சரிவிகித சத்துணவில் உப்பு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?


உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த சரிவிகித சத்துணவு பற்றி நேற்று பார்த்தோம்.
சரிவிகித சத்துணவில் உப்பு எவ்வளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதுகுறித்து இன்று பார்க்கலாம். 
உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழி கூறுகிறது. ஆனால், இன்றைய அவசரக்கால யுகத்தில் பலருக்கு ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்பட்டுள்ளது. ரத்தக்கொதிப்பு, இதயநோய் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு ஆட்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதை முற்றிலும் குறைப்பது அல்லது தங்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப உப்பின் அளவை குறைத்துக் கொள்வது என்று உணவுப் பழகத்தை மேற்கொள்கின்றனர். 
உலகசுகாதார நிறுவனத்தின் பரிந்துரையில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பு அதாவது ஒரு டீ தேக்கரண்டி உப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறது. 
உணவு சமைக்கும்போது உப்பு குறைந்த அளவில் சேர்க்கும்படியும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. உப்பு நிறைந்த உப்புக் கருவாடு போன்றவற்றை உண்ணுவதைத் தவிர்க்கும்படி கூறி உள்ளது. 
பாட்டிலில் அடைக்கப்பட்ட அல்லது உலர் உணவுகளை எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத உலர் காய்கறிகள், பாதாம்பருப்பு மற்றும் முந்திரிப்பருப்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 
சாப்பிடும்போது மேசையில் அல்லது அருகில் உப்பு பாட்டிலை அல்லது உப்பைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். வித்தியாசமான சுவையை விரும்புவர்கள் உலர் மூலிகைகள் அல்லது மசாலா பொருட்களைப் பயன்படுத்தி உண்ணலாம். 
உணவு பாக்கெட்கள் அல்லது உணவு பாட்டில்களில் உள்ள லேபிளில் சோடியம் குறைவாக உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணவும். 
உப்பு அளவோடு இருந்தால் அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற புதுமொழியை கடைப்பிடிக்கலாம். 
நாளை கொழுப்புச் சத்துள்ள உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம். 

Comments


View More

Leave a Comments