பற்றாக்குறை பருவமழை, அதிகரிக்கும் எல்.நினோ விளைவு.. தமிழ்நாட்டுக்கு ஆபத்தா?


2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த பெருமழை கொடுத்த அனுபவங்களில் நாம் இன்னும் பாடம் கற்கவில்லை. அந்த வரலாறு இந்த ஆண்டு மீண்டும் திரும்புகிறது என்பதைத்தான் கடந்த சில மாதங்களாக பருவமழை குறைவு என்ற செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஜூன் மாதம் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் அதிகரிக்கும்போது தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக வெப்பம் குறைவதுதான் இயற்கையின் இயல்பான தன்மை. ஆனால், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஜூன் மாதம் மட்டுமின்றி, ஜூலை, ஆகஸ்ட் மாதம் வரையும் வரலாற்றில் இல்லாத வகையில் கடுமையான வெப்பம் பதிவானது. 1901 ஆம் ஆண்டுதான் இவ்வாறு அதிக வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் கூறுகிறது. அதன் பின்னர் இப்போதுதான் அதிக வெப்பம் பதிவாகி இருக்கிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக நாடு முழுவதும் 254.9 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு 162.7 மி.மீ மழை மட்டுமே பெய்துள்ளது. 

காரணம் என்ன? 

ஆகஸ்ட் மாதத்தில் பருவமழையை கொடுக்கும் monsoon trough எனப்படும் வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் இந்த ஆண்டு வடக்கே இருந்தது. இது மலைப்பகுதிகளில் அதிக மழையைக் கொடுத்தது. ஆனால், சமவெளிப்பகுதிகளில் மழையைத் தரவில்லை. 

Must Read: டெல்டாவில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு… இனி செய்ய வேண்டியது என்ன?

இந்த  monsoon trough தெற்கே மாறும் போது, பருவமழை நிலைமைகள் சுறுசுறுப்பாக இருக்கும். மத்திய இந்தியாவிலும் இந்தியாவின் மேற்கு கடற்கரையிலும் அதிக மழை பெய்யும். இந்தியாவின் தீபகற்பம் முழுவதும் மழை பெய்யும் பருவமழைக்கு இந்த நிலை சிறந்தது.

தென்மேற்கு பருவமழை

மேடன்-ஜூலியன் அலைவு (MJO) என்ற வெப்பமண்டல வளிமண்டலத்தில் பருவகால (30 முதல் 90 நாள் வரை) மாறுபாடு காரணமாக எல் நினோ நிலைமைகள் வலுப்பெறத் தொடங்கியதாலும் வழக்கமான பெய்ய வேண்டிய மழையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்திய வானிலை மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியுள்ளார். 

விளைச்சல் பாதிக்கும் 

சீரற்ற பருவமழையின் தாக்கம் காரணமாக ஜூன் - அக்டோபர் இடையேயான காரீஃப் பருவகால வேளாண் பயிர் விளைச்சலில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25 நிலவரப்படி, ஒட்டுமொத்த காரீஃப் விதைப்பு கடந்த ஆண்டின் அளவை விட அதிகமாக இருந்தது. பருப்பு வகைகள் விதைப்பைப் பொறுத்தவரை குறைவாக இருக்கிறது. 

காரீப் பருவத்தில் விதைப்பு அதிகம் இருந்தபோதிலும், போதுமான மழையின்றி விளைச்சல் குறைந்தால் பலவீனமான உற்பத்தி என்பது உணவுப் பணவீக்கத்தை ஏற்படுத்தும். செப்டம்பரில் போதுமான மழை பெய்யவில்லை என்றால், பயிர்களின் பூ பூக்கும் பருவம் பாதிக்கப்படலாம். இதனால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்படும்.

குறிப்பாக நெல் மற்றும் கரும்பு தவிர எண்ணெய் வித்துக்களின் விளைச்சலும் பாதிக்கப்படும். எனவே 2024ஆம் ஆண்டு பணவீக்கம் சராசரியாக 5.7% என்று மதிப்பிடப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

அணைகளில் நீர்மட்டமும் குறைவு 

ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 40% மழை  பற்றாக்குறை என மதிப்பிடப்பட்டுள்ளது. மழை குறைவு காரணமாக நாடு முழுவதும் உள்ள 150 முக்கிய நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் மட்ட அளவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 23% குறைவாக உள்ளது. 

இப்போது அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீர், கால்நடைகள் மற்றும் ராபி விதைப்புக்கு பயன்படுத்தப்படுவதால், நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மழை அளவு உயர்ந்து நீர்மட்டம் அதிகரிக்கவில்லை எனில் மேலும் சிக்கல்கள் நேரிடும். 

பொருளாதாரத்தை பாதிக்கும் 

ஜூன்-செப்டம்பர் பருவமழை காலத்தில் பெய்யும் மழையானது நாட்டின் வருடாந்திர மழையில் கிட்டத்தட்ட 75% விவசாயத்திற்கும் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிறைவதற்கும் மற்றும் நீர்நிலைகள் நிரப்புவதற்கும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் முக்கியமானது. இந்தியாவின் $3 டிரில்லியன் பொருளாதாரத்தை இயக்குவதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த பருவமழை குறைபாடு என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். 

தமிழ்நாட்டில் மழை பெய்யும் போக்கில் மாற்றம் 

2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு முறையில் பல மாறுபடுகளைக் கொண்டிருந்தது. வடகிழக்கு பருவமழை என்று அழைக்கப்படும் அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில் பெய்யும் மழைதான் தமிழ்நாட்டுக்கு அதிக மழையைத் தருகிறது. 

2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் போதுமான மழை பெய்த து என்பது உண்மைதான். ஆனால், எந்த காலகட்டத்தில் பெய்தது என்பதுதான் கேள்விக்குறி. 

பருவமழை அல்லாத மாதங்களில், அதிக மழை பெய்யும் போக்கு தமிழ்நாட்டில் காணப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022ல் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருந்தது.  தமிழகத்தில் 1,130.6 மிமீ மழை பெய்துள்ளது, இது சாதாரண மழையான 919.8 மிமீ விட 22.9 சதவீதம் அதிகமாகும்.

இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு மாநிலத்திற்கான காலநிலை அறிக்கை: 2022 என்ற மழைப்பொழிவு புள்ளிவிவரங்களைத் தொகுக்கும்போது, தமிழ்நாட்டில் பருவமழை அல்லாத (வடகிழக்கு பருவநிலை காலம்) மாதங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மழை பெய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

பருவமழை காலங்களில் 39 சதவீதம் மட்டுமே மழை பெய்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய போக்காகும்.  அதன்படி அக்டோபர்-டிசம்பர் காலத்தில் (வடகிழக்கு பருவமழை காலம்) அதன் ஆண்டு மழையில் 48 சதவீதத்தை மாநிலம் பெறுகிறது.

பருவமழை பெய்வதில் பற்றாக்குறை

2022 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை மாதங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வழக்கமான 35.70 சதவீத மழைக்கு மாறாக  42.17 சதவீத மழை பெய்தது.  தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய காலங்களிலும், குளிர்காலத்திலும்  மழைப்பொழிவு அதிகரித்து வரும் போக்கை இது காட்டுகிறது. 

 “2022 ஆம் ஆண்டில், பல நாட்களில் 10 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்த மாறுபாடுகள் ஏற்பட்டது,” என பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஜி சுந்தர்ராஜன் தந்தி குழுமத்தின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். 

தமிழ்நாட்டில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. 1901 மற்றும் 2022 க்கு இடையில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0.82 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது, சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 0.51 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.  2012, 2016, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகள் தமிழ்நாட்டில் வெப்பமான ஆண்டுகளாக இருந்தன. .

மதுரை மாவட்டத்தில் குறையும் மழை 

தமிழ்நாடு முழுவதும் மழையின் விநியோகம் தாறுமாறாகி வருவதால், மாவட்ட வாரியாக ஆண்டு மழைப் போக்குகளைப் பார்க்கும்போது 1901-2021 ஆம் ஆண்டுக்கு இடையே மதுரை மாவட்டத்தில் மழைப்பொழிவு கணிசமான அளவு குறைந்துள்ளது. 

Must Read: பேரனுபவத்துடன் நிறைவடைந்த இயற்கை வேளாண்மை பயிற்சி

அதே சமயம் பெரம்பலூரில் மழைப்பொழிவு கணிசமாக உயர்ந்துள்ளது. மற்றொரு வானிலை அறிக்கை தென் மாவட்டத்தில் மழை மேலும் குறையும் என்று கணித்துள்ளது. 2040ம் ஆண்டுக்குள் மதுரையில் ஆண்டு மழை 1 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

எல்.நினோவும் அதன் தாக்கமும் 

எல் நினோ ஏற்கனவே பூமியை பாதிக்கக் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த ஜூன் மாதம் உறுதி செய்துள்ளது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றமாகும். பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமான வெப்பம் ஏற்பட்டால், அதனால் கடும் பாதிப்புகள் ஏற்படும்.

எல்.நினோ விளைவு காரணமா?

எல் நினோ 2024ஆம் ஆண்டு இளவேனிற்காலம் வரை இருக்கக்கூடும் என கருதப்படுவதால், அடுத்த ஆண்டு மிகவும் வெப்பம் மிகுந்த ஆண்டாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடைசியாக 2016 ஆம் ஆண்டு எல் நினோ உருவானது. அதன் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டன.அதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை பதிவானது, காடுகளின் இழப்பு, பவளப்பாறைகள் வெளுத்தல், காட்டுத் தீ, பனிப்பாறை உருகுதல் போன்றவற்றுக்கு 2016ல் உருவான எல் நினோ காரணமாக அமைந்தது.

இந்த வெப்பம் மிகுந்த நீரின் நகர்வு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் வெப்பநிலை உயர்வதற்கு வழி வகுக்கும். அதிக கடல் வெப்பநிலையானது கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மிகவும் உகந்தது. 

தமிழ்நாட்டில்  ஆகஸ்ட் மாதம் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவியதாக வானிலை குறிப்புகள் கூறுகின்றன. அதிக கடல் வெப்ப நிலை காரணமாக கனமழை, வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாது. 

எனவே கடலுக்கு மிக அருகில் இருக்கும் சென்னையில் இன்னொரு பெருமழை என்பது தவிர்க்க முடியாத ஒன்று.  குறுகிய காலத்தில் பெய்யும் கனமழையால் கிடைக்கும் தண்ணீரை சேமிக்கும் வசதி நம்மிடம் இல்லை. இதன் விளைவு மீண்டும் சென்னை மிதக்க வேண்டியதுதான்.அதைத்தவிர நமக்கு வேறு வழிகள் இல்லை. 

-தொகுப்பு; ரமணி 

#DeficientMonsoon #ElNinoEffect #swmonsoon2023 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 
 

Comments


View More

Leave a Comments