சைதை மாரி ஹோட்டல் வடகறி ஸ்பெஷல்
இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாக இருப்பது வடகறி. வடகறி என்பது பெயருக்கு ஏற்ப வடதமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாரி ஹோட்டல் நிறுவனம்தான் வடகறியை முதன்முதலில் உருவாக்கியது.
இந்த ஹோட்டலின் மாரிமுத்துதான் வடகறி எனும் டிஷ்-ஐ இந்த சுவை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாரி ஹோட்டலை நடத்தி வருகிறார் இந்த மாரிமுத்து.
வாடிக்கையாளர்கள் இவரது பெயரை சுருக்கி மாரி கட, மாரி கட என்று அழைத்து மாரி ஹோட்டலாக அது பெயர் பெற்று விட்டது. இத்தனைக்கும் கடைக்கும் போர்டு கூட இல்லை. உணவின் தரமும், வடகறியின் சுவையும் சென்னை மக்களை இந்த ஹோட்டலை நோக்கி ஈர்த்து விட்டது. இப்போது வடகறி தமிழகம் தாண்டி ஆன்லைனில் உலகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டது.
கறிக்குழம்பு வைப்பது போலத்தான் வடகறியை இவர்கள் தயாரிக்கிறார்கள். பட்டைகிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு பேஸ்ட் , வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். கிரேவியாக மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய் தூளை சேர்க்கின்றனர். இது கொதி வந்ததும் பக்கோடாவைப் போட்டு மீண்டும் ஒரு கொதிக்க வைத்து வடகறி தயாரிக்கின்றனர்.
வடகறியின் விற்பனைதான் நாளுக்கு நாள் அள்ளுகிறது. தினமும் 5 முறைகளுக்கு மேல் வடகறி தயாரிக்கின்றனர். அப்படியும் சீக்கிரமே தீர்ந்து போய் விடுகிறது. வந்து ஏமாந்தவர்கள் மறுநாள் சீக்கிரமே வந்து வடகறியை வாங்கிச் செல்கின்றனர்.
Comments