இயற்கை உணவு சுவையில் அசத்தும் தி.நகர் கிரீன் கஃபே


தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை உணவு முறை மிகவும் பிரபலம் ஆகிவருகிறது. குறிப்பாக கொரோனா  தொற்று பரவல் காலத்தில் இயற்கை உணவு மீது மக்களுக்கு கூடுதல் பிரியமும், நேசமும் உருவாகி இருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தில் அந்த அளவுக்கு இயற்கை உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை என்ற வகையில் மக்களிடம் இப்போது கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் பல முக்கிய பகுதிகளில் இயற்கை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை ரிப்பன் மாளிகையில் மூலிகை உணவகம் எளிய மக்களின் உணவகமாக அதே நேரத்தில் இயற்கையான உணவு வகைகளை தினமும் வழங்கி வருகிறது.

சென்னையின் மையப்பகுதியான தி.நகரில் நடேசன் பூங்கா மற்றும் கவிஞர் கண்ணதாசனின் இல்லம் அருகிலும் அமைந்துள்ள கிரீன் கஃபே இயற்கை உணவுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதியம் 11.30  மணிக்கு திறக்கப்படும் இந்த உணவகம் இரவு வரை இயங்குகிறது. இங்கு வழங்ப்பபடும் சிறுதானிய கலவை  சாதங்கள் ருசியில் அபாரமானவை. மதிய உணவாக அடிசல் என்ற அளவு சாப்பாடு மற்றும் அதையே பார்சல் சாப்பாடாகவும் வழங்குகின்றனர்.

அடிசல் அளவு சாப்பாட்டில் சிறுதானியத்தில் செய்யப்பட்ட இனிப்பு வகை இடம் பெறுகிறது. பின்னர் சாதம், இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்ட சாம்பார், ரசம், மோர் ஆகியவை வழங்கப்படுகின்றன. மோர் புளிப்பு இல்லாமல் அருமையாக இருக்கிறது. ரசமும் அதற்கு உரிய சுவையில் மனதை அள்ளுகிறது.

வெஜிடபிள் பிரியாணி இந்த உணவகத்தின் சிறப்பான தரமான உணவாகும். பாரம்பர்ய பாசுமதி அரிசியில் தரமான மசாலா பொருட்கள், இயற்கையாக விளைந்த காய்கறிகளைச் சேர்த்து சுவைபட தயாரிக்கப்படும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் வெஜிடபிள் பிரியாணி மெனு இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

 

சில உணவகங்களில் சாப்பிட்டு முடித்த உடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். ஆனால், இங்கு சாப்பிட்ட உடன் அது போன்ற ஒரு உணர்வு ஏற்படாது. வீட்டில் சாப்பிட்டபின்னர் வயிற்றில் இன்னும் காலியிடம் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். வீட்டு சாப்பாடு போலவே பார்த்து, பார்த்து ஆரோக்கியமான முறையில் கிரீன் கஃபேயில் சமைத்துப் பரிமாறுகின்றனர்.  குடிப்பதற்கு தண்ணீர் தருவதில்லை. பானகம்தான் தருகின்றனர்.  

மாலை நேரத்தில் இட்லிக்காக வழங்கப்படும் சட்னி அவ்வளவு அருமையாகவும், சுவையாகவும் இருக்கிறது. சப்பாத்தி குருமா, பனியாரம் போன்ற உணவு வகைகளும் ருசிக்கு போட்டியில்லை என்று தனித்த சுவையில் இருக்கின்றன. உணவுப் பொருட்களின் விலை அதிகம் என்றோ, மிகவும் குறைவு என்றோ சொல்ல முடியாது. நடுத்தரமான விலையில் இருக்கிறது. இயற்கை உணவை ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உணவகத்துக்கு தைரியமாகச் செல்லலாம்.

-அறுசுவை ரசிகன்

 


Comments


View More

Leave a Comments