உடலின் வலு குறித்து தன்னிலை உணர்தல் அவசியம்…


மலையேற்றத்தின்போது முன்னெச்சரிக்கை

உடலின் தன்மையை புரிந்து கொள்ளுங்கள்

மருத்துவரின் ஆலோசனை முக்கியம்

நடைபயிற்சி ,மலையேற்றம், நீச்சல் பயிற்சி, மிதிவண்டி பயிற்சி ,உடற் பயிற்சிக் கூடத்தில் பளுதூக்குதல், பேட்மிண்டன் விளையாடுதல் ஆகிய அனைத்தும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வெறுமனே சோம்பேறித்தனமாக படுக்கையில் படுத்துக் கொண்டும் போன்களைப் பார்த்துக் கொண்டும் இருப்பதை விடவும் இதயத்துக்கும் ரத்த நாளங்களுக்கும் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் நன்மை தரக்கூடியவை. 

ஆயினும் நமது பலம் பலகீனம் அறிந்து கொண்டு நமது உடலின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளில் ஈடுபடுவது முக்கியமான ஒன்றாகும். வெள்ளியங்கரி மலை என்றில்லை நான் மேற்கூறிய உடல் பயிற்சிகள் எதுவாய் இருப்பினும் தங்களின் உடல் எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த தன்னிலை உணர்தல் அவசியமாகிறது.

Must Read: வளரிளம் பருவத்தினருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்…

எனது நண்பன் சென்றான் நானும் செல்கிறேன் .எனது உறவினர் செய்கிறார் நானும் செய்கிறேன் என்று இண்ஸ்பிரேசன் அடைவது நல்லது ..ஆனால் அதற்கு முன்பு பின்வரும் பரிசோதனைகளை செய்து பார்த்து மருத்துவரிடம் காட்டி தங்களின் தேகத்தின் நிலை உணர்தல் அவசியம் 

ரத்த அணுக்கள் எண்ணிக்கை ,ரத்த க்ளூகோஸ் அளவுகள் ,எச்பிஏ - ஒன் - சி , சிறுநீரக செயல்திறன், கல்லீரல் செயல்திறன், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவுகள் , சிறுநீர் புரதப் பரிசோதனை ,அல்ட்ரா சவுண்ட் வயிற்று மற்றும் இடுப்பு பகுதி , ட்ரெட் மில் - ஓடும் போது ஈசிஜியில் மாற்றங்கள் வருகின்றவா? எனும் பரிசோதனை, எக்கோ  கார்டியோகிராம்   ஆகியவற்றை செய்து பார்த்து நமது உடலின் திறனை சோதித்துப் பார்த்து பிறகு அதற்கு சிறிது சிறிதாக பளு கூட்டுவதே நல்லது. 

மலையேற்றம் கவனிக்க வேண்டியவை

இதுவரை நடைபயிற்சி கூட முறையாக பல மாதங்கள் செல்லாதவர் திடீரென கடுமையான உடல் பயிற்சிகளிலோ , விளையாட்டுகளிலோ, மலையேற்றப் பயிற்சிகளிலோ ஈடுபடுவது நன்மையை விடவும் பாதகங்களை அதிகமாக்கும்


உடலுக்கு நடையோ,பளுவோ, விளையாட்டோ, சிறிது சிறிதாக குறைவானதில் இருந்து கூடுதல் என்று நாட்கள் செல்லச் செல்லக் கூட்டிக் கொண்டே செல்வதே நல்லது. விரைவாக இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை விடவும் நீண்ட காலம் இந்த வாழ்வியல் மாற்றத்தில் தொடர வேண்டும் என்ற நீண்ட கால இலக்கே சிறந்தது. பல நேரங்களில் மருத்துவர்களின் அறிவுரைகளையும் மீறி ஆன்மிக நாட்டம் கண்ணை மறைப்பதும் கண்கூடு. 

நான் கடந்த ஒரு மாதத்தில் ரமலான் மாத நோன்பு நோற்க வேண்டாம் என்று அறிவுறுத்திய சிலருள் தற்போது அவர்களாகவே அவர்களின் சுய ஆன்மிக உந்துதலின் பேரில் நோன்பு நோற்று ரத்த சர்க்கரை அளவுகளும் ரத்த அழுத்தமும் அதிகமாகி என்னை சந்திக்க வந்ததையும் பதிவு செய்கிறேன். இதனாலும் சில  மரணங்கள் நடக்கின்றன. 

இன்னும் என் மனதிற்கு நெருக்கமான தாத்தா - கொரோனா மூன்றாம் அலை சுழன்று அடித்துக் கொண்டு இருந்த காலத்தில் என்னிடம்  " சபரி மலை செல்ல இருக்கிறேன் டாக்டர்" என்றார்  நான் அவரை அன்புடன் எடுத்துக் கூறி தற்போது வேண்டாம் ஐயா  கொரோனா அலை ஓய்ந்ததும் நானே கூறுகிறேன் அப்போது செல்லுங்கள் என்றேன் 

ஆனால் அவர் கேட்கவில்லை. சபரி மலை யாத்திரை சென்றார்  அங்கு சென்று வந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் காய்ச்சல் இருமல் வந்து , கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இறந்தார். இன்னும்  அந்த இழப்பின் வடு என்னிடம் இருக்கிறது. 

இது போன்றே நீரிழிவு பாதித்த ஒரு அப்பா .. எனது அறிவுரையைப் புறந்தள்ளி கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கினார்.  கால்கள் வெந்து போய் , அவரது நீரிழிவுடன் கால் புண்ணை குணமாக்க நெடுங்காலம் எடுத்துக் கொண்டது. பல மாதங்கள் அவரால் பணிக்குச் செல்ல இயலவில்லை. 

Must Read:வியாபார கண்ணோட்டத்துடன் அணுகும் மருத்துவமனைகள்…

நான் ஆன்மிக நாட்டத்தைக் குறை கூறவில்லை. மனிதனைப் பண்படுத்த ஆன்மிகத்தின் தேவையும் இருக்கிறது.  எனினும் நமது உடல் என்ன கூறுகிறது? அதன் பலம் பலகீனம் என்ன? மருத்துவரின் அறிவுரை என்ன? என்பதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். 

எந்த சமயத்திலும் அவரவர் சக்திக்கு மேலோ அல்லது அவரது உடல் நிலையை மோசமாக்கி உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கோ சமயத்தைப் பேணுபவர்கள் மீது  சுமைகளை ஏற்றுவதில்லை.

எனவே தயவு கூர்ந்துசமயம் சார்ந்த கடமைகள் , சடங்குகள், யாத்திரைகள் என எதை முடிவு செய்வதாக இருந்தாலும் உங்களின் உடல் நிலையைப் பாருங்கள்  உடல் பயிற்சிக்கு முன் கட்டாயம் முன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்  மருத்துவரின் விருப்பு வெறுப்பற்ற மருத்துவம் சார்ந்த தேக நலன் சார்ந்த முடிவுகளை மதியுங்கள்.இதுவே சிறந்தது. 

-Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா , பொது நல மருத்துவர் சிவகங்கை

#velliangirihill  #velliangiri #velliangiritrekking #trekking

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments