இளைய தலைமுறையினரின் நலம் நாடும் ”மூலிகையே மருந்து”


சித்த மருத்துவர் விக்ரம் குமாரின் புத்தகம் 

மூலிகையே மருந்து புத்தகத்தின் மதிப்புரை

மருத்துவர் கு.சிவராமன் வழங்கிய மதிப்புரை

சித்த மருத்துவர் விக்ரம் குமார் எளிய தமிழில் எழுதியுள்ள மூலிகையே மருந்து நூல்  தமிழ் இந்து பதிப்பு வெளியீடாக பிரசுரம் ஆகி உள்ளது.  மூலிகையே மருந்து நூல் குறித்து மரு.கு.சிவராமன் அவர்கள் மதிப்புரை அளித்துள்ளார். அதனை இங்கு வழங்குகின்றோம். 

"1000 டிகிரியில் மட்டுமே உருக வைக்க முடியும் என்கிற ஒரு உலோகத்தை, உருக்கிப் பொடியாக்கும் இரசாயன வித்தையை 30மிலிச் சாறு நடத்திவிடும்" என்கிற உண்மையை அறியும் போது, சிலிர்க்கின்றதல்லவா? 

கண்ணுக்குத் தெரியாத குட்டி வைரசின் கொந்தளிப்பால், மளமளவென குறையும் இரத்தத்தட்டுக்களால், உடல் உருக்கலையும் நிலையில், ஒரு மடக்குச்சாறு மூலிகை அருந்த, 'இரத்தத்தட்டுக்களை ஒரு உசுப்பு உசுப்பி உயர்த்தி, அந்த நோயரை உயிர் பிழைக்க வைக்கின்றது', என்கிற செய்தி நம்மை ஆச்சரியத்தின் விளிம்பில் அழைத்துச் செல்கிறதல்லவா? 

Must Read: கொரோனா ஜேஎன்1 புதிய வகை குறித்து அச்சம் தேவையில்லை

மலேரியாவில் கொத்துக் கொத்தாய்ச் செத்து மடிந்த மனித இனத்தை, ஒருமூலிகையின் மீது நடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஆய்வில் பிறந்த மருந்து, '25மில்லியன் மக்களைக்காப்பாற்றியது',என்கிற சேதி அந்த மருந்து தந்த மூலிகையையும், அதை படைத்த ஆய்வாளரையும்  கை  கூப்பித்                தொழச் செய்கிற தல்லவா?  

ஆம்! மூலிகைகள் அசாத்தியான செயல்களைப் புரியும் சத்தமில்லா சாதனையாளர்கள்…அட! அப்பஅவையெல்லாம் 'அமேசான் காட்டிலோ, கொல்லி மலையிலோ' இருக்குமே என யோசிக்க வேண்டியதில்லை. 

நீங்கள் அன்றாடம் கடந்து செல்லும் நடைபாதையின் ஓரத்திலோ, நம் புழக்கடையிலோ, வரப்பின் விளிம்பிலோ, உணவுத் தாவரத்தின் ஊடாகவோ, களத்து மேட்டிலோ, காட்டு பாதையிலோ இருக்கும். நமக்குத்தெரிய வேண்டியது அவற்றின் அடையாளமும் அதன் அரவணைக்கும் நலவாசனையும் மட்டும்தான்; 

மருத்துவர் விக்ரம் குமாரின் நூல்

அதைத்தான் தன் வழமையில், எளிய மொழியில், காய்ப்பு உவப்பில்லாத ஆதாரங்களோடு, மருத்துவர் விக்ரம் குமார் தனது ஆறாவது நூலான "மூலிகையே மருந்தில்” மிகச் சிறப்பாகப் பரிமாறியுள்ளார். மூலிகைகளைப் பற்றி பெரிதும் நம் மூத்த தலைமுறைக்குத் தெரிந்திருந்தது. இன்னும் சில மூலிகைகளின் நுட்பங்கள், நம் மரபு மருத்துவர்களுக்கு தெரிந்திருந்தது. இன்றைய கலோரி கணக்கர்களுக்கும், ஆன்லைனில்ஆர்டர் செய்து பீட்சா சாப்பிடும் பிள்ளைகளுக்கும் இந்த பாரம்பரிய அறிவியல் முற்றிலும் தெரியாத ஒன்று. ”மூலிகையே மருந்து” அந்த இடைவெளியைக் கச்சிதமாய்ப் போக்கவந்த மிகச்சிறப்பான நூல். 

அருகம் புல்லும் ஆடாதொடையும் அக்கிரகாரமும் குப்பைமேனியும் எத்தனை அன்றாட நலச்சவால்களுக்கு 'தன்னை நசுக்கிதன் குருதியால் குணம் அளிக்கின்றது' என்கிற உண்மையைப் படிக்கும் போது தான் வாசகனுக்கு தன் தோட்டத்தில் நிற்கும் அளப்பறிய மருத்துவர்களின் அடையாளம் தெரியும். 

மரபு அறிவாய் மட்டும் இதனை கடத்தாமல், நவீன தாவரவியல் மருந்தறிவியல் சிந்தனைகளில் ஆய்வுகளில் பிறந்த புதிய ஆதாரங்களையும் கோர்த்திருப்பது, சாதிமல்லியுடன் காட்டு ஆர்கிட் மலர்களைக் கோர்த்துச்செய்த அழகிய மலர் ஆரமாக இந்த புதிய நூல் பரிமளிக்கின்றது.

Must Read: வெரிகோஸ் வெயின் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கம்…

மருத்துவர் விக்ரம்குமார் இளைய தலைமுறை சித்த மருத்துவர்களின் வீரிய அடையாளம். சித்த மருத்துவம் நெடுங்காலமாக மக்களோடு வாழ்வியலோடு வாழ்ந்த மருத்துவம். நவீன அறிவியல் ஆய்வுகளில் அதன் கூறுகள் சிலாகிக்கப்பட்டு வரும் வேளையில், அந்த தரவுகளையும் மரபின் நுட்பங்களையும் ஆகச் சிறப்பான கலவையில் அடுத்த தலைமுறை புரிந்து, அறிந்து தன்னுள் ஏற்றுக்கொள்ளும் விதமாய் எழுதும் கலையில் மருத்துவர் விக்ரம்குமார் மிகச்சிறப்பாக மிளிர்கின்றார். 

நூல் முழுக்க ஒவ்வொரு மூலிகைகளை அடையாளப்படுத்த அவர் அறிவியல் ஆவணங்களையும் வரலாற்று செய்திகளையும் கோர்த்திருப்பது இந்நூலை புதிய ஆவணமாக்குகின்றது. மூலிகைகள் குறித்து பல புதிய நூட்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில்,  "மூலிகையே மருந்து" நூலுக்கான இடம் தனித்துவமானது. 

இங்கே மட்டுமே மரபும் அறிவியலும் அழகாய் உண்மையாய் அரவணைத்து நிற்கின்றன. வாசகன் மனதில் தன் மணத்தை படு அழுத்தமாய் பதியவிடுகின்றன. ”பிறகென்ன? இந்நூல் புத்தக அலமாரியில் வைக்கவேண்டியதா? அஞ்சரைப்பெட்டியின் அருகாமையில் நிறுத்தவேண்டியதா?" என வாசகர்கள் தீர்மானிப்பார்கள். 

தன் ஒட்டுமொத்த வாழ்வை, இம்மானுடம் காக்கப்பங்களிக்கும் தன்னை அடையாளப்படுத்திய, மூலிகைகள் எல்லாம் மருத்துவர்.விக்ரம்குமாரை இருகைகூப்பிவணங்கும், தொழுகண்ணி  போல, பூனை வணங்கி போல தொட்டாற்சிணுங்கி போல.

-அன்போடு மருத்துவர். கு.சிவராமன்

மேற்குறிப்பிட்ட இந்த புத்தகம் சென்னை புத்தகத் திருவிழா  இந்து தமிழ் திசை அரங்கு எண்  540, 541 மற்றும் 56,57 இல் கிடைக்கும்.

#booksofinstagram #books #herbs #chennaibookfair2024 #Siddha


Comments


View More

Leave a Comments