நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ உதவும் உணவுகள்...
இதயம் தொடர்பான நோய்களால் இந்தியாவில் உள்ள ஐந்து கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியாவில்தான் இவ்வாறு அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 15.50 கோடி பேருடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 கோடிப்பேர் நீரழிவு நோயாலும், 10 கோடி பேர் உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆரோக்கியமற்ற மக்கள் தொகையுடன் இந்தியா இளமையாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று இதனை குறிப்பிடுகின்றனர்.இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கக் கூடும். இதற்கு காரணம் என்ன? கணினி திரைகள் முன்பு உட்கார்ந்தபடியே பணியாற்றுவது தான் இதற்கு காரணம். எந்தவித இடைவெளியும் இல்லாமல், வேலை அழுத்தம் காரணமாக உணவு உண்ணக் கூட போகாமல் பணியாற்றுகின்றோம். இவை எல்லாம் உடல்நலக்குறைவின் அபாயத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன.
உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன உணவுகளை உண்பது என்று பார்க்கலாம்.
அத்திப்பழம்
நம்மில் பெரும்பாலானோர் இதனை உலர் பழமாக சாப்பிடுகின்றோம். இந்த ஆரோக்கியமான உலர் அத்தி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள், கனிமங்கள் உள்ளன. அதாவது பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை உள்ளன. இது தவிர காப்பர் முதல் ஜிங், இரும்பு மற்றும் மாங்கனீஸ் சத்துக்களும் உள்ளன. அத்தியில் உள்ள பொட்டாசியம் சத்தானது. பல நலன்களைக் கொண்டிருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உணவு ஜீரண சக்தியையும் ஊக்குவிக்கிறது. நார் சத்தும் அதிகம் இருக்கிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வை தருகிறது. அடிக்கடி பசி எடுத்து ஆரோக்கியமற்ற உணவுகளை தின்பதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. ஒமேகா 6 மற்றும் ஒமேகா 13 வகை கொழுப்புகள் உள்ளன. பினோல் எனும் லேசான அமில நச்சு உருவாவதை தடுத்து இதய நோயாளிகளை காக்கிறது.
காலே எனும் முட்டைகோஸ் வகை
காலே எனும் முட்டைகோஸ் வகையை சேர்ந்த காய்கறி பல நல்ல சத்துகளை உள்ளடக்கியதாகும். வறுத்த உணவுகளை விரும்புபவர்களுக்கு மாற்றாக காலே இருக்கிறது. வைட்டமின், கால்சியம், நார்ச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. கேன்சர் போன்ற உயிர் கொல்லி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இயத நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். காய்கறி கலவையாகவே அல்லது சூப்பாக அல்லது வெறும் காய்கறியைக் கூட சாப்பிடலாம். வைட்டமின் கே அதிகம் கொண்ட உணவுப் பொருட்களில் இது முதன்மையானதாகும். கால்சியம் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் உருவாவதை தடுக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை. ஆப்பிளில் அதிக நார்ச்சத்து, தண்ணீர் உள்ளது. கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை குறைக்கிறது. சீரான ஜீரண சக்திக்கும் உதவுகிறது. நீரிழிவு நோயினால் பீட்டா செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது.
க்ரீன் டீ
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நுண்ணூட்ட சத்துகள் கிரீன் டீயில் நிறைய இருக்கின்றன. தொடர்ந்து கிரீன் டீ குடித்து வந்தால் பல நற் பயன்களைப் பெற முடியும். கொழுப்பை கரைப்பதாகவும் கிரீன் டீ உதவுகிறது. உடலில் கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது. இரண்டு கோப்பை அல்லது ஒரு கோப்பை க்ரீன் தேநீர் அருந்துவதன் வாயிலாக கேன்சர் அபாயத்தை குறைக்க முடியும். மூளையின் செயல்பாடுகளை அதிகரித்து, அல்சமீர் நோயில் இருந்து காக்க உதவுகிறது.
ஸ்பைருலினா
நீலம்-பச்சை பாசி வகையைச் சேர்ந்த சயனோபாக்டீரியா வான இது, புரோட்டீன், வைட்டமின், இரும்பு, காப்பர் சத்துகள் நிறைந்திருக்கின்றன. பைகோசயனின் என்றழைக்கப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைய இருக்கின்றன. அதனால் தான் இது நீல பச்சை பாசி என்று அழைக்கப்படுகிறது. தும்மல், அரிப்பு, மூக்கு ஒழுகுதல் போன்ற அலர்ஜி இருப்பவர்களுக்கு இதனை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ரத்தம் அழுத்தம் குறைவதற்கு, கொழுப்பு குறைவதற்கு ஸ்பைருலினா பயன்படுகிறது. நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இது துணை புரிகிறது.
மஞ்சள் தூள்
மஞ்சளில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நமது உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்குவதிலும் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம், பீதி ஆகியவற்றை குறைக்கும் உப பொருட்கள் தயாரிப்பில் மஞ்சள் தூள் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவையும் , ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. வயது மூப்பாவதை மஞ்சள் தள்ளிப் போடுகிறது.
வெள்ளைப்பூண்டு
வெள்ளப்பூண்டில் மருத்துவ குணம் இருப்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. வெள்ளை பூண்டு உண்பதன் வாயிலாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும். கொழுப்பு அளவையும் குறைப்பதுடன், உடல் வலியை குறைத்து பொதுவாக உருவாகும் சளியையும் குறைக்கிறது. வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு சாப்பிடுவது நல்ல பலன் தரும். அதே நேரத்தில் தீவிர உடல் நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய்
பல்வேறு உடல் நலப் பயன்பாடுகளை நெல்லிக்காய் கொண்டுள்ளது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக அளவு கொண்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சேர்ந்து இதுவும் ஒன்று என்று சொல்வதை விடவும், தலைமுடி, தோல், கண்கள் ஆகியவற்றுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக ஜீரண சக்தி நன்றாக செயல்படவும் நெல்லி உதவுகிறது.தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பவுடர் சாப்பிட்டால் பல்வேறு நலன்கள் நமக்குக் கிடைக்கும்.
சீனி துளசி
இது இனிப்புச் சுவையைக் கொண்ட இலையாகும். இனிப்பு சுவையை கொடுப்பதற்காக தேநீருடன் இணைந்து உபயோகிக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ஸ்டீவியா என அழைக்கப்படுகிறது. சீனித்துளசியில் மட்டும் 150 வகைகள் உள்ளன. இனிப்புக்கு மாற்றாக பெரும்பாலும் உபயோகிக்கப்படுகிறது. இது இனிப்புச் சுவையைக் கொண்டிருந்த போதிலும் கார்போஹைட்ரேட் அல்லது கலோரிகளை கொண்டிருக்கவில்லை. இன்சுலின் சுரப்பை பாதிக்காது. எனவே சர்க்கரை நோயாளிகளும் இந்த இனிப்பை சேர்த்துக் கொள்ளலாம். உடலில் அதிக சர்க்கரை இருப்பதாக கருதினால், இந்த சீனி துளசி இலையை பயன்படுத்தலாம்.
-பா.கனீஸ்வரி
#FoodsForHealthy #LiveLong #HealthyLife #FoodsForHealthyLife
Comments