கொரோனா இரண்டாவது அலையால் முடங்கும் உணவுத்தொழில்…


இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளன. 

சென்னையைப் பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள் செயல்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. 

முக கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்ற கட்டுப்பாடுகளை வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உணவு விடுதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து சென்னையில் உள்ள உணவகங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளன. 

 இது குறித்து உணவகங்களின் உரிமையாளர்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக உணவகத் தொழில் மோசமாக பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.ஸ்ரீனிவாச ராஜா அளித்துள்ள பேட்டியில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறித்த செய்திகள் வெளியானதும், எங்கள் உணவகங்களின் 35 சதவிகித விற்பனை சரிந்து விட்டது. இது போன்ற ஏற்ற இறக்கங்கள் உணவு தொழிலுக்கு நல்லதல்ல என்பதால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம்,” என்று கூறி இருக்கிறார். 

சென்னை போன்ற பெருநகரங்களில் வார இறுதியில் குடும்பம், குடும்பமாக உணவகங்களின் உணவு உண்பது என்பது ஒரு பழக்கமாக மாறி வருகிறது. கொரோனா இரண்டாவது அலை அதிகரித்திருப்பதை அடுத்து நேற்று இன்றும் வார விடுமுறையில் உணவகங்களுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. வார இறுதி விடுமுறைக்கான உணவகங்களில் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பதிவை ரத்து செய்துள்ளனர். 

சினிமா திரையரங்குகளுக்கு சென்று விட்டு, அப்படியே உணவு உண்டுவிட்டு வருவதும் வார விடுமுறை நாட்களின் வழக்கமாக இருக்கிறது. இப்போது திரையரங்குகளில் 50 சதவிகிதம் அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதால், அதனோடு இணைந்த உணவு தொழில் பாதிப்படைந்துள்ளது கண்கூடாக தெரிகிறது. 

சென்னை ஹோட்டல்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரவி, சனிக்கிழமை அன்று உணவு விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே  நிலை நீடித்தால் சில உணவகங்கள் மூடப்படக் கூடும். எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் விற்பனை குறையும் போது எப்படி நாங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் ? என்று கேள்வி எழுப்புகிறார். 

கொரோனா காலத்தின் முதல் அலையின் போதே சென்னையில் உள்ள பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. அதிக கிளைகளைக் கொண்டு செயல்பட்ட சரவணபவன் உணவகம் தங்களின் தி நகர் வெங்கட்நாராயணா ரோடு கிளை, பாண்டி பஜார் கிளை, ஸ்பென்சர் பிளாசா கிளை உள்ளிட்ட சில கிளை உணவகங்களை மூடிவிட்டது. இப்போதும் அதே நிலை தொடரும் என்று உணவகங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

-பா.கனீஸ்வரி 

#CoronaSecondWave   #FoodIndustry    #RestaurantsCloser 

Comments


View More

Leave a Comments