புரதசத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது முக்கியம்…


20ஆம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மருத்துவர்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்தது "Protein Energy Malnutrition"அதாவது குழந்தைகளுக்கு போதுமான அளவு "புரதச்சத்து" கிடைக்கவில்லை. 

நாம் உண்ணும் உணவில் மூன்று மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனும் அன்றாடத்தேவைக்கான ஊட்டச்சத்துகள் உண்டு.  அவை  புரதச்சத்து (Protein) ,  மாவுச்சத்து (Carbohydrates)  கொழுப்புச்சத்து (Fats) ஆகியவையாகும். 

இதில் நமது நாட்டின் கதையை எடுத்துக்கொண்டால் இன்னமும்  பெரும்பாலான குழந்தைகளுக்கு புரதச்சத்து குறைபாடு உள்ளது. இதை Protein energy Malnutrition என்ற பெயர் கொண்டு அழைக்கிறோம். 

நீண்ட நாட்கள்( சில முதல் பல ஆண்டுகள்) தேவையான உணவு கிடைக்காமல் போனால் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை இரண்டுமே பாதிக்கப்படும். இதை stunting என்கிறோம் 

Must Read: #Shorts தோல் அரிப்பை தடுக்கும் சீமை அகத்தி

சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் உயரம் சரியாகவே இருக்கும். எடை மட்டும் குறைவாக இருக்கும். இதை  Wasting என்கிறோம்.  இந்தியா போன்ற கடும் சமூக ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில்  ஒரு பக்கம் புரதச்சத்து குறைபாட்டால் வருடாவருடம்  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் எட்டு லட்சம் பேர் இறந்து வருகின்றனர். 

புரதச் சத்து குறைபாடு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில்  இந்தியா தான் நம்பர் ஒன்னாக இருக்கிறது. (https://www.news18.com/.../with-8-8-lakh-deaths-in-2018...) மறுமுனையில் பல கோடி குழந்தைகள் தினசரி மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸை (Carbohydrates)  மிக அதிகமாக கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

சமீபத்தில் செகுந்தரபாத்தில்  பதினான்கு வயது பெண் குழந்தைக்கு இதய அடைப்பு நோய் (Atherosclerosis) வந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஆஞ்சியோப்ளாஸ்ட்டி (Angioplasty) சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது 

வளர் இளம் குழந்தைகளில்  கல்லீரலில் கொழுப்பு சேரும் நோய் (Non Alcoholic Fatty Liver Disease) அதிகமாகக் காணப்படுகிறது. அதிகமான வளர் இளம் பெண் குழந்தைகள் கருமுட்டை நீர்கட்டி நோயால்(Polycystic ovarian disease)  பாதிக்கப்படுகின்றன 

முன்னொப்போதும் இல்லாத அளவு கர்ப்பபை கட்டிகள்(fibroids) சாக்லேட் சிஸ்ட்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. ஒரு வகுப்பில் ஒரு சில குண்டான குழந்தைகள் இருந்த காலம் இருந்தது. இப்போது சரியான எடையில் உள்ள குழந்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் போல இருக்கிறது. உடல் பருமன் என்பது நோயாக பார்க்கப்பட்ட காலம் போய் இப்போது அது நார்மல் விசயமாகி விட்டது. 

இவையெல்லாம் ஏன் நேர்கின்றன? 

அளவு இல்லாமல்  மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வளர்ப்பதால் மட்டுமே இந்த நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தான் Carbohydrate Excess Malnutrition என்கிறோம். Malnutrition என்றால் ஊட்டச்சத்தை கிரகித்துக்கொள்வதில் ஏற்படும் பிறழ்வுநிலை என்று பொருள். 

தேவைக்குமிகுதியாக எதைக்கொடுத்தாலும் நஞ்சு தானே. நம் பிள்ளை தான். நம் காசு தான். இருந்தாலும் ஒரு வரைமுறை இல்லாமல்  எது கேட்டாலும் வாங்கிக்கொடுப்பது சரியாகுமா? இவர்கள் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்து வைத்ததும்..குழந்தைகள் அந்த இனிப்புக்கு அடிமையாக ஆரம்பித்து அடுத்து கடைக்கு செல்லும் போதெல்லாம் அழுது அடம்பிடித்து  ஊரைக்கூட்டும்.  ஊர்பழிக்கு அஞ்சி குழந்தை செய்யும் பிடிவாதத்துக்கு மடங்கிப்போய் இன்னும் அதிகமாக குப்பை உணவுகளை வாங்கிக்கொடுத்துக்கொண்டே இருப்போம். 

இதனால் ஒருநாளைய தினசரி கலோரி உட்கொள்ளல் அளவுகளில் 90% தேவையை மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்ஸ் மூலம் மட்டுமே அடைவார்கள். இதில் இனிப்பு சுவை தரும் சீனி ( refined carbohydrates) எண்ணெயில் பொரித்த உணவுகள்(Transfat)  என்று உடலுக்கு தீங்கு செய்யும் அத்தனையும் இருக்கும். 

Must Read:ஜனவரி மாதம் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள்…

முன்னொரு காலத்தில் குழந்தை எடை கூட வேண்டும் என்று டாக்டர் டாக்டராக சென்றவர்கள். இப்போது குழந்தை உடல் எடை குறைக்க பல மருத்துவமனைப்படி ஏறுவார்கள். இந்த சிக்கலை இன்னும் அதிகப்படுத்த இருக்கவே இருக்கிறது அதிக பாடச்சுமை தரும் கல்வி முறை விளையாட நேரம் இல்லாத முறையாக இருக்கிறது. 

அதிக மாவுச்சத்து உணவு முறையுடன்  சோம்பல் தனமான உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை சேரும் போது  அது பல்வேறு வாழ்வியல் நோய்களுக்கு வழி வகுக்கிறது  இத்தனை பிரச்சனைகளைக் கொண்டு வரும் மாவுச்சத்து அதிகப்படியான ஊட்டச்சத்து பிறழ்வு நிலையைக் குறித்து நாம் அதிகம் பேச வேண்டும். கட்டாயம் நம் குழந்தைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. 

-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

#CEM  #CarbohydrateExcessMalnutrition   #ProteinEnergyMalnutrition


Comments


View More

Leave a Comments