நெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ், முருங்கை சூப்… கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் தயாரிப்பது எப்படி?
கொரோனா அச்சத்தில் இருப்பவர்களுக்காக நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ்... முருங்கை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பீட்ரூட், கேரட், ஆரஞ்சு சாறு. இந்தச் சாற்றை (ஜூஸ்) செய்ய சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு கப் பீட்ரூட், அதேபோல் சிறு துண்டாக்கிய அரை கப் கேரட், ஆரஞ்சு சுளை 5, தோல் நீக்கிய (சிறிய) இஞ்சித் துண்டு போன்றவை தேவை. இதில் பீட்ரூட், கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதன்பிறகு இஞ்சியை கொட்டை நீக்கிய ஆரஞ்சு சுளைகளைச் சேர்த்து அரைத்து நன்றாக மசித்து மெல்லிய துணியில் வடிகட்டி அருந்தலாம். தேவைப்பட்டால் தேன், சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சாறு எடுத்த சில நிமிடங்களில் அருந்தி விடுவது நல்லது.
இந்தச் சாற்றை அருந்துவதால் வைட்டமின் ஏ,சி,இ போன்ற சத்துக்களும், இரும்பு, கால்சியம் சத்துகளும் கிடைக்கும்.
இந்தச் சூழலில் நெல்லிக்காய் சாறு அருந்துவதும் நல்லது. இந்தச் சாற்றை செய்ய இரண்டு நெல்லிக்காய், இரண்டு ஈர்க்கு கறிவேப்பிலை, சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், சர்க்கரை கலந்து அருந்தலாம்.
இதேபோல் நெல்லி மோர் அருந்துவதும் சிறப்பு. நெல்லி மோர் செய்ய கெட்டியான தயிர் ஒரு கப், புதினா இலை - 10, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு, சிறு துண்டு இஞ்சி, நெல்லிக்காய் 5, கால் டீஸ்பூன் சீரகம், உப்பு.
கொட்டை நீக்கிய நெல்லிக்காய், சுத்தம் செய்யப்பட்ட புதினா இலை, மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும். தேவைப்பட்டால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். அதன்பிறகு தயிரை மோராக்கி அதனுடன் கலந்து உப்பு சேர்த்து அருந்தலாம். நெல்லிக்காய் குளிர்ச்சியூட்டும் என்று பயப்படுபவர்கள் இஞ்சி சேர்த்திருப்பதால் பயம் வேண்டாம்.
மேலே சொன்ன இந்த ஜூஸ்களுடன் தேவைப்பட்டால் ஐஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
இதேபோல் முருங்கைக்கீரை அல்லது முருங்கைக்காம்பு சூப் செய்தும் அருந்தலாம். முருங்கைக்கீரை அல்லது காம்பு ஒரு கப், பூண்டு 5 பல், சாம்பார் வெங்காயம் 5, சிறிய தக்காளி ஒன்று, தேவைக்கேற்ப மல்லித்தழை, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
முருங்கைக்கீரை அல்லது காம்பை சுத்தம் செய்து மண் சட்டியில் வேக வைக்க வேண்டும். ஓரளவு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி மசிக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டிய பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு தட்டிப்போட்டு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி வடிகட்டிய முருங்கைக்கீரை அல்லது காம்பு நீரைச் சேர்த்து மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம்.
இந்த சூப் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை தருவதுடன் ரத்தத்தை சுத்திகரித்து நோய் எதிர்ப்பு சக்தி தரும்,
-மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை 95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#CoronaImmuneFoods #JuiceForCoronaImmune #HealthySoup
Comments