குழந்தைகளின் பசியை போக்கும் ஆசிரியை ஜெயமேரி


 

 “நான் குழந்தையாக இருக்கும்போதே அப்பா இறந்து விட்டார். என் கூடப்பிறந்த அண்ணன்கள் நாலு பேர், அக்காக்கள் இரண்டு பேர் என எல்லோரையும் என் தாய்தான் கஷ்டபட்டு வளர்த்தாங்க. நான் இன்னைக்கு அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கேன்னா அதுக்கு காரணம் என் தாயும், அவர் சத்துணவு ஆயாவாக இருந்தபோது அவர் எங்களுக்கு சத்துணவை ஊட்டி வளர்த்ததும்தான் காரணம். இன்னைக்கு சமூகத்தில் உயர்ந்திருந்தாலும், என்னைப்போல குழந்தைகள் கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சுத்தான் இந்த சேவை செய்கின்றேன்” என்கிறார்  விருதுநகர் மாவட்டம் மடத்துப்பட்டியை சேர்ந்த ஜெயமேரி.  

 

கடவுள் கொடுக்கிறார்

குடும்பத்தின் கடினமான சூழல்களில் வளர்ந்தவர், இன்றைக்கு அரசு பள்ளி ஆசிரியை ஆக பணியாற்றும் போதும், தம்மை போல எளிய சூழல்களில் வளர்ந்து வரும் சிறுவர், சிறுமியரின்  வயிற்றுப் பசிக்கு உணவு அளிக்கும் உன்னதப்பணியை செய்து வருகிறார்.  இந்த சமூகத்தில் உதவும் உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்று அதன் வாயிலாக மடத்துப்பட்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் நூறு குழந்தைகளுக்கு தினமும் உணவு அளித்து வருகிறார். அவரிடம் ஆரோக்கிய சுவை இணையதளத்தின் சார்பில் பேசினோம்.

“சிறு வயதில் கஷ்டப்பட்டேன். கடவுள் இப்போது எனக்கு தேவையானதைக் கொடுத்திருக்கின்றார். கடவுள் எனக்குக் கொடுப்பதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து வருகின்றேன்” என்கிறார் மகிழ்வுடன், “2004 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் உலகினிப்பட்டியில் முதன்முதலில் ஆசிரியை ஆகப் பணியாற்றினேன். பின்னர் எனக்கு டிரான்ஸ்பர் கிடைத்து மடத்துப்பட்டி அரசு பள்ளிக்கு வந்தேன். இங்கே இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இருக்கின்றேன். சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகள், துப்பரவு தொழிலாளர்கள்தான் வசிக்கின்றனர். அந்த பெற்றோரும், அவர்களின் குழந்தைகளும் ஒருவேளை மட்டுமே உண்கின்றனர். சிலநேரம் அதுவும் கூட இல்லாமல் இருக்கின்றனர்.

 

பசியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகள்

காலை உணவு உண்ணாமல் வரும் குழந்தைகள்

பசியை போக்க நீண்ட உதவிகரம்

 

 

இந்த எளியவர்களின் பிள்ளைகள் எங்கள் பள்ளியில் படிக்கின்றனர். பசியோடு இருக்கும் சமூகத்தை தினந்தோறும் பார்த்து வந்தேன். தொடர்ந்து அதனை வெறுமனே பார்த்து வருவது மனதில் வேதனையை ஏற்படுத்தியது. வழக்கம்போல ஒருநாள் குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அதில் ஒரு குழந்தை மட்டும் பாடத்தை கவனிக்க முடியாமல் சோகத்தில் இருந்தது. சத்துணவு பெல் அடித்ததும், ஓடிப்போய் தட்டை எடுத்துக் கொண்டு முதல் ஆளாக ஒடியது. இது எனக்குள் பெரும் கேள்வியை எழுப்பியது. குழந்தை பசியோடு இருந்தது புரிந்தது. பின்னர் என் வகுப்புப் பிள்ளைகளிடம் விசாரித்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலை உணவே சாப்பிடுவதில்லை என்றனர். பெற்றோர் பட்டாசு தொழிற்சாலைக்குப் போனபிறகு பைக்கட்டுக்குள் முதலில் தட்டை எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் புத்தகங்களை  எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து விடுவார்கள். 12 மணிக்கு சத்துணவு சாப்பிடுவதற்காக பசியோடு காத்திருப்பார்கள்.  சில குழந்தைகள் பசி தாங்காமல் பாடத்தைக் கூட கவனிப்பதில்லை என்று புரிந்தது. அதன்பின்னர் தினமும் நான் என் வகுப்பு குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகள் வாங்கிக் கொடுத்தேன். சத்துணவு சாப்பிடும் வரை அந்த நொறுக்குத்தீனி அவர்களின் பசியைப் போக்கியது” என்றார் ஜெயமேரி.

வாரத்தில் ஒரு நாள்

“என் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டும் இது போல கொடுத்தேன். என் வகுப்பில் இருந்து தேர்ச்சி பெற்று மூன்றாம் வகுப்புப் போன குழந்தை ஒன்று, திடீரென்று என்னிடம் ‘டீச்சர், இப்போ எங்களுக்கு பசிக்குது.திங்கதுக்கு நொறுக்குத் தீனி இல்லை’ என்று சொன்னது. அப்போதுதான் இதில் உள்ள நிதர்சனத்தை உணர்ந்தேன். அதன் பின்னர்தான் அனைத்து வகுப்புகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் நொறுக்குத்தீனி கொடுக்க ஆரம்பித்தோம். முதலில் என் சொந்த செலவில் அனைத்து குழதைகளுக்கும் வாங்கிக் கொடுத்தேன். கடலை உருண்டை போன்ற சத்துமிக்க நொறுக்குத்தீனிகள் வாங்கிக் கொடுத்தேன். தினமும் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து வந்தது” என்று வருத்தத்தை நம்மிடம் ஜெயமேரி பகிர்ந்து கொண்டார்.

குழந்தைகளுக்கு இணை உணவு கொடுப்பதை ஜெயமேரி தமது முகநூலில் பகிர்ந்திருந்தார். “நான் முகநூலில் பதிந்திருந்தைப் பார்த்து விட்டு ரயில் கரங்கள் என்ற அமைப்பும்,  ரவி சொக்கங்கலிங்கம் , கனடாவில் இருந்து முருகா நந்தன் ஆகிய உதவும் உள்ளம் கொண்டவர்கள், எங்கள் பள்ளியில் தினமும் இணை உணவு கொடுக்கும் திட்டத்துக்கு உதவ முன்வந்தனர். மாதம் தோறும் எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு பணமாக கொடுத்தனர். அதனை கொண்டு பள்ளியில் படித்த 130 குழந்தைகளுக்கும் கேப்பை ரொட்டி , கடலை உருண்டை போன்ற இணை உணவுகளை தினந்தோறும் ஒன்று என கொடுத்து வந்தோம். பசியோடு வரும் குழந்தைகள் கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது. இதனைப் பாராட்டும் விதமாக தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன்” என்றார் பெருமிதத்துடன்.  

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் விருது பெறும்போது அவரிடம், தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். செயல்படுத்துவதாக அமைச்சர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

 

ஊரடங்கு காலத்திலும் உதவி

 

2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டதால் பசியால் தவித்துப் போன குழந்தை ஒன்று, ஜெயமேரிக்கு போன் செய்து, டீச்சர் பசிக்குது என்று சொல்லி இருக்கிறாள். அதிர்ச்சியடைந்த ஜெயமேரி, கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தார். பிறகு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்ததால் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்களையும் குழந்தைகளின் வீடுகளுக்கு கொடுத்து வந்தார். தனி ஒரு ஆளாய் இந்தப் பணியை செய்ய முடியாது என்பதால், அவரது கணவரும் இதற்கு உதவி கரம் நீட்டினார். தேவையான பொருட்களை வாங்கி வருவது, அதனை குழந்தைகளின் வீடுகளுக்குக் கொண்டு போய் கொடுப்பது ஆகிய  பணிகளையும் அவருடைய கணவர் செய்திருக்கிறார்.

“அட்சயதிரிதை அன்றுதான் இந்தப் பணியை ஆரம்பித்தோம். மடத்துப்பட்டியில் உள்ள 30 குழந்தைகளுக்குக் கொடுத்தோம். பின்னர் குழந்தைகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. இப்போது 100 குழந்தைகள் வரை தினமும் உணவு கொடுக்கின்றோம். முகநூலில் நான் இதுபற்றிய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன். அதை பார்க்கும் பிறர், தங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றின் போது இதுபோல உதவுவதாக கூறி எனக்கு பணம் அனுப்புகின்றனர். அவர்களின் உதவியால்தான் இன்றளவும் என்னால் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடிகிறது” என்றார்.  
 

ஆசிரியையும் அம்மாதான்

குழந்தைகளுக்கு பள்ளியில் பாடம் எடுப்பது, பின்னர் பாடம் எடுப்பதற்காக வீட்டில் குறிப்புகள் எடுப்பது என்று ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி அதிக சுமை கொண்டது. அதற்கு மத்தியில் இந்த சேவையை எப்படி செய்ய முடிகிறது என்று கேட்டபோது நம்மிடம் பேசிய ஜெயமேரி, “குழந்தைகள் எங்களை ஆசிரியைகளாகப் பார்ப்பதில்லை. ஒரு அம்மாவாகத்தான் பார்க்கின்றனர். எங்களுக்கும் குழந்தைகளை பார்க்கும் போது ஒரு அம்மாவின் உணர்வுதான் ஏற்படுகிறது. குழந்தைகளை யாரும் சுமையாகப் பார்ப்பதில்லை. சுமையாக கருதுவதில்லை. அவர்களை பார்க்கும்போது சுமைகள் எல்லாம் மறந்து விடும்,” என்று சொன்னவர். “இது போன்று தினந்தோறும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும்பணி தொடரக்கூடாது என்றுதான் நினைக்கின்றேன். பசியில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று கூறினார்.

குழந்தைகளின் பசி தீர்க்கப்படுவதால், ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள தனித்திறமைகள் வெளிப்படுகின்றன. குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குள் அசாத்திய திறமைகள் ஒளிந்திருக்கின்றன. திறமைகளை வெளிக்கொணர்வதற்காக குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான செயல் என்ன என்று கேட்டு அவர்களை ஜெயமேரி ஊக்குவித்து வருகிறார். இப்போது கொரோனா கால விடுமுறை என்பதால் ஊரில் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து ஓவியம் வரைதல், அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி கூறுதல் ஆகிய பணிகளை செய்து வருகிறார். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி விளையாட்டு பொருட்கள் செய்வது. சின்னசின்ன அறிவியல் கருவிகளை செய்வது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கின்றார்.

“சாதிப்பதற்கு வயது, வறுமை, பின்னணி எதுவுமே தடைஇல்லை. குழந்தையின் மனதைப் புரிந்து கொண்டு பெற்றோர், ஆசிரியர்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேணடும்,” என்றவர், இன்னொரு வேண்டுகோளை முன்வைத்தார். “சமூகத்தில் பல்வேறு தளங்களில் கோடிக்கணக்கான ரூபாயை அறப்பணிகளுக்காக செலவு செய்பவர்கள், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பசியைப் போக்குவதற்கும், அரசு பள்ளி மாணவர்கள்திறன்களை வளர்ப்பதற்கும் தேவையான நிதியை அளிக்க வேண்டும். தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள பள்ளியை தத்தெடுத்து இதை அவர்கள் செய்தால் போதுமானது” என்று முடித்தார்.

அவரது வேண்டுகோள் நிறைவேறட்டும்.

-பா.கனீஸ்வரி

#BharathiSanthiya  #FreeFoodForChildren  #HelpToPoorChildren  #JayameriTeacher  #TeacherJayameri


Comments


  • R Ravikumar

    அருமை! பணி தொடர வாழ்த்துக்கள்.

    Feb, 23, 2021
View More

Leave a Comments