இயற்கை சூழலில் இனிதே நடைபெற்று முடிந்த மூலிகை மருத்துவ பயிற்சி…


இயற்கை வெளியில் மூலிகை மருத்துவப் பயிற்சி நடத்த வேண்டுமென்பது எனது நீண்டகால திட்டம். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணையின் உரிமையாளர் ஐயா இறையழகன் அவர்களிடம் பேசும்போது, மறுப்பேதும் தெரிவிக்காமல் இசைவு தெரிவித்தார்.  

மழை மற்றும் பல்வேறு இடர்களைத் தாண்டி செப்டம்பர் 9-ந்தேதி பயிற்சி நடத்த திட்டமிட்டு சிறப்பாகவே நடத்தி முடிக்கப்பட்டது. பெயர் பதிவு செய்தவர்களில் பலர் பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை என்றாலும் குறிப்பிட்ட நபர்களைக்கொண்டு நடத்தப்பட்டது. 

பண்ணையில் நுழைந்ததும் ஐயா இறையழகன் அவர்களது ஆலோசனைப்படி அவரது பண்ணையில் உள்ள கொய்யா இலைகள், எலுமிச்சைச் சாறு மற்றும் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைக் கொண்டு தயாரித்த தேநீர் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டிராக்டர் மூலம் பண்ணை சுற்றிக் காண்பிக்கப்பட்டது. பிறகு மண் குளியல் மற்றும் பம்ப் செட் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆனந்தக் குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Must Read: உரிய பரிசோதனை, உணவுமுறை மாற்றமே உடல் நலத்தின் அடிப்படை…

நண்பகல் வேளையை நெருங்கினாலும் பசி தெரியவில்லை. இருந்தபோதிலும் (எனது மனைவி மற்றும் எனது சகோதரி ஆகியோர் தயாரித்த) மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த கஞ்சி மற்றும் கொள்ளுத்துவையல் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அனைவரது அறிமுகத்துடன் மூலிகை மருத்துவ பயிற்சி வகுப்பு தொடங்கியது. தொடக்க நிகழ்வாக ஐயா இறையழகன் அவர்களிடம் பாரம்பரிய மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது. 

மூலிகை பயிற்சி முகாம்

செடிகளும், மரங்களும் சூழ்ந்த இயற்கை வெளியில் பூச்சிகள் கடித்தால் முதலுதவியாக மட்டுமன்றி முழுமையான மருத்துவமாக அமைய வேண்டுமென்ற நோக்கத்தில் அந்த பெட்டகத்தை நான் தயாரித்தேன். அதில் வேலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களது ஆலோசனையின்பேரில் நிலவேம்பு சூரணம் இடம் பெற்றுள்ளது. பூச்சிகள் கடித்தால் சிறிதளவு இந்த சூரணம் சாப்பிடுவது பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். 

அதேபோல் பாரம்பரிய மருத்துவ அடிப்படையில் சுண்ணாம்பு, மிளகு, கல் உப்பு போன்றவற்றை வழங்கினேன். கடி பட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவினால் அது விஷத்தை முறித்துவிடும். அதேபோல் ஒரு வெற்றிலை, மூன்று மிளகு, கல் உப்பு ஒன்று சேர்த்து மென்று சாப்பிட்டாலும் விஷம் முறிந்துவிடும். அந்த அடிப்படையில் இந்த பாரம்பரிய மருத்துவ பெட்டகம் உருவாக்கப்பட்டது. அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய முதலுதவி பெட்டகம் இது.

இயற்கை ஆர்வலரும், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பவருமான அகிலா குணாளன் அவர்களது கைப்பக்குவத்தில் தயாரான சீரக சம்பா அரிசியில் சமைத்த உணவு மதிய உணவாக வழங்கப்பட்டது. இணை உணவாக வெண்டைக்காய் கூட்டு, வரகு அப்பளம், இயற்கையில் விளைந்த எலுமிச்சை ஊறுகாய், வேர்க்கடலை - பொரிகடலை - முந்திரி - நாட்டுச்சர்க்கரை கலவையில் தயாரித்த இனிப்பு உருண்டை பரிமாறப்பட்டது. மாலையில் கொழுக்கட்டை, சுக்கு காபி, நவதானிய சுண்டல் வழங்கப்பட்டது.

இயற்கை சூழலில் நடைபெற்ற மூலிகை மருத்துவ முகாம்

நிகழ்வில், ஐயா இறையழகன் மற்றும் பலர் இயற்கை மருத்துவத்தால் தாங்கள் அடைந்த பலன்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர். அதேபோல் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவரான கார்த்திக் அவர்கள் இயற்கை, உணவு, மருத்துவம் குறித்து பேசினார். 

Must Read: சித்த மருத்துவ அனுபவ நுணுக்கங்களைச் சொல்லும் தமிழில் வெளியாகும் முதல் புத்தகம்…

சிறப்பாக ஐயா இறையழகன் அவர்களது பண்ணையில் விளைந்த இயற்கை மஞ்சள் தூள் மற்றும் பக்கத்தில் உள்ள பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கொண்டு வந்த தூய மல்லி அரிசி, இயற்கை முறையில் விளைந்த நிலக்கடலை போன்றவற்றை மக்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். மேலும், நான் எழுதிய பாரம்பரிய இயற்கை மருத்துவம், வைத்தியம் ஆகிய புத்தகங்களையும் சிலர் வாங்கிச் சென்றனர். 

சென்னை மாத்தூர் பகுதியில் இயற்கை சார்ந்து செயல்படும் அத்திக்குழுவின் நிறுவனர் வானவன் அவர்கள் கொடுத்த மரபு ரக காய்கறிகள் மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டது. எங்கள் வீட்டில் வளரும் மாயன் கீரை மற்றும் நடவு செய்வதற்காக மாயன் கீரை குச்சிகள் தரப்பட்டது.

ஹோமியோபதி மருத்துவர், அலோபதி மருத்துவரில் தொடங்கி இயற்கை அங்காடி நடத்துபவர், இயற்கை விளைபொருள்கள் மற்றும் மதிப்புக்கூட்டுபவர், ஐ.டி பணியாளர் என பலரும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

-எம்.மரியபெல்சின்

#healthylifestyle #learnhealthylifestyle  #lifestyletraining 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments