அனாதைகளுக்கு உணவால் உயிர் கொடுக்கும் இளம் தம்பதி


 

பெங்களூரு; தமிழ்நாட்டை சேர்ந்த சுரேஷ்-மோனிஷா என்ற இளம் தம்பதியினர் பெங்களூருவில், அனாதைகளாக ஆதரவற்று தெருக்களில் திரிபவர்களுக்கு வாரம் ஒருமுறை உணவு அளித்து உயிர் கொடுக்கின்றனர்.

சிங்கம்புணரியை சேர்ந்த சுரேஷ் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றியபோது, சென்னை வேளச்சேரியில் உள்ள தீபம் என்ற அறக்கட்டளையில் சேவை புரிந்து வந்தார். அப்போதுதான் இவருக்கு ஆதரவற்றோர் மீது அன்பு செலுத்தும் நல்ல உள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சுரேஷுக்கு வேலை கிடைத்தது. பெங்களூருவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் வீட்டில் உணவு தயாரித்து அதனை பொட்டலமாகப் போட்டு வீதிகளில் அனாதைகளாக திரிபவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளாக இவர்கள் உணவு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் 25 பேருக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தவர்கள், இன்றைக்கு சுமார் 100 பேர் வரை வாரம் தோறும் உணவு கொடுக்கின்றனர். இப்போது சுரேஷின் நண்பர்களும் அவரது முயற்சிகளுக்கு உதவி செய்கின்றனர்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு சமைப்பது, கணவருடன் எடுத்துச் சென்று அதனை வழங்குவது என்று மோனிஷாவும் கணவருக்கு கரம் கொடுக்கிறார். இந்த இளம் வயதிலேயே சேவை செய்யும் அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.


Comments


View More

Leave a Comments