கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் உணவகங்களின் சேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்


கொரோ பெருந்தொற்று பல தொழில்களில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதலாவதாக இருக்கும் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் இருக்கும் உணவகங்களின் சேவையில் கொரோனாவின் தாக்கத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.    

சென்னையில் கொரோனா தாக்கத்துக்கு முன்புவரை செயல்பட்ட பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணாசாலையில் செயல்பட்டு வந்த செந்தூர் உணவகம் மூடப்பட்டுவிட்டது. சென்னையின் பிற இடங்களில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்தின் கிளைகளும் மூடப்பட்டு விட்டன. இந்த உணவகங்கள் இருந்த இடங்களில் இப்போது சேலம் ஆர்.ஆர்.பிரியாணி அசைவ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னையின் பிரபல உணவகமான சரவணபவன் உணவகம் பல கிளைகளை மூடிவிட்டது. குறிப்பாக தி.நகர் பாண்டி பஜார், வெங்கட்நாராயணா சாலை ஆகியவற்றில் இயங்கி வந்த இரண்டு கிளைகள் மூடப்பட்டு விட்டன. தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு கிளை மட்டுமே செயல்படுகிறது. ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்தின் கிளையும் மூடப்பட்டு விட்டது. அண்ணாசாலையில் ஒரே ஒரு கிளை மட்டும் செயல்படுகிறது. ராயப்பேட்டையில் சர்ச் பார்க் கட்டடத்தை ஒட்டி இருந்த உணவகம் மூடப்பட்டிருக்கிறது.

கொரோனாவின் தாக்கத்தால் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. கொரோனாவின் தாக்கம் காரணமாக சில உணவகங்களின் சேவைகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது காஃபி, தேநீர் போன்ற பானங்களை டபரா டம்ளர் அல்லது சில்வர் அல்லது கண்ணாடி டம்ளரில் தருவதற்கு பதில் பெரும்பாலான உணவகங்கள் பேப்பர் கப்களில், பிளாஸ்டிக் கப்களில்தான் வழங்குகின்றன.

சென்னையில் உள்ள சங்கீதா உணவகங்களில் ஒரு காஃபி குடித்தாலும் கூட ஒரு தண்ணீர் பாட்டில் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். டம்ளரில் தண்ணீர் விநியோகத்தால் கொரோனா தொற்று பரவி விடும் என்ற அச்சமாம்.

பாலாஜி பவன் போன்ற உணவகங்களில் காஃபி,தேநீர் உள்ளிட்டவை பேப்பர் கப்களில் தரப்படுகின்றன. மதிய உணவுக்கான குழம்பு, ரசம், மோர் ஆகியவற்றை பேப்பர் கப்களில் தருகின்றனர். சாதத்தை முன்பு சில்வர் தட்டில் கொடுத்தனர். இப்போது பாக்கு மட்டை தட்டில் வைத்துத்தருகின்றனர். இந்த உணவகத்தில் தண்ணீர் கூட பேப்பர்கப்களில்தான் தருகின்றனர். அந்த அளவுக்கு கொரோனா அச்சம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.   

 

 

 


Comments


View More

Leave a Comments