
ரெடிமேட் இட்லி, தோசை மாவு பாக்கெட்கள் ஆரோக்கியமானதா?
கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் ரெடிமேட் தோசை மாவு, இட்லி மாவு வாங்கி எளிதாக வேலையை முடிப்பதை விட்டு விட்டு, அரிசியை ஊறவைத்து அதை கிரைண்டரில் அரைத்து என மிகவும் கஷ்டப்பட்டு உணவு தயாரிக்க வேண்டுமா? என்ற அலுப்பும், சலிப்பும் பலருக்கு ஏற்பட்டுவிட்டது.
மேலும் இப்போதைய அவசர காலகட்டத்தில் சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அப்படி இருக்கும்போது எப்படி அரிசி ஊற வைத்து அதனை இரண்டு மணி நேரம் செலவழித்து கிரைண்டரில் ஆட்டி எடுத்து வைப்பது என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவசரம் என்ற ரீதியில் நாம் மேற்கொள்ளும் பழக்கம் நல்லதா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பாக்கெட்களில் விற்கப்படும் இட்லி, தோசை மாவுகள் ஆரோக்கியமானதா? என்ற கேள்வியும் நமக்கு ஏற்படுகிறது. பாக்கெட்களில் விற்பனை செய்வது மட்டுமின்றி, தெருவுக்கு தெரு பலர் சிறுதொழில்களாக மாவு அரைத்தும் விற்பனை செய்கின்றனர்.
Must Read: மழைகாலத்துக்கு ஏற்றதாக எந்த உணவு வகைகளை சாப்பிடலாம் தெரியுமா?
அசரகதியில் இயங்கும் உலகில், ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்லும் கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த பாக்கெட் மாவுகள்தான் வரமாக இருக்கின்றன. இட்லி, தோசை மாவு என்பது தரமாகத் தயாரிக்கப்பட வேண்டும். மாவு தயாரிப்பதற்கு முன்பு அதற்கு தேவையான அரிசி, உளுந்து ஆகியவற்றை சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும். உப்பு தண்ணீர் அல்லது ஏதோ ஒரு தண்ணீரில் ஊற வைக்கக் கூடாது. ஆனால், குடிப்பதற்கே நல்ல தண்ணீர் கிடைக்காத இந்த நாட்களில் மாவு அரைப்பவர்கள், தங்கள் வீட்டு போர்வெல்லில் இருந்து கிடைக்கும் உப்பு தண்ணியையே பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
கடைகளிலும் அப்படித்தான் செய்வதும் வழக்கம். இது தவிர மாவு வெள்ளையாக, பஞ்சுபோல இருக்க வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு, ப்ளீச்சிங்க் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகிறது. அரைத்த மாவை உடனடியாகப் பயன்படுத்துவதற்கு ஈஸ்ட் கலந்து புளிக்க வைக்கப்படுகிறது.
இப்படி தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளும், முதியவர்களும் உடனடியாகப் பாதிக்கப்படுவார்கள். நீரின் மூலம் பரவும் டைபாய்டு, காலரா போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. செரிமானக்கோளாறு, வயிற்று வலி போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர், “தோசை, இட்லி மாவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாலும், புளிக்க வைக்க சேர்க்கப்படும் ஈஸ்ட் போன்ற பொருட்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
உணவுப் பாதுகாப்புத்துறை அவ்வப்போது ரெய்டு நடத்தி மாவு தயாரிப்பவர்களை எச்சரிக்கை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போது சிறுதொழில் போல வளர்ந்துவிட்டதால், வாழ்வாதாரத்துக்காக செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற எண்ணமும் அதிகாரிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
Must Read: ராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
தமிழகத்தில் உணவுப் பொருட்களை சோதனை நடத்த சில ஆய்வங்கள் மட்டுமே இருக்கின்றன. மாவட்டத்துக்கு ஒரு ஆய்வகம் வீதம் வைக்கப்பட்டால், உணவுப்பொருட்களை அவ்வப்போது சோதனை செய்து நடவடிக்கை எடுக்க முடியும். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையின்போது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், பெரும்பாலும் எச்சரிக்கை செய்து அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை” என்றார்.
#ReadyMadeDosaBatter #ReadyMadeIdliDosaMavu #ReadyMadeDosaFlour
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments