மளிகை பொருட்கள் வாங்கும்போது இந்த எட்டு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்


மளிகைக்கடைக்கு செல்வதற்கு முன்பு சில விஷயங்களை அவசியம் மனதில் கொள்ள வேண்டும். பட்டியலை கொடுத்து விட்டு, டோர் டெலிவரி செய்யச் சொல்வதெல்லாம் ஓகேதான். ஆனால், நீங்களே நிதானமாக, திட்டமிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்குவது பல விஷயங்களில் நல்லது. ஒரு சில மணி நேரங்கள் மளிகை கடைகளில் நீங்கள் செலவிட தயங்கினால், பல மணி நேரம் ஒரு மருத்துவமனையில் இருக்க நேரிடும் சூழல் உருவாகும். எனவே மளிகைப் பொருட்களை திட்டமிட்டு வாங்குங்கள்.

எந்த பொருட்களை வாங்க வேண்டும். எந்த பொருட்களை வாங்க க் கூடாது என்பதை முதலில் திட்டமிடுங்கள்.

விரிவான திட்டமிடல் தேவை

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் மளிகை கடைக்கு செல்வது அல்லது சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்வது நம்மில் பலருக்கு வழக்கமாக இருக்கிறது. எந்த வித திட்டமிடலும் இல்லாமல் கடைக்கு சென்று கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் பையில் அள்ளிப்போட்டுக்கொண்டு வருவதுதான் நம்மில் பலருக்கு பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது.  இனி அப்படி செய்யாதீர்கள். என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்போகிறீர்கள் என்ற பட்ஜெட் முக்கியம்

நம்மிடம் எவ்ளவு பணம் இருக்கிறது என்று அறிந்து அதற்கு ஏற்றவாறு பொருட்களை வாங்க வேண்டும். பில் போட சொல்லிவிட்டு, கையில் பணம் இல்லாமல் அல்லது டெபிட் கார்டில் பணம் இல்லாமல் தவிக்க வேண்டாம். பட்ஜெட்டை முன்கூட்டியே திட்டமிடுவதால், தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

காலாவதியாகும் தேதியை சரிபாருங்கள்

திட்டமிட்ட பொருட்களை பட்டியலிட்டபின்னர், அந்த பொருட்களை வாங்கும்போது , பொருட்களின் காலாவதி தேதி உணவு பொருள்பாக்கெட்டின் மேல் அச்சிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். விரைவில் கெட்டுப்போகும் பொருட்கள், பால் பொருட்களை காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

பசியோடு இருக்கும்போது மளிகை கடைக்கு செல்லாதீர்கள்

நல்ல பசிவேளையில் மளிகை கடைக்கு செல்லும் நீங்கள், துரித உணவுகள், பிஸ்கட் பாக்கெட்கள், இனிப்புகள், நொறுக்கு தீனிகளை வாங்குவதற்குத்தான் முதலிடம் கொடுப்பீர்கள். ஆரோக்கியமற்ற உணவுகளை அவசரம் அவசரமாக தேர்வு செய்து வாங்குவீர்கள். எனவே பசியோடு இருக்கும்போது மளிகை பொருட்கள் வாங்க செல்லாதீர்கள்.

புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்காதீர்கள்

புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் ஆன பொருட்களாக இருக்கலாம். அவற்றில் பூஞ்சைகள் போன்றவையும் இருக்கலாம். மிகவும் அவசியம் வாங்கத்தான் வேண்டும் என்று நினைத்தால், அவற்றின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது நல்லது.

பொருட்கள் வாங்கும் முன்பு யோசனை செய்வது நல்லது

ஏதோ ஒரு விளம்பர உந்துதலில் பொருட்களை வாங்குவது நல்லதல்ல. அந்த பொருள்  நமது அன்றாட பயன்பாட்டுக்குத் தேவையா என்பதை அறிந்து நன்றாக ஆழ்ந்து சிந்தித்து பொருட்களை வாங்குவது அவசியம். நமக்கு அவசியம்தானா என்ற முடிவுக்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

லேபிளில் உள்ளதை படித்து வாங்குங்கள்

பாக்கெட்களில் உள்ள லேபிளில் இருக்கும் சேர்க்கைப் பொருட்கள், சத்துகளின் சதவிகிதம் ஆகியவற்றை பார்த்து மளிகைப் பொருட்களை வாங்குவதும் முக்கியமான ஒன்று.  கொழுப்பு, புரதம், இனிப்பு, செயற்கை சுவையூட்டிகள் போன்றவற்றின் சதவிகிதம் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து வாங்குங்கள்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வாங்குவதை தவிருங்கள்

சூப்பர் மார்க்கெட்களில் வைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்ச்சி வகைகளை வாங்காதீர்கள். இவற்றில் நுண்ணூட்ட சத்துகள் குறைவாகவே உள்ளன. பிரஷ்ஷான மீன், சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி வகைகளை வாங்குவது நல்லது.

-பா.கனீஸ்வரி

#GroceryShopping  #EightPointsForGroceryShopping  #ImportantPointsForShopping


Comments


View More

Leave a Comments