வாழையில் இத்தனை சத்துகளா?
வாழையில் அதன் ஒட்டுமொத்த பாகங்களும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. பொதுவாக வாழை இலை, வாழைத் தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்துவோம். ஆனால், வாழையின் அடிப்பாகமான கிழங்கு, வாழைப்பட்டைக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டோம். வாழையின் கிழங்கை வாழைக்கட்டை, சேனை என்றும் சொல்வார்கள். வாழைக் கிழங்கை இடித்துப் பிடிந்து சாறு எடுத்து நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் வெங்காரம் சேர்த்துக் கலந்து குடித்தால் நீர் எரிச்சல், நீருடன் ரத்தம் போதல், சிறுநீர்க் கட்டு, வெள்ளைப்படுதல் போன்றவை சரியாகும். வயிற்றுப்புண், உடல் வெளுத்து கழித்தல் ஏற்படுதல், தொப்பை போன்றவற்றுக்கும் வாழைக் கிழங்கு சாறு நல்லது.
கிழங்கை லேசாக வெட்டி வைத்தால் அதில் ஊறும் நீரில் 100 மில்லி வீதம் காலை, மாலை குடித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறுவதுடன் உடல் வலிமை பெறும். மேலும், பித்தத்தைத் தணிக்கும். கிழங்கைப் பிழிந்ததுபோக அதன் சக்கையை அடிபட்ட வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்துக் கட்டினால் சரியாகும். வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிட்டால் குடலில் சிக்கிய முடி வெளியேறும் என்பதால் அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. அத்துடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கக்கூடியது.
வாழைத்தண்டின் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் வாழைப்பட்டையில் சிறு சிறு காற்றறைகள் போன்று இருக்கும். இதை இயற்கை ஏ.சி என்று சொன்னால் மிகையாகாது. சூடான உடல்வாகு உள்ளவர்கள் இந்த வாழைப்பட்டையை உடலில் போர்த்திக்கொண்டிருந்தால் ஜில்லென்று இருக்கும். அடிக்கடி கிடைக்காத பச்சிலைகளை இயற்கைமுறையில் பாதுகாக்க இந்த வாழைப்பட்டையின் உள்ளே வைத்து பயன்படுத்தலாம். நீண்ட நாள் கெடாமலிருக்க உதவும். பாம்பு கடித்தால் வாழைப்பட்டையின் மீது படுக்கவைக்க வேண்டும். அதன்பிறகு வாழைப்பட்டைச் சாறு ஒரு லிட்டர் அளவாவது குடிக்க வைக்கவேண்டும். இப்படிச் செய்தால் விஷம் பரவாமலிருக்கும். இதை முதலுதவியாக செய்யலாம். அதன்பிறகு வேறு சிகிச்சை எடுக்கலாம்.
வாழைப்பட்டை காய்ந்து சருகாகிப்போனாலும்கூட அது மருத்துவக் குணம் உள்ளதாகவே இருக்கிறது. அப்படி கிடைத்தால் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதை எரித்துச் சாம்பலாக்கி நீர் விட்டுக் கரைத்து காய்ச்ச வேண்டும். அது உப்பு போன்று இருக்கும். நன்றாகக் கொதித்து நீர் வற்றியதும் அதை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் எள்ளுச்செடி, பனைவேர், புகையிலை, நாயுருவி இலை சமஅளவு எடுத்து காயவைத்து எரித்து சாம்பலாக்கி வாழைப்பட்டையை சாம்பலாக்கிய பொடியுடன் சேர்க்கவேண்டும். இதில் அரை சிட்டிகை அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஈரல் தொடர்பான நோய்களும், தொப்பை போன்றிருக்கும் பெரு வயிறு, சோகை சரியாகும்.
நன்றி; திரு. Maria Bellsin முகநூல் பதிவு
Comments