ரேஷன் கார்டு இல்லை, உணவு இல்லை, பசியில் தவிக்கும் கிராமத்து மக்கள்


 

50வயதான பித்தைய்யா என்ற பெண் தாம் வைத்திருக்கும் பாத்திரங்களில் ஏதாவது மாவு அல்லது கஞ்சி வைக்க அரிசி கிடைக்குமா என்று பார்க்கிறார். எந்த பாத்திரத்திலும் எதுவும் இல்லை. கடைசியாக இருந்த சிறிது கோதுமை மாவை வைத்து நேற்று இரவே உணவு தயாரித்து பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கு இதுவரை உணவு கிடைக்கவில்லை. என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கிறார். பசியால் வாடும் தம் குழந்தைகளை நினைத்தபடி, வேலைக்கு செல்லமுடியாமல் கொரோனா முழு அடைபால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது மனம் கலங்கி நிற்கிறார் அந்தப் பெண்.உத்தரபிரதேச மாநிலம் பந்தா மாவட்டம் குச்பந்த்தியா தியேரா கிராமத்தில் வசிக்கும் பித்தைய்யா போல பலருக்கு ரேஷன்கார்டு இல்லை. எனவே எப்போதுமே அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில்லை. வேலைக்குப் போனால் கிடைக்கும் சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.கொரோனா வைரஸ் பரவலால் இப்போது முழு அடைப்பால் வேலையும் இல்லை. இவர்கள் மட்டுமல்ல.

இந்திய கிராமங்களில் பலரது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் பசியற்று இருப்பது கூட வெளி உலகத்துக்கு தெரிவதில்லை என்பதுதான் இன்னும் கொடூரம். ரேஷன் வழியே கூடுதலாக 6 கிலோ உணவுப் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த மாதம் 26-ம் தேதி அறிவித்தது. ரேஷன் கார்டு இருப்பவர்கள்தான் இந்த உதவியைப் பெற முடியும். உபி உள்ளிட்ட வடமாநிலங்களில் 2013-16க்குப் பிறகு ரேஷன்கார்டு தகவல்கள் புதுபிக்கப்படவில்லை. கடந்த நான்கு வருடங்களாக விடுபட்டவர்கள் எண்ணிக்கையில் இருப்பவர்கள் எந்த தகவலும் அணுகாத இதுபோன்ற ஏழைகள்தான். மத்திய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பயன்பெறுவர்கள் 80 கோடி மக்கள் மட்டும்தான். மீதம் உள்ள 50 கோடிப்பேர் பசியாற வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு படுக்க வேண்டும்.

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்குத்தான் உதவி என்பதை விடுத்து, அந்தந்த கிராமங்களில் இருக்கும் ஏழை எளியவர்களை  கிராம நிர்வாக அதிகாரிகளை வைத்து கண்டுபிடித்து மக்களின் பசியை போக்க அரசுகள் முன் வரவேண்டும்.

ஜார்கண்ட் மாநிலம் பாங்குரு கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பத்தினரும் இப்போது பட்டினியில் வாடுகின்றனர். இவர்கள் அனைவரும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் அன்றாடக் கூலிகள். முழு முடக்கத்துக்குப் பிறகு வேலைக்கும் செல்லவில்லை. பசித்த வயிறுகளோடு யாராவது தங்களது துயர் துடைக்க வருவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மிகவும் ஏழ்மையான மாநிலம் என்று வர்ணிக்கப்படும் ஜார்கண்ட் மாநிலத்தில் 8 லட்சம் ஏழைகளுக்கு ரேஷன்கார்டு இல்லை. இவர்களில் சிலருக்கு தன்னார்வ நிறுவனங்கள் உதவிகள் அளித்துவருகின்றன. எனினும் பலர் பட்டினியில் வாடுகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வுக்காக ஒளியேற்றினர். ஆனால், பசியால் வாடுகின்றவர்கள் வீட்டில் வயிறுதான் எரிந்தது. அவர்களின் பசியை முதலில் போக்குங்கள். அவர்கள் வீட்டின் அடுப்பு எரிவதை உறுதி செய்யுங்கள். அப்புறம் வீட்டில் விளக்கு ஏற்றுவோம்.


Comments


View More

Leave a Comments