இன்னமும் அவிழ்க்கப்படாத சித்த மருத்துவ மூலிகைகள்
பல நாட்களுக்குப் பின்னர் , ஏன் சில வருடங்களுக்குப் பின்னரே கூட இருக்கும். அத்தனை மன நிறைவான கருத்தரங்கு. "சீட் அறக்கட்டளையும் தேசிய சித்த மருத்துவ வாரியமும்" இணைந்து நடத்திய "இன்னமும் அவிழ்க்கப்படாத சித்த மருத்துவ மூலிகைகள்" தலைப்பில் நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்கள் கோலாகலாமாய் நெல்லையில்...
நெல்லை சங்கீத சபா, தன் பொலிவை இழந்த பழைய கட்டடம்தான். நட்சத்திர விடுதி இல்லை. குளிரூட்டப்பட்ட அறையும் கிடையாது. ஆனாலும் காலை 9 முதல் மாலை ஆறு வரை மொத்த கூட்டமும் கருத்தரங்கில் உறைந்தே இருந்தது. உறைய வைத்தது உரைகளின் செறிவும் உண்மைத்தன்மையும்!
Must Read: இயற்கையாவே கொழுப்பை குறைக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
மருத்துவர் மாமல்லன் பெரு மருந்துகளை சித்த மருத்துவ நுணுக்கங்களை பிறழாமல் செய்து மாணவர்க்கு வழிகாட்டும் வித்தகர். சித்தமருத்துவ மூலிகைகள் அதன் 'சுவை வீரிய' அடிப்படையில் எப்படியெல்லாம் வேறுபட்டு பயனளிக்கிறது? என்பதை ஒரு மணி நேரம் தெள்ளத்தெளிவாக பேசி அமர, தேனீ மருத்துவர் சுவாமிநாதன் மூலிகையின் 'சுவை' என்பது வெறும் ஆங்கில 'taste அல்ல' அதையும் தாண்டி, என நவீன மருத்துவ இயங்கியல் அறிவில் தெள்ள தெளிவாக விளக்கிட்டார். சுவாமினாதன் தற்காலத்து சித்த மருத்துவர்களின் மாபெரும் நம்பிக்கை நட்சத்திரம். முக நூலில் அவரது சித்த மருத்துவ விளக்கங்கள் சித்த மருத்துவர்களிடையே பெரும் தெளிவை ஏற்படுத்துவன. நேற்றைக்கு அவர் சுவையில் உச்சம் தொட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாவனாசம் மரு மைக்கேல. ஜெயராஜ் அண்ணன் எங்களின் முன்னோடி. எங்கள் அத்தனை பேரையும் கைபிடித்து அழைத்து சித்த மருத்துவம் கற்றுக்கொடுத்த மூத்தவர். அவரது உரை சித்த மருத்துவ உலகின் மைல்கல். கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் துவக்கி, பொதிகைக்குள்ளும் நெல்லையின் மருத நிலம் வழியே அழைத்துச்சென்றும் ஒவ்வொரு மூலிகையாய் படங்களுடன் விளக்கியது மாணவர்களை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பெந்தமன் ஹூக்கரையும் , தமிழகத்து ஆடு மேய்க்கும் அறிஞரையும் ஒரே புள்ளியில் நிறுத்தி எங்கள் மருத்துவத்தின் துவக்கம் நாட்டார் வழக்காற்றியலில் துவங்க வேண்டும் என உசுப்பி விட்டது எப்போதும் போல் அந்த எளிய பச்சைத்துண்டுக்காரரின் பிரமிப்பூட்டும் உரை.

மதியம் மருத்துவர் அனூபாஸ்டின் மாணவர்களை வேறு உலகிற்கு அழைத்துச் சென்று அனைவரது கண்களை அகல விரிக்கச்செய்தார். அல்ட்ராசவுண்ட் எக்ஸ்ட்ராக்ஷன் முதல் ஜீனோ டாக்சிசிட்டி வரை என்னவெல்லாம் நுட்பமாக மூலிகையில் பார்க்க வேண்டும், நம் ஊர் மூலிகை கப்பலேற வேண்டுமென்றால் களத்தில் எப்படி பணியாற்ற வேண்டும் என்கிற அவரது அறிவியல் மொழி அசத்தலாயிருந்தது.
Must Read: ஆரோக்கியம் அளிக்கும் வேப்பம்பூ காரக்குழம்பு
அடுத்து களமிறங்கிய ஆயுர்வேத மூலிகை மருத்துவர் அஜயன் மூலிகை உனக்கும் எனக்கும் மட்டுமல்ல..இந்த உலகின் ஒவ்வொரு உயிரிக்கும், சூழலின் பன்மயத்தன்மைக்கு ஆலம்பழத்தில் இருந்து அத்தனையும் எப்படி? என மிக தன்மையாக மாணவக் குழந்தைகளுக்கு புரியும்படி விளக்கியது கருத்தரங்கின் சிலாகிப்பு. இறுதி உரை மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட பெரும் மூலிகை கனிகள் பற்றிய உரை. தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜதுரை நேர்த்தியாக அதன் முழு நுட்பங்களையும் பேசி, மாணவர்களே இத்தொகுப்பினை எடுத்துச்செல்லுங்கள் என ஆசிரியனாய் அரவணைத்துச் சொன்னது நெகிழ்வுறச் செய்த ஒன்று.
மொத்தத்தில் கருத்தரங்கு seed அமைப்பிற்கு மிகவும் நிறைவான நாள். கருத்தரங்கின் அத்தனை பேரின் பேச்சும் யூ டியூபில் https://www.youtube.com/channel/UCsGnUg7ix7jRrqBq9NiyYAA/videos ஏற்றப்பட்டு விட்டன . கருத்தரங்கிற்கு வர இயலாதவர்கள் அவசியம் பார்த்து மகிழுங்கள்.
#SiddhaConference #SiddaMedicine #Herbal #SeedTrust

Comments
View More