இனி நானும் ஒரு விவசாயி…. சித்த மருத்துவர் சிவராமனின் அனுபவ பதிவு!


இன்னாள் இன்னும் ஒரு நன்னாள். அப்பா விவசாய அதிகாரியாக இருந்த காலத்தில் இருந்து, எனக்கு விவசாயம் குறித்து பெருமிதமும் பேரவாவும் எப்போதும் உண்டு. ஆல் இந்தியா ரேடியோவில் உழவர் உலகம் நிகழ்ச்சியில் "அன்பார்ந்த விரிவாக்கப் பணியாளர்களே! " என அப்பா விளித்துப் பேசுவதை, அப்போது அந்த மர்ஃபி ரேடியோ முன்பு கைகட்டி, கண் விரித்து நானும் என் தங்கையும் உற்றுக் கேட்ட நாட்களில், "நாமெல்லாம் நெல் சாகுபடி பண்ண முடியாதப்பா? நமக்கேன் நிலமில்லை? " என்று கேட்டபோதெல்லாம், "மணி எட்டாச்சு; வாய்ப்பாடம் படிச்சியா? ஹோமொர்க் முடிச்சியா?" என்ற மழுப்பல் பதில்தான் அவரிடம் இருந்து வரும். 

தன் இறுதி மூச்சு வரை உழவர் நலன் பற்றியே பேசியவர் அவர். பொங்கலுக்கு மட்டும் புதுச்சட்டை போட்டு சிலாகித்தவர் அவர். பின் நாட்களில், நம்மாழ்வாரின் அரவணைப்பில், உணவு அரசியல் புரிந்து, சந்தானம் சாரின் அறிவுறுத்தலில் உலகமயமாக்கச் சூழ்ச்சி அறிந்து, பூவுலகு நெடுஞ்செழியன் தோழர் அசுரன்  நட்பின் மூலம், ஆதிக்கங்கள் சத்தமில்லாமல் சூழலியலில் நடத்தப்படும் வன்முறைகளை அறிந்து எல்லாம் சேர்ந்து அதன்பின் " பிடி கத்தரி வேண்டாம் " என வெகுண்டெழ, ஊர் ஊராய்ச் சென்று நண்பர்களோடு பிரச்சாரம் செய்ய வைத்தது. இப்படியான எல்லா நகர்விலும் அப்பாவும் கலப்பையும் மண்புழுவும் அருந்தானியங்களும் என் பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் கூடவே ஒட்டியே வந்தன.

மருத்துவர் சிவராமன்

ஆனாலும் சேற்றில் இறங்கி நாற்று நடவோ, கதிரறுத்து கண்கலங்கி நிற்கவோ, பூப்பிடித்திருக்கும் பழ மரத்தை வாஞ்சையுடன் அருகாமையில் பார்த்தோ நின்றதில்லை. "மீனமிலம் அனுப்பலாமா? பஞ்சகவியம் வேணுமா? வேப்பம் புண்ணாக்கு போதுமா?"  என களத்தில் நின்று யோசித்ததில்லை. எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும் சிந்தனையோடும் தேடுதலோடும் மட்டுமே.

இன்று,  மேற்சொன்ன அத்தனையையும் துளியும் அறம் வழுவாது, மரபையும் அறிவியலையும் அழகாய் ஒருங்கிணைத்து,  இயற்கை வேளாண்மை செய்துவரும் பாமயன் அண்ணன் மற்றும் 100விவசாய நண்பர்களுடன்,  பொதிகைச் சோலைக் கூட்டுப்பண்ணையில் என்னையும் இணைத்துக் கொண்டேன். பாமயன் அண்ணனுடன் தோழமைகள் கருப்பசாமி, இளம்பரிதி, கஜேந்திரன்,துடிப்புமிக்க விவசாயி ராஜா முதலிய பல நண்பர்களுடன் வானத்தை தொட்டு நிற்கும் பொதிகை மலையும் என்னை அத்தனை அன்போடு அங்கு அரவணைத்துக் கொண்டது. 

பொதிகைசோலையில் மருத்துவர் சிவராமன்

களத்தில் கனவுகளுடன் நடக்கையில்,  இரத்தசாலி நாற்றங்கால்கள் புன்னகைத்தன. வெங்காயமும் மிளகாயும் இணையர்களாய் கைகோர்த்து நின்ற களம் என் காதில் வந்து கவி சொன்னது. ஒரே வயலில் 25 க்கும் மேற்பட்ட மரபு வாழைமரங்கள் தன் அழகிய பசுமைப் பேரிலைகளால் சாமரம் வீச, மட்டிப்பழக் குலையும் சாம்பல் கதலிக்குழையும் வெடிச்சிரிப்புடன் வரவேற்றன.

பொட்டு ரசாயனமும் கலக்காத நிலத்தில், விளைந்த தூயமல்லிச்சோறில், சுண்டைக்காய் குழம்பு ஊற்றி, வழுதுணங்க்காய் பொரியல் (அவ்வை சொன்ன வழுதுணங்காயே) மூக்கரட்டை கீரைகூட்டுடன் 'மிதுக்கு வற்றல்' தொட்டு சாப்பிட்டு, எழுந்த போது என்னோடு சேர்ந்து, என் வயிற்றில் வசிக்கும் கோடானு கோடி உயிரிகளும் கும்பிட்டது. பை நிறைய வெங்காயமும் மிளகாயும் தோழமைகள் கொடுத்து வழியனுப்ப, இன்று முதல் விவசாயியானேன். இனி பொதிகை கூட்டுப்பண்ணையில் நானும் ஒரு விவசாயி!

 

கட்டுரை, படங்கள் நன்றி; -சித்தமருத்துவர். சிவராமன்

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 




 


Comments


View More

Leave a Comments