கிராம சபைகளில் மரபணு மாற்றுக் கடுகு, செறிவூட்டிய அரிசிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அழைப்பு


நமது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றுக் கடுகு, செறிவூட்டப்பட்ட அரிசி ஆகியவற்றுக்கு எதிராக 26ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றும்படி ராமசாமி செல்வம், சரோஜா குமார் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

கிராம சபைகளில் நிறைவேற்ற வேண்டிய மாதிரி தீர்மானம்; 

கிராம சபைத் தீர்மானம் – மரபணு மாற்றுக் கடுகிற்கான அனுமதியை ரத்து செய்யக் கேட்டு இந்திய அரசின் கீழ் உள்ள மரபணு மாற்றங்கள் மதிப்பீட்டுக் குழு DMH 11 என்ற மரபணு மாற்றுக் கடுகிற்கு அண்மையில் அனுமதி அளித்துள்ளது. உலகளவிலேயே மரபணு மாற்றுப் பயிர்கள் மக்களுக்கும், கால்நடைகளுக்கும்-மண்ணிற்கும்-இயற்கை சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்துவதில்லை என்று தெளிவாக தெரியும் அளவிற்கு ஆய்வுகள் நடத்தப்படவில்லை. 

பல நாடுகளில் தடை 

அதே சமயம் மக்கள் மீது அக்கறை கொண்ட சில அறிவியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வுகளில் மரபணு மாற்றுப் பயிர்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்துவதைக் கண்டறிந்துள்ளார்கள். இவ்விரு காரணங்களினால் ஒட்டு மொத்த ஐரோப்பிய யூனியனில் உள்ள நாட்டு மக்கள் எல்லா மரபணு மாற்றுப் பயிர்களையும் எதிர்கின்றனர். 

 

பிடி கடுகுக்கு தடை தேவைமரபணு மாற்று மக்காச்சோளம் கொண்டு தயாரிக்கப்படும் கால்நடை மற்றும் கோழித் தீவனங்களையும் எதிர்கிறார்கள். பல நாடுகளில் அவை தடை செய்யப்பட்டும் உள்ளது. 2010 பிப்ரவரி மாதம் 9ம் தேதி இந்திய அரசு பி.ட்டி கத்தரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை இரத்து செய்த அறிவிப்பில், பி.ட்டி கத்தரி பாதிப்பு ஏற்படுத்துமா என்பது குறித்த ஆய்வுகளை முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றும்,  முழுமையான சோதனைகள் நடத்தி பி.ட்டி கத்தரி எல்லாவகையிலும் ஆபத்தில்லாதது என்று நிரூபிக்கப்படும் வரையில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தது. 

இந்த உத்திரவு வந்து 14 ஆண்டுகளான பின்னரும் பி.ட்டி கத்தரியை உருவாக்கிய நிறுவனம் அது ஆபத்தில்லாதது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்க எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்த ஆய்வுகள் இந்திய அளவிலும், உலகளவிலும் இப்படித்தான் இருக்கிறது.  

ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை

இந்த நிலையில் இந்திய அரசின் மரபணு மாற்று மதிப்பீட்டுக் குழு DMH 11 என்ற மரபணு மாற்றுக் கடுகு இரகதிற்கு அனுமதி அளித்துள்ளது. பி.ட்டி கத்தரி போன்றே இந்தக் கடுகிலும் கட்டாயம் செய்யப்பட்டு இருக்க வேண்டிய பல ஆய்வுகள் செய்யப்படவில்லை. பல ஆய்வுகள் அரைகுறையாக மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆய்வுகள் தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் வகையில் ஆய்வு முறைகளை மாற்றி வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. பல ஆய்வுகள் வேண்டுமென்ற தவிர்க்கப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் பல முறை சுட்டிக் காட்டிய பின்னரும் இந்திய அரசின் மரபணு மாற்று மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த DMH 11 கடுகு இரகம் களைக் கொள்ளியை தாங்கும் வகையான ஒன்று. இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் இது நாள் வரை களைக் கொல்லியை தாங்கி வளரும் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு உரிய ஆய்வு முறைகளை உருவாக்கவே இல்லை. உச்ச நீதி மன்றம் அமைத்த வல்லுனர் குழு, களைக் கொல்லியைத் தாங்கிடும் வகையான பயிர்களுக்கு எந்த காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாதென அறிக்கை அளித்துள்ளது. 

 

பிடி கடுகு தேவையில்லை ஆகவே இந்த DMH 11 கடுகு களைக் கொல்லியைத் தாங்கும் சக்தி கொண்டது என்பதை மறைத்து வருகிறது. கடுகு தமிழ்நாட்டு மக்களின் உணவில் மிகச் சிறு பகுதியாக இருந்தாலும் வட இந்திய மக்களின் முக்கியமான உணவு எண்ணெய் ஆகும். நாம் உணவில் கடுகு மிகச் சிறு பகுதி தான் என்பதற்காக நஞ்சான ஒன்றை நாம் மிகச் சிறு அளவிலும் உணவில் சேர்க்க இயலாது. கடுகைத் தொடர்ந்து பல மரபணு மாற்றுப் பயிர்களை நம் மீது திணிக்க விதை நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

தீர்மானம் 

(உங்கள் மாவட்டத்தின் பெயர்) மாவட்டத்தின் (உங்கள் ஊராட்சியின் பெயர்) ஊராட்சியின் கிராம சபை,  கிராம மக்களின் ஆரோக்கியத்தையும் உடல் நலனையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது. இந்தப் பொறுப்பை சரிவர செய்யும் வகையில் DMH 11 கடுகு இரகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்ய வேண்டுமென இந்த கிராம சபை, மாண்புமிகு இந்தியப் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறது. 

மேலும்   மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், DMH 11 கடுகு இரகம் தமிழக மக்களையும், இந்திய மக்களையும் பாதிக்காது என்பதற்குரிய ஆய்வுகள் முழுமையாக நடத்தப்பட்டு எவ்வித பாதிப்புகளும் இருக்காது என்று தெளிவுறத் தெரியும் வரையில் இந்தக் கடுகிற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யக் கேட்டு இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது இந்த கிராம சபை.

இரும்பு அரிசியைத்  (fortified rice) தடுக்க: கிராம சபைக் கூட்டத் தீர்மானம்

செயற்கை இரும்புச் சத்து திணிக்கப்பட்ட செறிவூட்டிய அரிசியை அனுமதி வேண்டாம் எனக் கேட்டு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), பெரும்பான்மையான மக்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக் குறை உள்ளதால் செயற்கையான, இரசாயன வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும்  இரும்பை பாலிலும், உணவு எண்ணெய்களிலும் அரிசியிலும் கட்டாயம் கலந்து விற்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது. 

இன்று நாம் பயன்படுத்தும் பாலிலும், எண்ணெயிலும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி கலந்தே விற்கப்பட்டு வருகிறது. முன் முயற்சி வகையில் இந்திய அளவில் பல மாவட்டங்களில் இரும்பு சேர்க்கப்பட்ட அரிசி நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டு அங்கன் வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த செயற்கையான இரசாயன இரும்பு சேர்க்கப்பட்ட அரிசி மூலம் தயாரிக்கப்பட்ட உணவே வழங்கப்படுகிறது. 

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியா முழுதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இரும்பு சேர்க்கப்பட்ட அரிசியை மட்டுமே வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுபாட்டு ஆணையம் உத்திரவிட்டுள்ளது. இப்படி செயற்கையான, இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்துகளை உணவு மூலம் கொடுப்பதால் மக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை.

செரிமானம் ஆகாது 

மேலும் பல மருத்துவர்கள் இப்படி செயற்கை முறையிலான ஊட்டச்சத்து இரசாயனங்களை உடல் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டு செரிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான இந்தியர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை இருப்பதற்கு அவர்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்து பற்றாக்குறையே முக்கிய காரணம். 

நாம் உண்ணும் தானியங்கள், காய்கறிகள், பழங்களில் ஊட்டச் சத்துகள் குறைவாக இருப்பதற்குக் காரணம் அவை விளைவிக்கப்படும் விளைநிலம் ஊட்டங்கள் இல்லாத நிலமாக இருப்பதே காரணம். “நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி”, என்று வள்ளவர் கூறும் அடிப்படையில் இந்த மூல காரணத்தை சரி செய்வதற்குரிய திட்டங்களைச் செய்யாமல் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயன ஊட்டங்களை வழங்குவது சரியான வழியல்ல.

 

செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம்

ஏற்கெனவே இரத்த சோகையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு இல்லம் தேடி இரும்புச் சத்திற்கான மருந்துகளும் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நல்ல மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. இப்படி பாதிப்புற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனிப்பட்ட அக்கறை காட்டுவதற்குப் பதிலாக பற்றாக்குறை இல்லாதவர்களும் இந்த செயற்கையான ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொள்வது அவர்களின் உடல் நலனைப் பாதிக்கச் செய்யும். 

மேலும் பாதிப்புள்ளவர்களின் உடல் இத்தகைய ஊட்டச் சத்துகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த முயற்சி மேலும் பிரச்சனைகளை அதிகமாக்குமே தவிர குறைக்காது. மேலும் மருத்துவ வல்லுனர்கள், பாதிப்புகள் இல்லாத மக்கள் இப்படி ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வது அவர்களுக்கு புதிய பிரச்சனைகளை உருவாக்கும். எந்த ஒரு பொருளும்  மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் தரும் என்கிறார் வள்ளுவர். 

தீர்மானம் 

(உங்கள் மாவட்டத்தின் பெயர்)மாவட்டத்தின் (உங்கள் ஊராட்சியின் பெயர்) ஊராட்சியின் கிராம சபைக்கு இந்த ஊராட்சி அரசில் உள்ள மக்களின் உடல் நலனைக் காக்கும் பொறுப்புள்ள ஒன்று என்பதால் இந்த ஊராட்சி மக்களின், குழந்தைகளின் உடல் நலனைப் பாதிக்கும் இந்த செயற்கை முறையிலான செறிவூட்டிய உணவுகளை திணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது. 

 மேலும் இந்த ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்வதற்காக உள்ள உள்ளூர் அளவிலான, அவரவர்களுக்கு அருகில், கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள வழி முறைகள் பல உள்ளதை இந்த கிராம சபை சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

எடுத்துக்காட்டாக முருங்கை, கறிவேப்பிலை போன்ற கீரை வகைகளும், கம்பு, இராகி போன்ற சிறுதானியங்களும் இரும்புச் சத்து மிகுந்துள்ளவை. இவை எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்றாகும். மேலும் இவைகள் மூலம் உடலில் அதிக அளவு இரும்பு த்து சேர்ந்தாலும் உடல் நலனைப் பாதிக்கச் செய்வதில்லை.

பிரதமர், முதலமைச்சருக்கு வேண்டுகோள் 

இத்தகைய கைக்கு அருகில் உள்ள வழிமுறைகளை மக்களுக்கான திட்டங்களாக உருவாக்கிட வேண்டும் எனவும் இந்த கிராம சபை கேட்டுக் கொள்கிறது.  எனவே பாதிப்பில்லாதவர்களையும் நோயாளிகளாக்கும் செறிவூட்ட அரிசி, பால், எண்ணெய்களை கட்டாயமாக்கும் உத்திரவை  இந்திய உணவுப் பாதுகாப்பு  மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்திரவை இரத்து செய்ய வேண்டுமென இந்தியப் பிரதமரையும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறது. 

மேலும் தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் இரும்புச் சத்து செரிவூட்ட அரிசியை திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்த கிராம சபை கேட்டுக் கொள்கிறது.

பகிர்வு நன்றி Ramasamy Selvam

#gramasabha #gramasabhameeting #btmustard #enrichrice


Comments


View More

Leave a Comments