ஆடிமாதம் அம்மனை குளிர்விக்கும் கூழ் வார்த்தல்


 

ஆடிமாதம் என்றாலே அம்மன் மாதம்தான். குறிப்பாக சென்னையில் தெருவெங்கும் அம்மன் கோவில்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ்வார்க்கும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால், இந்த முறை கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஆடி கூழ்வார்த்தல் என்பது கொண்டாட்டமாக இல்லாமல், ஆடம்பரம் இன்றி எளிமையாக அவரவர் வீடுகளில் நடைபெற்று வருகின்றது.

இந்த தருணத்தில் ஆடி கூழ் எப்படி செய்யப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நான்கு கோப்பை நீரை சேர்க்க வேண்டும். மாவு கெட்டி ஆகாதபடி தண்ணீருடன் கரைக்க வேண்டும்.ழ

பின்னர் கால் கோப்பை அளவு பச்சரிசி எடுத்து, அதை மிக்சியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். பச்சரிசி மாவு கஞ்சி போன்று வரும்.

இந்த கஞ்சி கலவையில் ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும் கேழ்வரகு மாவு கரைசலை ஊற்றி தேவையான உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து, கெட்டி ஆகி விடாமல், கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதிக சூட்டில் வைக்காமல், குறைவான சூட்டில் வைத்து இறக்க வேண்டும். கூழ் போன்ற பத த்தில் வந்த உடன்,இறக்கி, அதில் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் கடைசியாக வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

கூழை பூஜை அறையில் அம்மன் படத்தின் முன்பு வைத்து அத்துடன் வேப்பில்லைகள் வைத்து வழிபட்டு, இதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கூழ் வார்க்கலாம்.


Comments


View More

Leave a Comments