சென்னையின் ருசிமிக்க உணவுகளில் அடுத்த ஐந்து..
சென்னையின் ருசிமிக்க உணவு வகைகளில் முதல் ஐந்து உணவு வகைகளை நேற்றுப் பார்த்தோம். இன்றைக்கு மீதம் உள்ள ஐந்து உணவு வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
முழுசாப்பாடு
சென்னையின் உணவு வகைகளில் மதிய உணவுக்கு என்று தனி இடம் உள்ளது. வாழை இலையில் பரிமாறப்படும் உணவு தலைவாழை இலை சாப்பாடு என்றே பல உணவகங்களில் விளம்பரம் செய்கின்றனர். சரவணபவன், பாலாஜி பவன் போன்ற பிரபலமான உணவகங்களில் 150 ரூபாய்க்குள் முழு சாப்பாடு வடை பாயசத்துடன் விருந்து போல பரிமாறுகின்றனர். சென்னையில் குறிப்பாக ஆந்திரா மீல்ஸ்களும் கிடைக்கும். வேலூர் மிலிட்டரி ஹோட்டல் போன்ற அசைவ உணவகங்களிலும் முழு சாப்பாடு வெரைட்டியான குழம்புகளுடன் ஒரு பிடிபிடிக்கலாம்.
பிரியாணி
சென்னையில் தெருவுக்கு ஒரு பிரியாணி கடை இருக்கிறது. அந்த அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாக பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பிரபல ஹோட்டல்கள் முதல் சிறிய மெஸ்வரை பிரியாணி மெனுவுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். சென்னையின் பாரம்பர்யமான புகாரி ஹோட்டல் முதல் நேற்று தொடங்கப்பட்ட ஆஸீப் பிரியாணி வரை பிரியாணியின் வெவ்வேறு வகையான ருசிகளை தினம் ஒன்றாக சாப்பிடலாம்.
மைசூர் பாக்
சென்னையின் இனிப்பு வகைகளில் மைசூர்பாக்-க்கு தனி இடம் உண்டு. குறிப்பாக அடையாறு ஆனந்தபவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கிரான்ட் ஸ்வீட்ஸ் போன்ற கடைகளில் வாயில் வைத்தால் கரைந்து போகும் அளவுக்கு மைசூர்பாக் தயாரிக்கப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரசாத கடையில் தரப்படும் மைசூர் பாகும் தனிசுவை கொண்டது.
முறுக்கு சான்விட்ச்
சென்னை பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் மார்வாரி சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கும் டீ கடைகளில் முறுக்குடன் இணைந்த சான்ட்விட்ச் விற்பனை செய்யப்படுகிறது. பிரட், முறுக்கு, சான்ட்விச் கலந்த கலவையாக இருக்கும் இந்த உணவு, கலகலப்பான சுவையைக் கொண்டது.
அத்தோ
பர்மாவில் இருந்து 1960-ம்ஆண்டுகளில் அகதிகளாக வந்தவர்கள் பலர் சென்னையில் குடியேறினர். அவர்களின் உணவு பழக்கங்களில் அத்தோவுக்கு என்று தனிஇடம் உண்டு. நூடூல்ஸை வறுத்து, அதன் மீது வெங்காயம், முட்டைக்கோஸ் ஆகியவற்றைத் தூவி, புளிக்கரைசலை சேர்த்தால் அற்புதமான அத்தோ உணவு ரெடி. இந்த ஐந்து உணவுகள், நேற்று நாம் குறிப்பிட்ட ஐந்து உணவுகளையும் சென்னையில் சாப்பிட மறக்காதீர்கள்.
Comments