
இனி திருமண விருந்தும் வீட்டிலேயே
கொரோனா தொற்று பரவல் காரணமாக நியூ நார்மல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் புதிய பழக்க வழக்கங்கள் நம் வாழ்வில் ஏற்பட்டுள்ளன.
பொது வெளியில் நடமாடுவது குறைந்து வீட்டுக்குள் அடைந்து கிடைக்கும் நடைமுறைக்கு நாம் எல்லோருமே பழகி விட்டோம். கொரோனா காலத்தில் நடைபெற்ற பல திருமணங்கள் எளிமையான முறையில் மணமகன், மணமகள் குடும்பத்தினரை கொண்டு மட்டுமே நடந்தன. சில திருமணங்கள் நெருங்கிய உறவினர்களை அழைத்து நடத்தப்பட்டன. இன்னும் சில திருமணங்கள் ஆன்லைனில் நடைபெற்றன.
இப்போது இன்னொரு நியூநார்மல் ஒன்று தொடங்கி இருக்கிறது. திருமணத்துக்கு போக முடியவில்லையே என்ற கவலை ஒரு புறம் இருக்க திருமண விருந்தை ருசிக்க முடியவில்லை என்ற ஆதங்கமும் பலருக்கு இருக்கும்.
இப்போது அந்த கவலையும் தீர்ந்து விட்டது. ஆம் கொரோனா காலத்தில் அண்மையில் சென்னையில் ஆன்லைனில் ஒரு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்துக்கு வரவேண்டிய அல்லது அழைக்கப்பட்ட அனைவரும் ஆன்லைனிலேயே திருமணத்தை கண்டு களித்தனர். திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அனைவருக்கும் பார்சல் கல்யாண விருந்து அனுப்ப ப்பட்டது. எல்லோருமே கல்யாணத்தில் கலந்து கொண்ட திருப்தியோடு, கல்யாண விருந்தையும் ஒரு பிடிபிடித்தனர்.
தனியார் கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் நடராஜன் என்பவர் அண்மையில் அளித்த பேட்டியில், திருமண விருந்தை சூடாக ஹாட்பாக்ஸில் வைத்து கொடுக்கின்றோம். சாம்பார், தயிர், புளி சாதம், ரசம், குழம்பு, உருளைக்கிழங்கு வறுவல், அவியல், பருப்பு உசிலி, உள்ளிட்ட அனைத்து விருந்து உணவுகளும் பார்சல் கட்டப்பட்டு அழைக்கப்பட்ட உறவினர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். உணவுடன், திருமணத்துக்கு வந்தால் தரப்படும் தாம்பூலப்பையும் தரப்படுகிறது. நூற்றுக்கணக்கானோருடன் அமர்ந்து சாப்பிட முடியவில்லை என்ற குறையைத்தவிர வேறு எந்த குறையும் இல்லாமல் திருமண விருந்தை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கின்றோம்” என்றார் பெருமையுடன்
Comments