மழைகாலத்துக்கு ஏற்ற உணவு வகைகள்


தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. காற்றில் குளிர்ச்சி கலந்து  தென்றல் காற்றாக வீசுகிறது. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவது உண்டு.

மழைகாலத்தில் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், அதற்காக மிகவும் பொறித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மழைகாலத்தில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

மழைகாலத்தில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.  பால், தயிர், நெய், வெண்ணைய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஆனால், மோர் சாப்பிடலாம்.

நீர்சத்துகள் மிகுந்த வெள்ளரி, பீர்க்கன், புடலை, பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்த்து பிற அனைத்து காய்கறிகளையும் சமைத்து சாப்பிடலாம்.  அதே நேரத்தில் பழங்களை சாப்பிடலாம். குறிப்பாக வாழைப்பழமும் சாப்பிடலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்களை சாப்பிடலாம். ஆனால், சிலருக்கு மழைகாலத்தில் இது ஒத்துக்கொள்ளாது. அத்தகையவர்கள் ஜூஸ்கள் குடிப்பதை தவிர்க்கலாம்.

மழைகாலத்தில் கீரைகள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கீரைகளை தண்ணீரில் நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். மதிய உணவில் தூதுவளை ரசம் வைத்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு சிறந்தது. இரவு தூங்குவதற்கு முன்பு பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. இனிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் சாப்பிட வேண்டும். மழைகாலங்களில் முடிந்த அளவு மிளகு அல்லது மிளகு பொடி சேர்த்து உணவு சமைப்பது நல்லது.


Comments


View More

Leave a Comments