்பிக்கையாக இருக்கிறது.
இனி என்ன செய்ய வேண்டும்?
மாறி வரும் பருவமழை சூழல், டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சூழல், மேட்டூர் அணையை எப்போது திறக்க வேண்டும் என்ற விவசாயிகள் விருப்பம், மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடி பரப்பை திட்டமிட்டுவது, குறுவை சாகுபடிக்கு பதில் சம்பா சாகுபடியை ஊக்குவிப்பது, கடைமடை விவசாயிகளை காப்பதற்கான தனி சாகுபடி திட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு ஆய்வை தமிழ்நாடு வேளாண்துறை டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அப்படியான ஒரு ஆய்வுக்குப் பிறகு, தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஒரு வேளாண் சாகுபடி திட்டத்தை விவசாயிகளிடம் முன் வைத்து அவர்களின் சம்மத்துக்குப் பிறகு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும்.
-ரமணி
#distressdeltafarmers #distressfarmers #deltafarmers #guruvaicraps
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments