பனிகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள்


மார்கழிப் பனியின் விளைவாக, காண்போருக்கெல்லாம் ஜலதோஷம், சளி, மூக்கொழுகல், இருமல், முக வீக்கம், காய்ச்சல் என தொல்லைகள் தொடர்கின்றன.

பனிப்பிரதேசங்களைவிட நம் பகுதியில் பனியின் அளவு குறைவே என்றாலும், அந்தப் பனியை எதிர்கொள்வதில் நாம் காட்டும் அக்கறையின்மையே எல்லாவற்றுக்கும் காரணம். மாலை முதல் விடியற்காலை வரையிலான நேரங்களில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் அலர்ஜி உள்ளவர்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். அவர்களைத்தவிர மற்றவர்கள் காலையில் கண்விழித்ததும் சூடான நீரில் முகம் கழுவுவது, வெந்நீர் அல்லது சூடான காபி, டீ அருந்துவது, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது போன்றவை மிகவும் அவசியம். காலை உணவும் சூடாக இருக்க வேண்டும். பிரச்சினை ஏதும் இல்லை என்றால் மட்டும் சாதாரண நீரை அருந்தலாம். மற்றவர்கள் சுட வைத்து ஆறிய நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும். மற்றபடி பகல்வேளைகளில் எந்தக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்தாதீர்கள். `நான் வருஷக்கணக்கா தயிர் சாப்பிடுறேன், கூல் வாட்டர் குடிக்கிறேன். அதனால என்னோட பழக்கவழக்கத்தை என்னால மாற்றமுடியாது' என்று சொல்லும் பலரை பார்க்கமுடியும். வீண் பிடிவாதம், வெட்டி கவுரவத்துக்காக இதைச் செய்யாதீர்கள். தொடர்ந்து சில நாள்கள் சோற்றுடன் தயிரைக் கலந்து இரவு உணவு உண்ட நண்பர் நெஞ்சுச்சளியால் அவதிப்பட்டது தனிக்கதை. ஆகவே, கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள்.

மழை மற்றும் பனிக்காலங்களில் காலை உணவாக தோசை செய்தால் அதனுடன் முசுமுசுக்கை இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்து கலந்து தோசை சுட்டு சாப்பிடுங்கள். கல்யாண முருங்கை இலை கிடைத்தால் அதை வடையாகவோ, மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிடுங்கள். டீ போடும்போது இஞ்சி, துளசி சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சித் துவையல், சுண்டவற்றல் குழம்பு, பூண்டுக் குழம்பு செய்து சாப்பிடுங்கள். சுண்டவற்றலுடன் சம அளவு ஓமம் சேர்த்து வறுக்க வேண்டும். அவற்றுடன் சிறிது வறுத்த மிளகைச் சேர்த்துப் பொடியாக்கி இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். சளி பிரச்சினை இருந்தால் இரவில் பூண்டுப்பால் செய்து குடியுங்கள். 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பால் + நீர் பாதியாக வற்றியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம், மலச்சிக்கல் சரியாகும்.

இருமல், ஜலதோஷம், சளித்தொல்லை இருந்தால் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் சிறிது கற்பூரம் கலந்து அது கரைந்ததும் நெஞ்சு, முதுகு, விலா, உள்ளங்கால் என தேய்த்துவிட்டு தூங்கினால் நிம்மதியாக தூங்கலாம். இரவில் மின்விசிறி, ஏ.சி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் அதன் கீழே படுக்காமல் சற்று விலகி உறங்குவது நல்லது. இவற்றைச் செய்தால் மார்கழிப் பனியின் தொல்லைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளலாம்.

 

செய்தி நன்றி; திரு.மரியபெல்சின்

 

 

 


Comments


View More

Leave a Comments