இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமாரின் அறப்பணி!
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…
இலவசமாக செய்யும் மருத்துவர்
மருத்துவரின் அறப்பணி
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது செலவு பிடிக்கும் ஒரு விஷயமாகும். இதன்காரணமாகவே சிறுநீரக பழுது ஆனவர்கள் ஏழ்மை நிலையால் இறக்கவும் நேரிடுகிறது. இப்போது சென்னையில் மெட்ராஸ் கிட்னி பவுண்டேஷன் என்ற அமைப்பு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது.
மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் என்பவர்தான் இந்த அரிய அறப்பணியை செய்து வருகிறார். இவர் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவர் தான் தொடங்கியுள்ள மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் மூலம் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது என முடிவு செய்தார். இதற்காக அவர் முகநூல், , எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் வானொலியில் விளம்பரங்களை வெளியிட்டார்.
விளம்பரத்தை பார்த்து பலர் அவரைத் தொடர்பு கொண்டனர். தொடர்பு கொண்ட நோயாளிகளில் உண்மையிலேயே உதவி தேவைப்படும் நோயாளிகளைக் கண்டறிந்தார். 10 நோயாளிகளில், இறுதியாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக திருச்சியை சேர்ந்த 18 வயதான டேவிட்சன் என்ற நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது என முடிவானது.
Must Read: கோடைகாலத்தில் சருமத்தை பாதுகாக்கும் 7 உணவுகள்
ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவை சேர்ந்த டேவிட்சனுக்கு, ஏ பாசிட்டிவ் ரத்தப் பிரிவை சேர்ந்த அவரது தந்தை டேவிட் ஆபிரகாம் சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து மகன், தந்தை இருவருக்கும் அறுவை சிகிச்சைக்கு முந்தையஅனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் டேவிட்சன், டேவிட் ஆபிரகாம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர். சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் தந்தை டேவிட் ஆபிரகாமிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்று, மகன் டேவிட்சனுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.
இது மட்டுமின்றி இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான மருந்துகள் செலவு, மருத்துவமனை கட்டணம் என மொத்தம் ரூ.3 லட்சத்தை தனது சொந்த சேமிப்பில் இருந்து மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் கொடுத்தார்.
இது மட்டுமின்றி அறுவைச் சிகிச்சையில் ஈடுபட்ட மூத்த சிறுநீரக மருத்துவர் பலராமன், மயக்கவியல் மருத்துவர்கள் புவனா, பிரவீனாத் மற்றும் மருத்துவர்கள் சிவசங்கர், மணிகண்டன், தேவ், வெங்கடேஷ் ஆகியோரும் மருத்துவர் யுரேஷ் குமாரின் அறப்பணிக்கு துணை நிற்கும் வகையில் எவ்வித கட்டணமும் பெறவில்லை.
மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமாரின் அறப்பணி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. தனது பணி குறித்து இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் 1998-ம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தேன். அப்போது இருந்த திமுக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் உயர் படிப்புக்கான செலவை ஏற்றது.
Must Read: உடலின் வலு குறித்து தன்னிலை உணர்தல் அவசியம்…
அந்த திட்டத்தில் நான் பயன்பெற்றதால், கலைஞர் நூற்றாண்டையொட்டி ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளேன்.
அதன்படி, திருச்சியை இளைஞருக்கு இலவசமாக முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சக மருத்துவர்கள் எவ்வித கட்டணமும் வாங்காமல் எனக்கு உதவி செய்தனர். நல் உள்ளங்களின் உதவியுடன் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் ஏழை நோயாளிகள் மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன் அமைப்பை 9500281116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என்றார்.
#freekidneytransplantation #kidneytransplantation #kidney
Comments