
கொண்டாட்டம், அறுசுவை உணவை தாண்டி கவனம் பெறும் மொய் விருந்து கலாச்சாரம்..
விருந்து, கொண்டாட்டம் ஆகியவை நமது வாழ்க்கையோடு கலந்து விட்ட நிகழ்வுகளாக மாறி விட்டன. குறிப்பாக திருமண விருந்து நிகழ்வுகளில் விருந்தில் பறிமாறப்படும் உணவுகள், அதன் சுவை காரணமாகவே ஒரு குறிப்பிட்ட திருமணம் குறித்து பல ஆண்டுகளுக்குப் பேசப்படும்.
திருமண நிகழ்வுகளில் மொய் எழுதும் பழக்கம் என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் திருமணத்துக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது போல, மொய் எழுதுவது என்பது நம்முடைய வழக்கமாக இருந்து வருகிறது. கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு 10 ரூபாய் கூட மொய் எழுதுவார்கள். இப்போது நூறு ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் என்றும் மாறியிருக்கிறது. இப்படித்தான் மொய் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
Must Read: கோவை, கரூரில் நடைபெற உள்ள இயற்கை சார் வேளாண் பயிற்சிகள்…
சின்னக்கவுண்டர் என்ற பிரபல தமிழ் படத்தில் படத்தின் நாயகி சுகன்யா தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க மொய் விருந்து நடத்துவதாக ஒரு காட்சி வரும். இதன் மூலம் மொய் விருந்து என்பது பரலாக பலரது கவனம் பெற்றது.
உண்மையிலேயே, தஞ்சாவூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் எல்லையோர கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மொய் விருந்துகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த பகுதி மக்கள் சொல்கின்றனர். வழக்கமாக ஆடி மாத த்தில் இந்த பகுதிகளில் மொய் விருந்து நடத்துவார்கள். 2019ஆம் ஆண்டு இந்த பகுதியில் நடைபெற்ற மொய்விருந்து ஒன்றில் ஒரு டன் ஆட்டுக் கறி சமைத்து பரிமாறப்பட்டது. அந்த மொய் விருந்து வைத்தவருக்கு ரூ. 4 கோடி மொய் பணம் கிடைத்தது.
ஒருமுறை மொய் விருந்து வைத்த நபர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொய் விருந்து வைக்கக் கூடாது. ஐந்து ஆண்டுகள் கடந்தே அந்த நபர் மொய் விருந்து வைக்க முடியும். தனித்தனியாக மொய் விருந்து வைக்கலாம்.
எனினும், ஒவ்வொரு இடத்திலும் 15-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் மொய் விருந்து நடத்துவதும் இந்த பகுதிகளில் வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல ஒவொரு ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மொய் விருந்து நடத்துவதும் வழக்கம் என்று சொல்கிறார்.
15 பேர் ஒன்றாக சேர்ந்து மொய் விருந்து நடத்தினாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் மொய் எழுதுவார்கள். டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தி கஜா புயலுக்கு முன்பு, அதாவது 2017 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் இந்தப் பகுதியில் நடைபெற்ற மொய் விருந்துகளில் ஒட்டு மொத்தமாக சுமார் 500 கோடி வரை மொய் கிடைத்தது.
வழக்கமாக ஆடி மாதத்தில் தொடங்கும் மொய் விருந்து இந்த ஆண்டு ஆனி மாதத்திலேயே தொடங்கி விட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி மொய்விருந்து தொடங்கியது. 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் கலந்துகொண்டோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
தொடர்ந்து சில பகுதிகளில் மொய் விருந்து நடைபெற்று வருகிறது. ஒரு முறை மொய் விருந்து வைத்தவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த விருந்து நடத்த வேண்டும். ஓரே நேரத்தில் பலர் மொய் விருந்து நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகள் உள்ளன.
இத்தகைய மொய் விருந்துக்கு சாப்பிட வருவோர் தங்கள் தகுதிக்கு ஏற்ப 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை மொய் எழுதுகிறார்கள். மொய் விருந்து என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பர்யமாக நடைபெற்று வருகிறது என்று இந்தப் பகுதியை சேர்ந்தோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்
பொருளாதார ரீதியாக நொடித்துப் போனவர்களுக்கு உதவும் நோக்கத்தில்தான் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்று வட்டாரத்தில் இந்த பழக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். நாளடைவில் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களிலும் இத்தகைய மொய்விருந்துகள் நடைபெற்று வருகின்றன.
மொய் மூலம் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கொண்டு தொழில் தொடங்குதல், வீடுகட்டுதல், வாகனங்கள் வாங்குதல், திருமணம் உள்ளிட்ட வீட்டு நிகழ்வுகளை நடத்துதல் என செலவிடுகின்றனர்.
Must Read: சைக்கிளில் இட்லி மாவு விற்கும் மதுரை சகோதரர்கள்…
மொய்விருந்து என்பது நடத்துபவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமின்றி அது சார்ந்து பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன என்று ஊடகங்கள் தகவல்களை பதிவு செய்துள்ளன. குறிப்பாக அழைப்பிதழ் அச்சிடுதல், விநியோகம், சமையல் கலைஞர்கள், மொய் எழுதுவோர் என ஒரு மொய் விருந்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மொய்விருந்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொடுக்கும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களும் வந்து விட்டதாக சொல்கின்றனர்.
கொரோனோ கால வேலை இழப்புகள் காரணமாக நிறைய குடும்பங்கள் இடம் பெயர்ந்து விட்டதால் இப்போது மொய் விருந்துகள் நடைபெறுவது குறைந்து வருகிறது என்கின்றனர். முன்பு ஒருவர் விழா நடத்தினால், 3 லட்ச ரூபாய் மொய் வந்தது என்றால், தற்போது ஒரு லட்ச ரூபாய்தான் கிடைக்கிறது என்றும் ஊடகங்களில் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
-பா.கனீஸ்வரி
#moivirundhu #pudukottaimoivirundhu #moivirundhuculture
Comments