ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ போனது எப்படி?


தாய்பாலுக்கு இணையாக ஆவின் பாலை கருத வேண்டும். தாய்பாலை போல தூய்மையாக தயாரித்து வழங்குகின்றோம் என்று அடிக்கடி ஆவின் அதிகாரிகள் சொல்வதுண்டு. ஆனால், ஆவினில் அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

மதுரையில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கடந்த 21ம் தேதி வழக்கம் போல பெண் ஒருவர் அங்கிருந்த மளிகைக் கடையில் அரைலிட்டர் ஆவின் பால்(நிலைப்படுத்தப்பட்டபால்) வாங்கினார். வாங்கி வீட்டுக்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பால் பாக்கெட்டில் ஈ மிதப்பது தெரிந்தது. இதையடுத்து பாக்கெட்டை பிரிக்காமல் அப்படியே கொண்டு வந்து கடைக்காரரிடம் கொடுத்து விட்டார். 

Must Read:ரெடிமேட் இட்லி, தோசை மாவு பாக்கெட்கள் ஆரோக்கியமானதா?

சம்பந்தப்பட்ட கடைக்காரர் இது குறித்து தான் ஆவின் பால் வாங்கிய விநியோகஸ்தருக்கு தகவல் தெரிவித்து விட்டார். விநியோகஸ்தர் தரப்பில் இருந்து ஆவின் நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை இது போன்ற சம்பவம் நடந்திராத நிலையில் இது குறித்து மதுரை ஆவின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். 

அதிகாரிகளின் விசாரணையை அடுத்து நாகமலை புதுக்கோட்டைக்கு அனுப்பப்பட்ட லாரியில் எப்போது பாக்கெட்கள் ஏற்றப்பட்டன. எந்த நேரத்தில் பாக்கெட்கள் தயாரிக்கப்பட்டன என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பாக்கெட்கள் தயாரிக்கும்போது தொடர்புடைய ஷிப்டில் பணியாற்றிய நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. 

 

ஆவின் பால் பாக்கெட்டில் செத்து மிதந்த ஈ

 

விசாரணையின் போது ஆவின் பால்பாக்கெட்களை இறுதியாக சோதனை செய்யும் பொறுப்பில் அலட்சியமாக ஈடுபட்டதாக கூறி  மதுரை ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.ஒபந்த நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்ட காலி பிளாஸ்டிக் பவுச்களில் பால் அடைக்கப்பட்டு, பின்னர் அது ஸ்டிச் செய்யப்பட்டு இறுதியாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

Must Read: மழைகாலத்துக்கு ஏற்றதாக எந்த உணவு வகைகளை சாப்பிடலாம் தெரியுமா?

எனவே, பெங்களூரை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் சப்ளை செய்த காலி பிளாஸ்டிக் பவுச்களில் ஈ இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தனியார் நிறுவனத்துக்கு  ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசின் நம்பகத்தன்மை வாய்ந்த ஆவின் நிறுவனத்தில் இனி இது போன்ற தவறுகள் நடைபெறக் கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-பா.கனீஸ்வரி

#FlyInAavinPacket   #FlyInAavinMilk  #DeadFlyInAvinMilk


Comments


View More

Leave a Comments