கண்ணதாசன் மெஸ்சின் வெற்றியின் ரகசியம் சொல்லும் கவிஞரின் மகள் கலைச்செல்வி


சென்னை தியாகராய நகரில் கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்து வந்தார். கவிஞரின் மறைவுக்கு பிறகு அவரது மகள் கலைச்செல்வி தனது தந்தையின் வீட்டிலேயே ஒரு மெஸ் நடத்தி வந்தார். அதுதான் பின்னாளில் கண்ணதாசன் மெஸ் என்று அழைக்கப்பட்டது. இப்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக Kannadhasan Magalin nalabagam என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அண்மையில் ஆரோக்கிய சுவை இணைய இதழுக்காக கவிஞரின் மகள் கலைச்செல்வியிடம் பேசினோம். 

உங்கள் தந்தை ஒரு உணவுப்பிரியர் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம் என்னமாதிரியான உணவுகளை அவர் மிகவும் விரும்பி சாப்பிடுவார்?

அப்பாவுக்கு சைவம், அசைவம் இரண்டு வகையான உணவுகளும் பிடிக்கும். காரைக்குடி உணவுகளை அப்பா விரும்பிச்சாப்பிடுவார். குறிப்பாக வெள்ளைப்பணியாரம் அவருக்குப் பிடித்தமான உணவு. பச்சை முறுக்கு என்ற முறுக்கும் அவருக்குப் பிடித்தமான ஒன்று. 

கண்ணதாசன் மகள் கலைச்செல்வி

முறுக்கு பிழியும்போது முதலில் பிழியும் முறுக்கை உடனடியாக எடுத்து விடுவார்கள்.இதுதான் பச்சை முறுக்கு எனப்படுகிறது. இந்த பச்சை முறுக்கு மென்மையாக அதே நேரம் சுவையாக இருக்கும். இதை அப்பா விரும்பிச்சாப்பிடுவார். இது தவிர இடியாப்பமும் அப்பா மிகவும் விரும்பிச்சாப்பிடுவார். 

எப்போது கண்ணதாசன் பெயரில் மெஸ் தொடங்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது? 

என் கணவர் சொக்கலிங்கம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. எனவே ஒரு தொழில் செய்யலாம் என்று நினைத்தோம். எனக்கு இயல்பாகவே நன்றாக சமைக்கத் தெரியும். என் சமையலை சாப்பிட்டுவிட்டு, நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவதையும் நான் விரும்புவேன். அப்போது, மதியம் சிக்கன் பிரியாணி மட்டும் செய்து விற்க ஆரம்பித்தோம். 

Must Read: கீழ்கட்டளை செட்டிநாடு ஆச்சி மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா?

இப்போது போல அப்போது பிரியாணிக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. எனவே, அதனை நிறுத்தி விட்டோம். பின்னர்  மாலையில் மட்டும் டிபன் ஐட்டங்கள் செய்து விற்க ஆரம்பித்தோம். அப்பா வீட்டுக்குள்ளேயே மெஸ்சை நடத்தினோம். மெஸ்க்கு என அறிவிப்பு பலகை எல்லாம் நாங்கள் வைக்கவில்லை. என்ன மெஸ் என்று கேட்பவர்களுக்கு, கண்ணதாசன் வீட்டுக்குள் இருக்கும் மெஸ் என்று சொல்ல ஆரம்பித்தனர். அதுவே பின்னர் கண்ணதாசன் மெஸ் என்று பெயர் ஆகிவிட்டது. 

மெஸ்ஸுக்கு அப்பாவின் நண்பர்கள் எல்லாம் சாப்பிட வருவார்களா?

அந்த காலகட்டத்தில் தியாகராய நகரில் இருந்த முக்தா சீனிவாசன் எங்கள் மெஸ்ஸுக்கு ஆள் அனுப்பி டிபன் வாங்கி சாப்பிடுவார். அதே போல இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வசந்த் ஆகியோர் அடிக்கடி மாலை நேரத்தில் வந்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இயக்குநர் வசந்துக்கு காரைக்குடி உணவுகள் மிகவும் பிடிக்கும். 

தொடக்கத்தில் என்னென்ன உணவுகள் விற்பனை செய்தீர்கள்? 

தொடக்கத்தில் காரைக்குடி ஸ்டைலில் மதியம் சாப்பாடு போட்டோம்.அந்த காலகட்டத்தில் அதற்கு வரவேற்பு இல்லை. காரைக்குடி மதிய உணவில் காரம், உப்பு எல்லாம் மிதமாக இருக்கும். அந்த சுவை அப்போது மக்களை கவரவில்லை. பின்னர்  இட்லி, தோசை, தாளிச்ச இடியாப்பம் ஆகிய டிபன் வகைகளை வீட்டிலேயே செய்து விற்றோம். 

கண்ணதாசன் மகள் கலைச்செல்வி

 

தினமும் வாடிக்கையாக 15 பேர் வரை வருவார்கள்.  ஓரளவுக்கு வரவேற்பு வந்ததும், அப்பா வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாடகை இடத்தில் மெஸ் நடத்தினோம். அப்போதுதான் மெஸ்ஸுக்கு பாலாஜி மெஸ் என்று பெயர் வைத்தோம். ஆனால், வாடிக்கையாளர்கள் இன்னும் கூட கண்ணதாசன் மெஸ் என்றுதான் சொல்கின்றனர்.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு மெஸ் விற்பனை எப்படி இருக்கிறது?

இப்போது தி.நகர் ராமானுஜம் தெருவில் நானும், எனது மகன் சீனிவாசனும் சேர்ந்து மாலை நேரத்தில் மட்டும்தான் மெஸ் நடத்துகின்றோம். வீட்டில் சாப்பிடுவது போல உணவு வகைகள் உள்ளன என்று வாடிக்கையாளர்கள் சொல்கின்றனர். நமது வீட்டில் எப்படி வயிற்றுக்கு  எந்த பிரச்னையும் வராதபடி சமைப்போமோ அதே முறையில்தான் மெஸ்சில் சமைக்கின்றோம். அஜுனோ மோட்டோ, சோடா மாவு போன்று எதுவும் நாங்கள் கலப்பதில்லை. 

Must Read: #ShortVideo முருங்கை விதையின் பலன்கள்

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. எனினும் எங்களுடைய வழக்கமான பாணியில் தரம் குறையாமல் போதுமான விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றோம். கண்ணதாசன் மெஸில் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒண்ணும் பன்னாதுப்பா என்று வாடிக்கையாளர்கள் சொல்கின்றனர். அதுதான் எங்கள் மெஸ்சின் வெற்றியின் ரகசியம்.

-ரமணி

#KanadasanMess #TNagarKanadasanMess  #KanadasanDaughterKalaiselvi


Comments


View More

Leave a Comments