கோடைகால இயற்கை உணவுகள்; உடல் சூட்டை குறைக்கும் நுங்கு, வெண்பூசணி…
அண்மையில் காலை உணவாக நுங்கு சாப்பிட்டோம். எங்கள் பகுதியில் செயல்படும் அத்திக்குழுவின் தலைவர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் கொடுத்த இளம் நுங்கு சாப்பிட சுவையாக இருந்தது. காயுடன் அப்படியே வாங்கி வந்து ஆக்ஸாபிளேடால் அறுத்து ஸ்பூனால் நுங்கை எடுத்து சாப்பிட்டோம். வெறும் நுங்கை மட்டுமல்லாமல் அதையொட்டியிருக்கும் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு. அப்படியே சாப்பிட்டோம்.
இளம் நுங்கு என்பதால் அந்த தோலின் துவர்ப்புத்தன்மை குறைவாகவே இருந்தது. கோடை தொடங்கிவிட்டது. நுங்கு சாப்பிட்டு உடல்நலம் காத்துக்கொள்ளுங்கள்.குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கும் நுங்கு, கோடை காலத்துக்கு ஏற்ற இயற்கை உணவு.
Must Read: புரதத்தால் கிட்னிக்கு ஆபத்து, கொழுப்பால் இதயத்துக்கு ஆபத்து என்பது சரியா?
குறிப்பாக உடல் சூட்டைப் போக்கவும் வியர்க்குரு, சிறுநீர்க்கடுப்பு, அம்மை போன்ற நோய்களில் இருந்து காக்கவும் நுங்கும், பதநீரும் பெரிதும் உதவும். நுங்கு, கோடை நோய்களைப் போக்குவதுடன் வைட்டமின் பி, சி சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
கோடையில் அம்மை நோய்கள் பரவும். நோய் தாக்கியவர்கள் இளம் நுங்கைச் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதுடன், குடலில் உள்ள சிறு சிறு அம்மைப்புண்களும் ஆறும். அம்மை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் இது உதவும்.
வியர்க்குரு தொல்லையால் அவதிப்படுபவர்கள் நுங்கு சாப்பிடுவதுடன் அதை வியர்க்குருவின் மேல் தடவி வருவது நிவாரணம் தரும். தோல் எரிச்சல், தோல் சிவத்தல் போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு மேலே பூசுவது நல்லது. பசியைத் தூண்டுவதுடன் குமட்டலைக் கட்டுப்படுத்தி தண்ணீர் தாகத்தைப் போக்கும். ஆகவே கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், அசிடிட்டி பிரச்னைகளைச் சரிசெய்யும். நுங்கு நீர் நிறைந்தது என்பதால் அது வயிற்றை நிரப்பி அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கும். இதனால் வேறு உணவுகள் உண்பதைக் குறைத்து கொள்ள நேரிடும். இது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். நுங்கில் உள்ள ஆந்தோசையனின் என்னும் பைட்டோகெமிக்கல் மார்பகப் புற்று நோய் செல்கள், கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
நுங்கில் அதன் சதைப்பகுதியை மட்டுமல்லாமல் அதன் மேல் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டால்தான் முழுமையான சத்து கிடைக்கும். ஆனால், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு அது செரிமானமாகாது என்பதால் நசுக்கிக் கொடுப்பது நல்லது.
வெண்பூசணி அல்வா
வெண்பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இதை ஜூஸாக அருந்திவந்தால் இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தலைசுற்றல் மட்டுமன்றி வயிற்றுப்புண், அசிடிட்டி பிரச்சினை சரியாகும். உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதுடன் உடல் சூட்டினைக் குறைக்கும். சிறுநீரகத்தொற்று சரியாவதுடன் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க உதவும்.
வெண்பூசணிக்காயுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரைத்து ஜூஸாக அருந்தலாம். இது வெயில் வேகமெடுக்கும் காலம் என்பதால் உடல்சூடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ஏதாவது ஒருவகையில் வெண்பூசணி சாப்பிடுவது நல்லது.
வெண்பூசணி உடல் எடையைக் குறைக்கும் என்று சொல்லப்படும் அதேவேளையில் சூட்டைக் குறைப்பதால் அது உடல் எடையை அதிகரிக்க உதவும் என்றும் சிலர் சொல்கிறார்கள். எடை விஷயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பதே உண்மை. ஆனால், உடல் சூட்டினைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்துவதுடன் புற்றுநோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக இருக்கிறது. அதனால் மிக தாராளமாக சாப்பிடலாம்.
Must Read: இயற்கை பொருட்களை விற்கும் நேர்மை மிக்க இளைஞர்….
வெண்பூசணியை அல்வா ஆக சுவையான சிற்றுண்டியாக செய்தும் உண்ணலாம். அல்வா செய்முறை பெரிதாக ஒன்றுமில்லை... பூசணிக்காயின் உள்பகுதி மற்றும் தோலை சீவிவிட்டு நன்றாக துருவி எடுத்து வெறும் வாணலியில் போட்டு வதக்கினேன்.
எண்ணெய், நெய் எதுவும் சேர்க்கவில்லை. பூசணி நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கட்டியாகும்வரை வதக்கினேன். கடைசியில் 2 ஏலக்காய், சிறிது சுக்கு தட்டிப்போட்டேன். அடுப்பிலிருந்து இறக்கும்போது பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை சேர்த்தேன். அவ்வளவுதான்.
சாப்பிட சுவையாக இருந்தது. இதை ஏதோ பெருமைக்காக சொல்லவில்லை. எளிமையான நல் உணவுகளை நாமே தயார் செய்து உண்டு நலம்பெறலாம் என்ற நோக்கத்திலேயே நான் அவ்வப்போது இதுபோன்ற பதிவுகளை எழுதுகிறேன்.
- மரிய பெல்சின், 9551486617
#summerhealthalert #smmmerfoods #summerorganicfoods
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, ஜொமாட்டோ அடாவடி, தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments