மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது?


 

வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்கும் வகையில்தான் எப்போதும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மூக்குப்பிடிக்க அல்லது வயிறு முட்ட சாப்பிடக் கூடாது என்றும் நமது முன்னோர்கள் அறிவுரை சொல்கின்றனர்.

ஆனால், நாவின் சுவையை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும்போதோ அல்லது நல்ல ஒரு உணவகத்திலோ மூக்குபிடிக்க சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. அப்படியான சமயங்களில் என்ன செய்வது?

ஒரு மதிய வேளையில் நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டால், நீங்கள் அடுத்த வேளைக்கு கொஞ்சம் குறைவாக சாப்பிடுங்கள்.  அடுத்து சாப்பிடும் உணவு காய்கறிகள், பழங்கள் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதிகமாக சாப்பிட்ட முந்தைய உணவு செரிப்பதற்கு அடுத்த உணவு உதவும்.

 

அதிகமாக சாப்பிட்டாலும், கொஞ்சமாக சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு இனிப்பு அல்லது ஒரு குளிர்ச்சியான ஐஸ்கிரீம் சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. உணவு முடித்த உடன் குளிர்ச்சியான பொருளையோ அல்லது இனிப்பான பொருளையோ சாப்பிடக் கூடாது. இதனால், செரிமாண சக்தி பாதிக்கப்படும்.

ரொம்பவும் அதிகமாக சாப்பிட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் அப்படியே ஒரு இருபது நிமிடத்துக்கு வாக் போகலாம். நடைப்பயிற்சி என்றால், விறு விறு என்று நடப்பதல்ல. வயிற்று முட்ட சாப்பிட்டிருப்பதால் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு நடப்பதால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும்.

வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியமானதாக இருக்கும். அப்போதுதான்  உணவின் ஜீரண சக்தி வலுப்படும். உணவை கழிவாக்கும் பணியை தண்ணீர்தான் செய்கின்றது. எனவே  மூக்குப் பிடிக்க சாப்பிட்டதாக உணர்ந்தீர்கள் என்றால், வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது உங்களின் குடலுக்கு நல்லது.


Comments


View More

Leave a Comments