“தேவலோகத்தில் அமுதம் என்பது பூலோகத்தில் மோரும், மோர் சாதமும்…”


அட வெறும் மோர் சோறு அதில் சிறப்பித்து சொல்ல என்னய்யா இருக்கப் போகிறதுன்னு உங்களில் யாராவது ஒருவர் கேட்டாலும் சத்தியமா அவரது உணவு ரசனை சந்தேகத்திற்குரியதே! அந்த 75 கேஸ்கள் லாக் அப்பிலேயே அடைபட்டு இருக்கட்டும்! சுதந்திரப் பறவைகளாக என்னோடு வெளியே வருபவர்கள் மட்டும் வரலாம். 

தேவலோகத்தில் அமுதம் என்பது பூலோகத்தில் மோர் என்று சொல்லும் அளவிற்கு மோர் ஒரு ஆரோக்யம் மிக்க பானமாகும். ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் தவிர்க்க இயலாதது மோர்! ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருவனிடம் கையில் காசு வந்தால் முதலில் அவன் வாங்குவது மோராகத் தான் இருக்கும்!

Must Read: தினமும் ஒருவேளை சிறுதானிய உணவு சாப்பிட அமைச்சர் அறிவுரை

ஆம்! வெறும் பழைய சோறையே தினமும் உண்பவனுக்குத் தான் தெரியும் மோர் அதில் சேர்ந்தால் ஒரு ஸ்டார் அதில் கூடுமென்று! மோரிலேயே நீர் சேர்க்காமல் திக்காக கடைந்த மோர், பாதி நீர் + தயிர் கலந்த மோர், நீர் மோர், தாளித்த மோர், பச்சை காய்கறிகள் போட்ட மோர், இப்படி மோரின் அவதாரங்கள் more & more.! 

மோர் சாதத்திற்கு எப்போதும் ஊறுகாய் வகைகள் சிறந்த தொடு கறிகளாகும். எலுமிச்சை, மாங்காய், நார்த்தங்காய், பூண்டு, இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், மாகாளிக் கிழங்குன்னு ஒவ்வொரு ஊறுகாயும் மோர் சாதத்திற்கு அபாரமாக இருக்கும்! புளிக்காத மோருக்கு எலுமிச்சை, நார்த்தை சிறந்த இணையாகும். 

புளிப்பான மோருக்கு தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவையும் காரசாரத்திற்கு, பச்சை மிளகாய் ஊறுகாயும் பிரமாதமாக இருக்கும். இதில் தொக்கு எனப்படும் லேகியம் போன்ற ஊறுகாய்களை தொட்டுக் கொள்வது தனி ருசியாகும். நீங்க மாவடு ஊறுகாய் ஊறிய நீரும் மோரும் சங்கமிக்க சோறு சாப்பிட்டதுண்டா?

மோர் சாதம் குறித்த உணவு ரசனை

அதெல்லாம் சொன்னா புரியாதுங்க! அனுபவிக்கணும்னு ஒரு வசனம் வருமே அது போலத்தான்! அபாரமான கறிவிருந்தில் அற்புதமான மட்டன் பிரியாணி சாப்பிட்டதற்கு இணையாகும் இந்த மாவடு மோர் காம்போ! 

அதே போல மோர் சாதத்துடன் வத்தக் குழம்பு, பூண்டு & புளிக் குழம்பு போன்றவற்றை சுண்ட வைத்து.மறுநாள் சாப்பிடுகின்ற வாய்ப்பு கிடைத்தவர் எல்லாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்! பிஞ்சு கத்திரிக்காய், பூண்டு, சுண்டைக் காய், வெண்டைக்காய், கருணைக் கிழங்கு, பிரண்டை போன்றக் குழம்புகளின் ஆயுள் ஒரு நாள் கூடுவது அவை மோர் சோற்றுடன் இணைந்து வாழத்தான் என்றால் அதில் மிகையேதும் இல்லை! 

சைவத்தில் ஊறுகாய்கள், பழைய குழம்புகள் போல மோர் சாதத்திற்கு இருக்கும் அந்தரங்க காதலி துவையல்கள்! பருப்புத் துவையல், இஞ்சி மிளகாய்த் துவையல், எள்ளுத் துவையல், கொள்ளுத் துவையல், புதினா கருவேப்பிலைத் துவையல், கடலைத் துவையல் என ஏராளமான வகைகள் ருசிக்க உள்ளன.

துவையல்களோடு மோர் சாதம் சாப்பிடும் போது மோரும் துவையலும் கலந்த அந்தக் கலவை கிட்டத்தட்ட குழம்பு போல ருசிக்கும்! அப்படியே அசைவம் பக்கம் திரும்பினால் முதலில் நினைவுக்கு வருவது கருவாடு வதக்கல் தான்! வெங்காயம், பச்சை, மிளகாய், தக்காளி, பூண்டு போட்டு வதங்கிய கருவாடு வதக்கலை.

நினைத்தாலே பசிக்குமே! அதே போல கருவாட்டுத் துவையல்கள்! நெத்திலிக் கருவாடு துவையலோடு, உரித்த சின்ன வெங்காயம் (பச்சையாக) வைத்து மோர்சோறு சாப்பிட்டால் நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுவீர்கள் என்பதை நான் உலகின் எம்மத வழிபாட்டுத் தலத்திலும் அடித்து சத்தியம் செய்து சொல்வேன். 

மாசி, விரால், குறவை, திருக்கை, தேளி, அயிரை, சன்னை, சுறா, மசரை, கிழங்கான் போன்ற கருவாட்டு வகைகள் மோர்சோற்றோடு சேர வேண்டும் என்பதற்காகவே கடலில் உருவாகி நிலத்தில் கருவாடாகின்றன! கருவாட்டைத் தொடர்ந்து இதற்கு மீன் குழம்புகளும் நல்ல காம்போவாகும்! அந்த மீன் குழம்பானது.

முதல் நாள் வைத்த மீன் குழம்பு என்னும் ஒரே ஒரு Pass பெற்று இருந்தால் போதும் மோர்சோறு உடனே அதை அனுமதிக்கும்! மீன் குழம்பு அளவிற்கு மட்டன்/சிக்கன் குழம்புகள் பிரமாதம் இல்லை என்றாலும் கறி காரசாரமாக இருந்தால் மோர் சோற்றுக்கு அது நல்ல ஜோடியாகும்! ஈரல் பிரட்டல் மட்டும் இதில் விதிவிலக்கு. 

Must Read:பெங்களூருவில் நல்ல தரமான வெஜ் டிபன் எங்கு சாப்பிடலாம் தெரியுமா?

வதங்கிய கருவாடு போல வதக்கிய ஈரலும், கைமா எனப்படும் கொத்துக்கறியும் மோர் சோற்றிற்கு நண்பர்களாகும். பச்சை மிளகாயுடன் சூடான ஆம்லெட், பெப்பர் எக் மசாலாவும் அப்படியே! போண்டா, வடை, முறுக்கு, மிக்சர், பக்கோடா வகைகளும் மோர் சோறு சாப்பிடும் அனுபவத்தை மிகவும் இனிமையாக்கும். 

சங்க காலம் முதல் இன்று வரை தமிழர்களின் வாழ்வில் இணைந்து வரும் உணவு மோர்! அன்றே களி, கூழ், மா போன்ற உணவு வகைகளுடன் கலந்து உண்ணப்பட்டதாகும். ஊறுகாய் போலவே பலவிதமான வத்தல்களும் மோர் சோற்றிற்கு ஏற்றவையாகும். வத்தல் மிளகாயில் மோர் மிளகாய் என்றே ஒரு வகையுண்டு.

எளிதில் கிடைக்கும் உணவு மட்டுமல்ல மோர்! எளிதில் ஜீரணமாகும் உணவும் கூட! வசதியில்லாதவனும் வசதி படைத்தவனும் தங்கள் விருப்பம் போல சாப்பிடும் ஒரே உணவு மோர். சுருக்கமாகச் சொல்வதெனில் நம்ம ஊரில் விருந்து சாப்பாட்டில் ஓவியத்தில் கண்கள் போல ஃபைனல் டச்சாக ருசிப்பது இந்த மோரைத்தானே.

-வெங்கடேஷ் ஆறுமுகம் 

#curdrice #foodiesreviews #foodreviews 

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments