அசத்தலான சுவையில் கலவை சாதங்கள்


சாம்பார்,குழம்பு, ரசம், மோர் அல்லது தயிர் என்ற ஒரு காம்போவில் மதிய உணவு உண்டால்தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். இன்னும் சிலருக்கு சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்று கலவை சாதங்களை வரிசைப்படி உண்பதும் பிடிக்கும்.

பெரும்பாலானோர் இந்த வரிசைக்குள் அடங்காமல் மதிய நேர பசியைப் போக்க கலவை சாத த்தில் ஏதேனும் ஒன்று அல்லது ஏதேனும் இரண்டை சாப்பிடுவதும் வழக்கம்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காமேஸ்வரி உணவகம் கலவைசாதங்களுக்கு புகழ்பெற்ற நிறுவனம். ஒரு கலவை சாத த்தின் விலை ரூ.35 மட்டும்தான். ஒரு கலவை சாதம் சாப்பிட்டாலே முழு வயிரும் நிரம்பிய உணர்வு ஏற்படும். சாம்பார் சாதம், புளிசாதம், லெமன் சாதம், வத்தகுழம்பு சாதம், தக்காளி சாதம், கத்தரிக்காய் சாதம், தயிர் சாதம் என்று வித, விதமான சாதங்கள் விற்பனை இங்கு களை கட்டும். மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டின் இறுதியில் இருக்கும் இந்த கடை, ஒரு சிறிய இடத்தில்தான் செயல்படுகிறது.

மதியம் 12 மணிக்கு மேல் இந்த கடைக்கு வெளியே டூ வீலர்கள் வரிசை கட்டி நிற்கும். அந்த அளவுக்கு கூட்டம் அள்ளும். 1 மணிக்கு மேல் சில கலவை சாதங்கள் காலியாகி விடும். இரண்டு மணிக்கெல்லாம் பெரும்பாலான கலவை சாதங்கள் காலியாகி விடும்.

புளிசாதம் ஆகட்டும், தக்காளி சாதம் ஆகட்டும், அதில் புளியின் ருசியும், தக்காளியின் ருசியும் தனித்துத் தெரியும். வத்த குழம்பு சாத த்தில் வத்தல்கள் இருக்கும். குழப்பின் சாரம் அனைத்துப் பருக்கைகளிலும் ஒரு சேர இருக்கும்.

நேரில் வந்து சாப்பிடுபவர்கள் நான்குவிதமான கலவை சாதங்களில் தலா ஒரு கரண்டி வாங்கி சாப்பிடவும் அனுமதி உண்டு. பார்சல் வாங்குபவர்களுக்கு இந்த வசதி இல்லை.

இதே உணவகத்தில் காலையில் இட்லி, பொங்கல், வடை, பூரி ஆகியவையும் விற்கப்படுகிறது. இட்லி பத்து ரூபாய்தான். ஆனால், அதன் அளவு ஸ்டார் ஓட்டலில் விற்கப்படும் 50 ரூபாய் இட்லிக்கு சம மாக இருக்கும். சுவையிலும் விட்டுக்கொடுக்காத வகையில் இருக்கும். இட்லிக்கு தொட்டுக்கொள்வதற்கு மதுரை ஸ்டைலில் சட்னி கொடுப்பார்கள். அற்புதமாக இருக்கும்.

பூரி சுட,சுட கிடைக்கும். ஆவிபறக்க, பூரியில் மசாலா போட்டு கொடுப்பார்கள். அதை வாங்கி ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு முடித்தால் அதன் ருசியை அபாரமாக உணர முடியும். பொங்கல், வடை எல்லாமே அதன், அதன் சுவையில் அபாரமாக இருக்கும்.

மாலையில் 5 மணியில் இருந்து உப்புமா, அரிசி உப்புமா, ரவா கிச்சடி, இட்லி என வித,விதமான டிபன் ஐட்டங்கள் விற்பனை தொடங்கி விடும். எல்லாம் சுடசுட கிடைக்கும் என்பதும் இந்த உணவகத்தின் கூடுதல் சிறப்பாகும். ஆறரை மணிக்கு மேல் சப்பாத்தி போடுவார்கள். சப்பாத்தி வாங்குவதற்கு தனி க்யூ நிற்கும். மிகவும் மெல்லிய சப்பாத்தி, மிகவும் மிருதுவாக இருக்கும். அதற்கு தொட்டுக்கொள்ள வழங்கப்படும் சப்ஜியும் தனிச்சுவை கொண்டது. சப்பாத்தி இரவு ஒன்பது மணி வரை விறுவிறுப்பாக விற்பனையாகும்.

இந்த வெரைட்டிகள் தவிர காஃபி 15 ரூபாய்க்குத் தருகின்றனர். காலை, மாலை இரண்டு வேளை மட்டும் கிடைக்கும். அதுவும் அருமையான சுவையில் அளவான சூட்டில் கிடைக்கும். பெரிய உணவகங்களில் 40 ரூபாய் காஃபியின் சுவையிலும், தரத்திலும் இருக்கும். குறைவான செலவில், நிறைவான, சுவையான உணவு வேண்டுவோர் தைரியமாக இந்த காமேஸ்வரிக்கு வந்து சாப்பிடலாம்.


Comments


View More

Leave a Comments