உளுந்தங்களி சாப்பிட்டால் என்ன பலன்கள் தெரியுமா?


உளுந்தம் பருப்பில் ஆரோக்கியமான பல சத்துகள் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கால்சியம், புரதம்,இரும்புச்சத்து முதன்மையாக இருக்கின்றன. இவற்றுடன் எளிதாக ஜீரணுத்துக்கு உதவும்  நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, எல்லாவிதமான தாதுக்கள், பி-காம்ப்ளெக்ஸ், வைட்டமின்-‘ஏ’ ஆகியவையும் உளுந்தில் இருக்கின்றன.

. ஃபோலிக் ஆசிட், கோலின் போன்ற முக்கிய வைட்டமின்கள் சத்துகள் இதில் உள்ளன. கருப்புஉளுந்தில்தான் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கறுப்பு உளுந்தில் செய்யப்படும் உணவுகள்  இதயத்துக்கும் நீரிழிவுக்காரர்களுக்கும் நல்லதுதான். கொலஸ்ட்ரால் குறைக்கும் நல்ல கொழுப்பு இதிலும் உண்டு. நமது கருப்பு உளுந்தை ஊற வைத்து தோலெடுத்து பிறகே இட்லிக்கு அரைப்பது வழக்கம். கறுப்பு உளுந்து தோல் கலந்த தண்ணீரை கால்நடைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் தமிழகத்தில் இருக்கிறது. இதனால் பசுமாடுகள் பால் அதிகம் தரும். அதிகமான கால்சியம், புரதம் நிறைந்ததாக பால் இருக்கும்.

இப்படி உளுந்தில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. உளுந்தங்களி வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு கொடுத்துவர இடுப்பு எலும்புகள் வலுப்பெறும்.

 

இதை எப்படி செய்வது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.

அரைத்த உளுந்த மாவு – 4 கை அளவு

கருப்பட்டி அல்லது வெல்லம் – சுவைக்கு ஏற்ப (தோராயமாக 200 கிராம்)

தேங்காய் துருவியது – 3 ஸ்பூன் அளவு

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

 

அரிசி மாவு – 4 ஸ்பூன்

செய்முறை

வீட்டில் இட்டிலிக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும் போது வீட்டில் உள்ள நபர்களுக்கு ஏற்ப உளுந்தை கூடுதலாக சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அந்த உளுந்த மாவை புளிக்க வைக்க கூடாது. பிரிட்ஜ்ஜில் வைத்து விட்டு நேரம் கிடைக்கும் போது எடுத்து (உளுந்த மாவை பிரிட்ஜ்ஜில் வைத்த ஒரு நாளைக்குள்) களி தயாரிக்கலாம்.

முதலில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை தேவையான தண்ணீர் சேர்த்து கரைக்கவும். கடாயில் அரைத்த உளுந்த மாவைப் போட்டு சிறிது கூடுதலாக (1/2 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கையால் கலந்து விடவும். அதோடு அரிசி மாவையும் கலந்து விடவும்.

கரைசலை ஒரு முறை நன்கு கலக்கி விடவும். உப்புமா செய்வதற்கு கொதிக்கும் நீரில் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து வட்ட வடிவத்தில் கரண்டியால் சுற்றுவோம் அல்லவா? அது போல் கிண்டவும்.

ஐந்து நிமிடத்தில் நன்கு சேர்ந்து கேசரி பதம் வரும். அப்போது தீயை மிதமாக வைத்து நல்லெண்ணெய் சேர்க்கவும். களி வெந்து டப் டப் என்ற சத்தத்துடன் முட்டை போல் வரும்.

நல்லெண்ணெய் சேர்த்ததும்  அந்த நேரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிண்டி கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசலை வடிகட்டி களியில் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

தேங்காய் துருவல் சேர்த்ததும் கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் சேர்த்ததும் உளுந்தின் பச்சை வாசனை போய் கருப்பட்டி அல்லது வெல்லக் கரைசல் கட்டியானதும் இறக்கிவிடவும். சுவையான உளுந்தங்களியை சாப்பிடலாம்.


Comments


View More

Leave a Comments