ஸ்விக்கி ஊழியர் பிரச்னை முடிவுக்கு வந்தது
ரெஸ்டாரெண்ட் உணவுகளை வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்விக்கி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த கொரோனா காலகட்டத்திலும் கூட ஸ்விக்கி ஊழியர்கள் உணவு விநியோகத்தில் தடையின்றி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் ஊதியம் குறைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 14ம் தேதி திடீரென வேலை நிறுத்தம் தொடங்கினர். இதனால், சென்னையில் வாடிக்கையாளர்கள் உணவு விநியோகம் தடைபட்டது. ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து சம்பந்தபட்ட ஊழியர்களிடம் நாம் பேசியபோது, “வழக்கமாக வழங்கும் ஊக்கத்தொகையில் இருந்து 50 முதல் 60 சதவிகிதம் அளவுக்கு குறைத்து விட்டனர். இதர மாத , வார ஊக்கத்தொகைகளையும் நிறுத்தி விட்டனர். ரெஸ்டாரெண்டில் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்டர் எடுத்துக் கொண்டு ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாடிக்கையாளர் வீட்டுக்குக் கொண்டு சென்று கொடுத்தால் 35 ரூபாய் மட்டுமே கொடுப்பதாக இப்போது கூறுகின்றனர். இதற்கு முன்னர் 70 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தோம். இப்போது பாதியாக குறைந்து விட்டது. பெட்ரோல் செலவு, தினமும் உணவு செலவு போக 50 சதவிகிதம் தான் மிச்சமாகிறது. வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களுக்கு ஏற்ப ஊக்கத்தொகை என்பதை மாற்றி எண்ணிக்கை அடிப்படையில் ஊக்கத்தொகை தர வேண்டும்.
இலக்கு அதிகரிப்பு, 2015-ல் சேரும்போது ஒரு ஆர்டருக்கு 50 ரூபாய் இருந்தது. 3 கிலோ மீட்டருக்குள் இந்த தொகை கிடைக்கும். இது 2016 கடைசியில் 40 ரூபாய் ஆனது. 36 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக குறைத்து 15 ரூபாய் ஆக குறைக்கப்பட்டது. இவ்வளவு தொகைக்கு டெலிவரி செய்தால், இவ்வளவு ஊக்கத்தொகை என்று நிர்ணயித்துள்ளனர். கொரோனாவுக்குமுன்பு மாத ஊக்கத்தொகை என்பது தின ஊக்கத்தொகையாக மாறியது. நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் வரை கிடைத்தது. போனவாரம் வியாழக்கிழமை அன்று தினமும் 300 ரூபாய் மட்டுமே கிடைத்தது. 8 ரூபாய் குறைந்து விட்டது. ரெஸ்டாரெண்ட்டில் காத்திருந்தால் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கிடைக்கும் என்றனர் இப்போது நான்கு நிமிடத்துக்கு ஒருரூபாய் என்று தருகின்றனர். ஒரு நாளைக்கு 20 ஆர்டர் பிடித்தால், ஒரு ஆர்டரில் 8 ரூபாய் வீதம் குறைத்தால் 150 ரூபாய் குறைந்து விட்டது. வண்டிக்குப் பெட்ரோல் போட வேண்டும் , சாப்பிட வேண்டும் என்பது போன்ற செலவுகள் இருக்கிறது,” என்று கூறினர்.
இந்த நிலையில் தி.நகர் போலீஸ் துணை ஆணையர் அலுவலகத்தில் நிர்வாகம், ஊழியர்கள், காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் 75 சதவிகித கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இலக்கின் எண்ணிக்கையை குறைத்திருக்கின்றனர். 800 ரூபாய் தினமும் ஆர்டர் பிடித்தால்தான் ஊக்கத்தொகை என்பதை குறைத்து குறைந்த ஆர்டர் இருந்தாலும் ஊக்கத்தொகை உண்டு என்பதை உறுதி செய்திருக்கின்றனர். எனவே, கடந்த புதன் கிழமை மாலை முதல் வேலை ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பி உள்ளனர்.
Comments