நிறைவுறா கொழுப்பின் அனுமதி அளவு 3 சதவிகிதமாக குறைப்பு...
உணவுப் பொருட்களில் உள்ள நிறைவுறா கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை 5 சதவிகித த்தில் இருந்து 3 சதவிகிதமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை அதிகார அமைப்பு குறைத்திருக்கிறது. உணவு வல்லுநர்களின் நீண்டகால கோரிக்கையை மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை இப்போது நிறைவேற்றி இருக்கிறது.
எண்ணைய்,கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள தொழிலக நிறைவுறா கொழுப்பை முற்றிலும் அகற்றுவதுதான் இந்தியாவின் திட்டமாகும். கொழுப்பு , எண்ணைய் உணவுகளில் நிறைவுறா கொழுப்பின் சதவிகிதம் என்பது 5 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இது 2021 ஆம் ஆண்டு 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு 2 சதவிகிதமாக குறைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து அரசு வெளியிட்ட அறிவிக்கையில், 2021 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் கொழுப்பு மற்றும் எண்ணைய் கொண்ட உணவுப் பொருட்களில் நிறைவுறா கொழுப்பின் சதவிதம் 3 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொழிலக நிறைவுறா கொழுப்பு என்பது விஷம் அடங்கிய மூலக்கூறுகளைக் கொண்டதாகும். தொற்றா வாழ்வியல் நோய்களுக்கு வித்திடுவதுடன், இதய நோய்களையும் இவை உருவாக்கும். உணவுப் பொருட்களை, எண்ணைய் வகைகளை கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்படும்போது இது போன்ற நிறைவுறா கொழுப்புகள் அந்த உணவில் அல்லது எண்ணையில் சேருகின்றன. இதன் அனுமதிக்கப்பட்ட அளவைத்தான் இப்போது 3 சதவிகிதமாக மத்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு குறைத்துள்ளது. குறிப்பாக பேக்கரி உணவுகள், வனஸ்பதி எண்ணைய் வகைகள், இனிப்பு வகைகள் தயாரிக்கப்படும் வனஸ்பதி மற்றும் வறுக்கப்படும் உணவுகளில் நிறைவுறா கொழுப்பு இருக்கிறது.
Comments